Friday, March 15, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
மஹா பாரதம்

''உத்தரா ஓடாதே நில்....

'' என்னை அழைத்தீர்களாமே இளவரசி?'' என்றான் அர்ஜுனன் பவ்யமாக பெண்மையோடு.

''ப்ரஹன்னளா, உனக்கு விஷயம் தெரியாது நினைக்கிறேன். கௌரவர்கள் பெரும் படையோடு வந்து நமது பசுக்கள் கன்றுகள்,கால் நடைகள் அனைத்தையும் கவர்ந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இளவரசன் உத்தரன் அவர்களோடு போரிட கிளம்பிவிட்டான். நீங்கள் அவனுக்கு தேரோட்ட வேண்டும். சைரந்திரி உங்களுக்கு அர்ஜுனன் தேரோட்டியாக அனுபவம் உண்டு என்பதால் நன்றாக தேரோட்ட தெரியும். உங்களை அழைத்து போகலாம் என்றதால் நான் கூட்டிப்போக வந்தேன்'' என்றாள் .

''ஆஹா உத்தரவு இளவரசி. ஏதோ என்னால் முடிந்ததை செய்து உதவுகிறேன்''
வேண்டுமென்றே கவசங்களை தப்பாக மாட்டிக்கொண்டும், வில் அம்புகளை தவறாக பிடித்துக்கொண்டும் நடித்தான் அர்ஜுனன். எல்லோரும் சிரித்தனர். உத்தரன் '' உனக்கு இது கூட தெரியவில்லை. உன்னை தேரோட்ட நான் கூப்பிட்டதற்கு என்ன தண்டனை கிடைக்குமோ. இதெல்லாம் சரியாக இப்படி அணியவேண்டும் என்று கவசம், அங்கிகள், அம்பரா துணிகள், இடுப்பில் ஆயுதங்கள் எல்லாம் அர்ஜுனனுக்கு மாட்டிவிட்டான். ஒரு வில்லையும் அவனுக்கு அளித்தான். நீ பயப்படாமல் தேரோட்டு, உன்னையும் காப்பாற்றி நான் எதிரிகளையம் ஒரு கை பார்த்துக் கொள்கிறேன்'' என்று வீர வசனம் பேசினான் உத்தரன்.

தேர் கிளம்பும் போது உத்சாகமாக உத்தரை ''ப்ரிஹன்னளா, வெற்றியுடன் வா. வரும்போது பீஷ்மர், துரோணர், கர்ணன் துரியோதனன் ஆகியோரின் வஸ்த்ரங்கள் எல்லாம் எடுத்து வா. நமது பொம்மைகளுக்கு அலங்காரம் செய்வோம் '' என்று சொல்லி அனுப்பினாள் .

அர்ஜுனனும், 'இளவரசர் உத்தரன் வீரமாக போரிட்டு அவர்களை வென்றால் நான் நிச்சயம் நீ கேட்டவற்றை கொண்டுவருவேன் '' என்றான்.

அர்ஜுனன் விரைவாக தேரை செலுத்தினான். கௌரவ மாபெரும் சேனையை பார்த்து விட்டான். உடனே தேரை மயான பூமி பக்கம் செலுத்தினான்.

உத்தரன் பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன், கிருபர், அஸ்வத்தாமா ஆகிய மாபெரும் மகா ரதர்கள் நிரம்பிய சைன்யத்தை பார்த்ததும் பேச்சு மூச்சு இல்லாதவனாகி விட்டான். இம்மாபெரும் சேனையை உடைத்து உள்ளே சென்று ஆனிரையை மீட்பது என்பது இந்த ஜென்மத்தில் நம்மால் இயலாத காரியம் என்று தோன்றியது. வியர்த்து உடல் நடுங்கியது.

''பிரஹன்நாளா உடனே தேரை திருப்பு. உயிர் தப்பி அரண்மனைக்கு சென்று விடுவோம்.என் தந்தை விராடன், அனைத்து சேனையையும் த்ரிகர்த்தர்களை எதிர்க்க கொண்டு சென்று விட்டாரே. நான் ஒருவனாக எப்படி இந்த மா பெரும் சைன்யத்தை எதிர் கொள்ள முடியும்? அது முட்டாள் தனம். வா பேசாமல் திரும்பி போய்விடலாம் ''

''ஏன் பதறுகிறீர்கள் இளவரசே, நீங்கள் தானே என்னிடம் தேரை கௌரவர்கள் முன்னால் கொண்டு நிறுத்து என்று சொன்னது. 'இன்னும் சற்று நேரத்தில் கௌரவ சேனைத் தலைவர் பீஷ்மர் முன்பு தேரைக் கொண்டு நிறுத்துகிறேன். இப்போது நீங்கள் பயந்து பின்வாங்கினால் எல்லோரும் ஏளனம் செய்வார்கள். பெண்கள் ஆண்கள் அனைவர் முன்னே யம் வீரனாக காட்டிக்கொண்டு இப்படி செய்தால் அவமானம் அல்லவா. என்னைப் பொறுத்தவரையில் சைரந்தரி என் மேல் நம்பிக்கையோடு அல்லவா உங்களோடு அனுப்பினாள் , உங்கள் சகோதரி உத்தரா கேட்டவாறே எதிரே காணும் எதிரி தலைவர்கள் அத்தனை பேரின் வஸ்த்ரத்தோடும் கிரீடங்களோடும் தான் நாம் திரும்பவேண்டும்.''

''ஐயோ உனக்கு என்ன பைத்தியமா, இந்த மத்ஸ்ய தேசமே வேண்டாம், ஆநிரைகள் போனால் போகட்டும். எல்லோரும் சிரித்தாலும் பரவாயில்லை. நான் உயிரோடு திரும்பவேண்டும் அதுவே முக்கியம்''.

வில்லையும் அம்பையும் கீழே போட்டு தேரிலிருந்து குதித்து ஓடிய உத்தரனை பின் தொடர்ந்து அர்ஜுனன் ஓடினான்'' போரில் உயிரிழந்தால் தான் ஒரு க்ஷத்ரியனுக்கு கௌரவம். உத்தரா இப்படி ஓடாதே நில்.''

எதிர்க்க வந்த விராட தேசத்தின் தேரில் இருந்தவன் குதித்து வில்லைப் போட்டு விட்டு ஓடுவதையும, தேரோட்டிய பெண் விழுந்தடித்துக்கொண்டு அவன் பின்னே ஓடுவதையும் பார்த்து கௌரவ வீரர்கள் சிரித்தனர்.

தேரோட்டியாக ஓடியவள் ஆணாகவோ பெண்ணாகவோ தெரியவில்லையே. அவள் உயரம் தலை அசைப்பு, கை கால் ஜாடை எல்லாம் அர்ஜுனன் சாயலாக இருக்கிறதே. பின் ஏன் ஓடுகிறான். அர்ஜுனனாக இருந்தால் ஓடுபவன் அல்லவே. உத்தரனை அழைத்து வர தான் செல்கிறான்'' என்று சந்தேகத்தில் இருந்தனர் கௌரவர்கள்.

அர்ஜுனன் உத்தரன் முடியைப் பிடித்து நிறுத்தினான்.

''ப்ரிஹன்னளா , என்னை விட்டு விடு. உனக்கு நிறைய பொற்காசுகள் தேர், வைரம் எல்லாம் தருகிறேன். என்னை திரும்பி போக விடு''

''சரி நீ போரிட வேண்டாம். வந்து இந்த குதிரைகளை அடக்கி தேரை செலுத்து நான் போரிடுகிறேன்'. துளியும் உனக்கு பயம் வேண்டாம். உன்னையும் காத்து எதிரிகளையும் முறியடித்து ஆநிரைகளையும் மீட்டு வெற்றியோடு அவர்கள் வஸ்த்ரங்களோடு என்னால் திரும்பமுடியும். வா. பயப்படாதே. வீர க்ஷத்திர ராஜகுமாரனே. நான் சொல்வதைச் செய்தால் மட்டும் போதும் ''

''தேரை முதலில் அதோ அந்த வன்னி மரத்தருகே செலுத்து.'

இதற்குள் பீஷ்மர் ஓடும் அந்த தேரோட்டி அர்ஜுனனே என்று புரிந்து கொண்டார். துரோணரும் அவ்வாறே தீர்மானிக்கவே துரியோதனன் மகிழ்ந்தான். என் திட்டம் வெற்றியடைந்தது. பாண்டவர்களை அடையாளம் கண்டுகொண்டோம். அவர்கள் மீண்டும் வனவாசம் பதிமூன்று ஆண்டுகள் செல்லவேண்டும் என்று மகிழ்ந்து ஹா ஹா என சிரித்தான்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...