Wednesday, March 27, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்     J K SIVAN 
மஹா பாரதம்                                                                                                                                
                                                                                                             
                                                     ''நானா,  என் சைன்யமா?''

மஹா பாரதம் முழுக்க முழுக்க ஒரு   தேன்  பாகு.  அதன் எந்த சம்பவமும் நமது மனத்தைக் கவர்ந்து இழுக்க கூடிய சக்தி கொண்டது. இதில் யாருக்காவது சந்தேகம் இருக்க வாய்ப்பு உண்டா?

 துருபதன்  தனது குருவான  அந்த பிராமணரிடம் தக்கவாறு உபதேசம் செய்து தான் ஹஸ்தினாபுரத்துக்கு  தூது  அனுப்பி வைத்தான்.

'' உலகத்தின் அனைத்து பொருள்களிலும் ஜீவனுள்ளவை சிறந்தவை. 
ஜீவனுள்ளவற்றில் அறிவுள்ளவை சிறந்தவை. 
அறிவுள்ளற்றில் மனிதன் சிறந்தவன். 
மனிதரில் வேதம் பயின்றவன் சிறந்தவன். 
வேதம் பயின்றாலும் அவற்றை பொருள் அறிந்து அதன் படி நடப்பவன் சிறந்தவன். 
வேத நெறிப்படி நடந்தாலும் பிரம்மத்தை உணர்ந்தவன் சிறந்தவன்.  
பிராமணரே  நீங்கள்  அவர்களில் சிறந்தவர்''   என்று துருபதன் தனது குருவான அந்த பிராமணரை போற்றினான்.

 திருதராஷ்டிரன் துரியோதனனின் சதி தெரிந்து  யுதிஷ்டிரனை  சூதாட அழைத்தான். இது தெரிந்தும் பெரியோரின் வாக்கை மீறக்கூடாது என்று பணிந்து தோற்போம் என்று தெரிந்தும் வேறு வழியின்றி யுதிஷ்டிரன் ஒப்புக்கொண்டான். நீங்கள்   ஹஸ்தினாபுரத்தில் பீஷ்மர், துரோணர், விதுரன்  ஆகியோரிடத்தில் இதை எடுத்துச் சொல்லி அவர்கள் உங்கள் பக்க நியாயத்தை உணர வைக்கவேண்டும்.   விதுரன், பீஷ்ம துரோணர்கள் ஆகியோர்  நீங்கள்  சொல்லும் நியாயத்தை உணர்ந்தால் கௌரவர் பலம் உடையும். அவர்களை துரியோதனன் முழு மனதோடு தனக்கு சாதகமாக்கும் முயற்சியில் ஈடுபட வைக்க வெகு  நாளாகும், அந்த நேரத்தில் பாண்டவர்கள்  சேனா பலத்தை விருத்தி செய்து கொண்டு யுத்தத்திற்கு ஆயத்தமாக நேரமும் இருக்கும்.  இந்த நேரம் துரியோதனனுக்கு  வீணாகி பெரியோர்களை மீண்டும் தனக்கு சாதகமாக்கும் நேரத்தில் செலவாகும்.   எனவே  நீங்கள் கௌரவர்களால் பாண்டவர்கள் அனுபவித்த இன்னல்களை விலாவாரியாக  எடுத்துச் சொன்னால்  சபையோர் மனம் நெகிழட்டும். அது நமக்கு பலத்தை கூட்டும்.''
இவ்வாறு  கற்பிக்கப் பட்ட  பிராமணன்  ஹஸ்தினாபுரம் சென்றடைந்தான்.

இதற்குள்  அனைத்து  நண்பர்களுக்கும் சேதி சொல்லி  பாண்டவர்கள் சாரணர்களை அனுப்பினார்கள்.  போஜர்கள்,வ்ரிஷ்ணி  குலத்தவர், அந்தகர்கள், யாதவர்கள், அனர்த்தர்கள், ஆகியோரை நேரில் சந்தித்து  அவர்கள் ஆதரவு திரட்ட  அர்ஜுனனே  தானே  துவாரகை சென்றான்.  பாண்டவர்கள் அனைத்து செயலையும் ஒற்றர்கள் மூலம் கண்காணித்து வந்த துரியோதனன், அர்ஜுனனுக்கு முன்பாக   வெகு வேகமாக  தானே  கிருஷ்ணனை காண தேரில் பறந்து சென்று  அர்ஜுனனுக்கு முன்பாக  துவாரகை அடைந்தான்.

அதிசயமாக   துரியோதனன் அர்ஜுனன் இருவருமே  ஒரே நேரத்தில் கிருஷ்ணனைக் காண துவாரகையில் கிருஷ்ணன் அரண்மனையில் கூடினார்கள்.
அவர்கள் சென்ற நேரம்  கிருஷ்ணன்  அரண்மனையில்  சயனத்தில் இருந்தான். கிருஷ்ணனுக்கு நெருங்கியவர்கள் என்பதால்  இருவருமே அவனது சயன அறைக்கே   நேராக சென்றுவிட்டார்கள்.  அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணன் படுக்கை அருகே  தலை மாட்டில்  ஒரு  ஆசனத்தில் துர்யோதனன் அமர்ந்து கொண்டான்.  அர்ஜுனன்  கிருஷ்ணன்  கால்  மாட்டில்  கை கட்டி  தலை வணங்கி நின்று கொண்டிருந்தான்.    துரியோதனனை நேரில் அருகே  கண்டபோது அர்ஜுனன் கோபம் பொங்கி எழுந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு  அடக்கிக்கொண்டான்.

 சற்று நேரத்தில் கிருஷ்ணன்  தூக்கம் கலைந்து கண் விழித்தபோது அவனுக்கு நேரே  கண்ணெதிரே,  கால் அருகே  அர்ஜுனன்  கை கட்டி வணங்கி நின்றது  தான் முதலில்  கண்ணில் பட்டது.

துரியோதனன்  கனைத்த  குரல் கேட்டு  கழுத்தை திருப்பிபார்த்த  கிருஷ்ணன் துரியோதனன் ஒரு ஆசனத்தில் தனது தலை மாட்டில் அமர்ந்திருப்பதையும் பார்த்தான்.

''அட, என்ன ஆச்சர்யம்,  என் நண்பர்கள் இருவரும் ஒரே சமயம் என்னைக்காண  வந்திருக்கிறீர்கள். ஊரில் எல்லோரும் நலமா? என்று குசலம் விசாரித்த பிறகு,  'ஏதாவது காரணத்தோடு வந்திருந்தால் சொல்லவும்.'' என்றான்.

அர்ஜுனன் பேசாமல் இருக்க,  துரியோதனன் முதலில் வாய் திறந்தான்

'' கிருஷ்ணா,  உங்கள்  யாதவ,  விருஷ்ணி குல அனைவரின்  உதவி  இனி வரப்போகும் யுத்தத்தில் கௌரவ சைன்யத்துக்கு  ஆதரவாக வேண்டும். நானும் அர்ஜுனனும் உன் நண்பர்கள். நீயும் எங்களிடம் பாசமும் நட்பும்  உள்ளவன் தானே.  உன்னைக் காண  நான் தான் முதலிலேயே வந்து இங்கு காத்திருந்தவன். நமது சாஸ்திர சம்ப்ரதாயப்படி  முதலில் வந்தவருக்கு தான் எப்போதுமே சலுகை. எனவே என் கோரிக்கை  ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்''.
என்றான் துரியோதனன்.

''ஆஹா,   துரியோதனா,  நீ  வெகு நியாயமாக  சொல்லி விட்டாய். வாஸ்தவம்.   நீ  சாஸ்திரம் சம்ப்ரதாயம் எல்லாம் அறிந்தவன் அவற்றை கடைப்பிடிப்பவன் ....  இதில் சந்தேகமே இல்லை.   நீ முதலில் இங்கு வந்திருந்தாலும் நான் கண் விழித்த போது  இங்கு முதலில்  என் கண்ணில் பட்டவன் நீ யல்ல. அர்ஜுனன் தானே.  எனினும்  முதலில் வந்தவன் என்பதால் உனக்கும்,  முதலில் பார்த்தவன்  என்பதால் பார்த்தனுக்கும்  நான்  உதவ கடமைப் பட்டுள்ளேனே . இருவருக்குமே  ஒருவன் எப்படி உதவ முடியும். எனவே,  துரியோதனா,   நீ  குறிப்பிட்ட  சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களில்,  இளையவர்களைத்தான் முதலில் கவனிக்க வேண்டும்  என்று இருக்கிறது என்பது உனக்கே தெரியும். எனவே  அர்ஜுனன்  விருப்பம்  தான் முதலில் கவனிக்கப் பட வேண்டியுள்ளது.''   என்றான்  சிரித்துக்கொண்டே கிருஷ்ணன்.

''எங்கள் ராஜ்யத்தில் பத்து கோடி யாதவர்கள் , நாராயண சைன்யம் என்ற பெயரோடு  இருக்கிறார்கள்.  எவரும் வெல்ல முடியாதவர்கள். இதைத் தவிர  வேறொன்றும் இல்லை. என்னை த்தவிர.  நான் இருவருக்கும் வேண்டியவன் என்பதால்  ஆயுதம் எடுத்து ஒருவருக்காக இன்னொருவரை எதிர்க்க முடியாது.     ஒருவருக்காக மற்றவரை  எதிரியாக கருதமுடியாது.  யுத்தத்தில் ஆயுதம் தாங்கி  பங்கேற்காத நான் ஒருவர் பக்கம்,   எனது முழு சைன்யம் மறு பக்கம், என்று இரண்டாக பிரித்து யாருக்கு எது வேண்டுமோ உங்களுக்கு  அளித்து  உதவ முடியும். வேறு வழியில்லையே.

'' இளைஞன் என்பதால் உனக்கே  முதல் உரிமை தருகிறேன்.  அர்ஜுனா,  நான் சொன்ன  இரண்டில், அதாவது என்னுடைய முழு நாராயண சைன்யம் வேண்டுமா,  ஆயுதம் தாங்காத  வெற்று ஆளாக நான் மட்டும் வேண்டுமா, எதை நீ அடைய விரும்புகிறாய் என்று சொல். அது உனக்கு கிடைக்கும் ''  என்றான் கிருஷ்ணன்.    இதை கிருஷ்ணன் சொன்னபோது  அவன் மனதில்  மின்னல்களாக எண்ணங்கள்  கவலையோடும், எதிர்பார்ப்போடும் ஓடின. அர்ஜுனன்  சரியானதை  தேர்ந்தெடுக்கவேண்டுமீ?  நிச்சயம் அவன் புத்திசாலி சரியானதை தான்  கேட்பான்,  பார்க்கலாம்  என்று ஒரு சமாதானமும் உள்ளே கிருஷ்ணனை  அமைதி பெற செய்தது.
துரியோதனன்  பயத்தோடும், கவலையோடும்  அர்ஜுனன்  என்ன கேட்கப்போகிறான் என்று கவனித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு  உடல் நடுங்கியது. வியர்வை ஆறாக பெருகியது. உதடு துடித்தது. கைகள் லேசாக ஆடின.

அர்ஜுனன்  ஒரு கணம்  துரியோதனனை பார்த்தான், கிருஷ்ணனை   ஏறிட்டு பார்த்தான். கண்கள் கிருஷ்ணனை  முழுதாக உள்  வாங்கின.   அடுத்த கணமே  மறு யோசனை இன்றி, ''கிருஷ்ணா, எனக்கு  நீ ஒருவன் மட்டுமே  போதும். எனக்கு எந்த சைன்யமும் வேண்டாம்'' என்று மனம் இனிக்க கை கூப்பி  அர்ஜுனன் தனது விருப்பத்தை தெரிவித்தான்.
காற்று  பலமாக சாளரம் வழியாக நுழைந்தது.  .மலர்கள் வாசம் கம்மென்று  அந்த  அறையில்  வீசியது.

''அப்பாடா ''  என்று  துரியோதனன் ஒரு திருப்திப் பெருமூச்சு விட்டான்.  எங்கே  நாராயண  சைன்யத்தை அர்ஜுனன் பெற்று விடுவானோ என்ற கவலை அவனை அரித்துக் கொண்டிருந்ததே.  ''முட்டாள் அர்ஜுனன் '' என்று மனம் மகிழ்ந்து நாராயண சைன்யத்தை பெற்றுக்கொண்டான் துரியோதனன்.

துரியோதனன் அடுத்து  பலராமனை சந்தித்து  அவரது  உதவியை கௌரவ சேனைக்கு கேட்டபோது '' துரியோதனா, உனக்கு தெரியும், எனது எண்ணங்களும் கிருஷ்ணனின் எண்ணங்களும் சற்றே வேறுபட்டாலும், கிருஷ்ணனின் உறவு தானே எனக்கும் , உனக்கும், பாண்டவர்களுக்கும்.   கிருஷ்ணனின் முடிவை அறிந்தேன். அவன் முடிவே சரியானது.  நானும்  உங்கள் இருவரில் ஒருவருக்கு சகாயமாக இருந்து மற்றவர்க்கு தீங்கு விளைவிக்க மாட்டேன். எனவே  இந்த யுத்தத்தில்  நான் இருவரையுமே  புறக்கணிப்பேன்''.  எங்கள் சைன்யம் தான் உன் கௌரவ சேனையோடு சேர்ந்து விடுமே.

துரியோதனனுக்கு  உள்ளுக்குள்ளே  மகிழ்ச்சி.  ''நல்லவேளை,  எனக்கு உதவா விட்டாலும் பலராமனின் பலம் பாண்டவர்களுக்கு கிடையாதே''.

துரியோதனன்  அடுத்து க்ரித வர்மனைச் சந்தித்தான். கௌரவ சைன்யத்துக்கு ஆதரவாக ஒரு அக்ஷௌணி  சேனை தருவதாக  கிருதவர்மம்  வாக்களித்து  அதை துரியோதனன்   பெற்றான்.  சந்தோஷமாக  வெற்றிபெற்ற  மகிழ்ச்சியோடு  ஹஸ்தினாபுரம் திரும்பினான்.

துரியோதனன் சென்ற பிறகும் அர்ஜுனன்   கிருஷ்ணனோடு  துவாரகை அரண்மனையில்  இருந்தான்.  அப்போது கிருஷ்ணன்   ''அர்ஜுனா,  ஒரு வேளை  நீ அசட்டுத் தனமாக நடந்து கொண்டாயோ என்று தோன்றுகிறது.  யாராவது  பத்து கோடி யாதவர்கள் பலம் கொண்ட, யாராலும் வெல்ல முடியாத , நாராயண சேனையை வலுவில் வந்தாலும் வேண்டாமென்று  தள்ளுவார்களா?  ஒரு உபயோகமுமில்லாத, ஆயுதம்  எடுக்காத,  எந்த பக்கமும் யுத்தத்தில் பங்கு கொள்ளாத என்னைப் போய் எதற்கு தேர்ந்தெடுத்தாய்? என்ன காரணம் சொல் ?''  என்றான் கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே.    
''கிருஷ்ணா, உன் சக்தியும், வீரமும்   அதே சமயம்  உங்கள்  யாதவ விருஷ்ணி குல நாராயண  சேனையின் பலமும் எனக்கு நன்றாக தெரியும்.  நான் ஒருவனே  அவர்களை எதிர்த்து கொல்ல  முடியும் என்ற நம்பிக்கை  எனக்கு இருக்கிறது.  நீ  ஒரு அசாதாரணன். ஒப்பில்லாதவன். மனிதர்களுள் ஸ்ரேஷ்டன் .    இந்த பெருமை உன்னோடு இருக்கும்போது எனக்கு எதற்கு இதர சேனை?   .  நீ  என்னோடு இருக்கிறாய்  என்ற  இந்த  எண்ணம்  நம்பிக்கை  ஒன்றே எனக்கு அதிக  பலம் தரும். .  நீ என் முன்னே அமர்ந்து வழி காட்டி  தேரை செலுத்தும்  உதவி ஒன்றே எனக்கு போதும் என்பது தான்  நான் உன்னைமட்டும் வேண்டும் என்று கேட்ட காரணம்''  என்றான் மனப்பூர்வமாக  அர்ஜுனன்.

''அடேடே, அர்ஜுனா, உன் பலமெல்லாம் என் மேல் போட்டு பேசிவிட்டாயே. என் மீது அவ்வளவு நம்பிக்கையா உனக்கு.  நிச்சயம் உனக்கு நான்  தேரோட்டுகிறேன். உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்.போதுமா?'' என்றான் சிரித்துக்கொண்டே  கிருஷ்ணன். அவனை ஆரத்தழுவினான்  அர்ஜுனன்.

''நன்றி  கிருஷ்ணா'' என்று ஆனந்த பாஷ்பத்தொடு  கிருஷ்ணனை வணங்கி  அர்ஜுனன்  யுதிஷ்டிரரிடம் திரும்பினான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...