Wednesday, March 13, 2019

MAHA BHARATHAM

ஐந்தாம் வேதம்
 மகா பாரதம்


  ஒற்றனின்  சேதியும்  விளைவும் .  J K SIVAN 
                                                                     
துரியோதனன்  முன் காவலாளி  வணங்கி கட்டி நின்றான்:
'' விஷயமாக  வந்தாய் சொல்?''
''அரசே  பாண்டவர்களை  தேடிச்சென்ற  ஒற்றர்களில் ஒருவர் உங்களை காண வந்திருக்கிறார்''
சந்தோஷத்தில்  துரியோதனனின் முகம்  மலர ''உடனே இங்கே அழைத்து வா அவனை''  என்றான்.
  
விராட நகரிலிருந்து வந்த ஒற்றன்  துரியோதனனின் முன்  வணங்கி நின்றான்.. 
'உங்கள் தேடல் வெற்றிகரமாக முடிந்ததா?'' எங்கே இருக்கிறார்கள் பாண்டவர்கள் சீக்ரம் சொல்?'' என்றான் துரியோதனன்.

'அரசே, நாங்கள்  எங்கெல்லாமோ காடு மேடெல்லாம், தேடி, அவர்களைப் பற்றி எல்லா இடமும் விசாரித்தும்  அவர்கள் எப்படி மாயமாக மறைந்தார்கள் என்று அறியமுடியவில்லை.  ஆனால் ஒரு சேதி விசித்திரமாக கிடைத்தது.  விராட நகரில் மாமல்லன், பலசாலி சேனாதிபதி கீசகனை  யாரோ ஒரு கந்தர்வன் கொன்றுவிட்டான் என்ற அதிர்ச்சி செய்தி கிடைத்தது. ஒருவேளை பாண்டவர்கள் அங்கு இருக்கலாமோ என்று தோன்றுகிறது. த்வாரகையிலும்,  பாஞ்சால தேசத்திலும் தான் அவர்கள்  ஒளிந்துகொண்டு இருக்கக்கூடும் என்று அங்கெல்லாம் ஊசி முனை இடம் விடாது தேடி விட்டோம். எங்கும்  இல்லை. உங்கள் அடுத்த உத்தரவு எதாக இருந்தாலும் நிறைவேற்றுவோம் அரசே''  என்றான் ஒற்றர் தலைவன்.

 துரியோதனன் யோசித்தான்.  ''பாண்டவர்களின் அஞ்ஞாத வாசம் சில தினங்களில் முடியும். அதற்குள் அவர்களை எப்பாடு பட்டாவது கண்டுபிடிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் இங்கு நம்மை நோக்கி தான் வருவார்கள். அவர்களின் எதிர்ப்பு  பலம் வாய்ந்ததாகவே இருக்கும். அவர்கள் வாக்கு தவறாதவர்கள். எனவே அவர்களை  எப்படியாவது மீண்டும் பதி மூன்று வருஷம் காட்டுக்கு அனுப்ப வேண்டியது ரொம்ப அவசியம்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த கர்ணன்  ''இந்த ஒற்றர்கள் சாமர்த்தியம் இல்லாதவர்கள். திறமை அனுபவம் வாய்ந்த சிறந்த ஒற்றர்களை அனுப்பித் தேடுவோம்'' என்றான். மாறுவேஷத்தில் சென்று, ஆறு கோவில், குளம், வீடுகள், காடு, மலை ஒன்று விடாமல்  அலசுவோம். பாண்டவர்கள் மாறுவேஷத்தில் இருக்கலாம்.

 ''சென்று நாலா பக்கமும் தேடுங்கள்'' என்று துர்யோதனன் உத்தரவிட்டான்.

''பாண்டவர்கள் ஒருவேளை  வன விலங்குகளால் கொல்லப்பட்டிருக்கலாம். அல்லது கடலின் அந்தப் பக்கம் என்றாவது சென்று மறைந்திருக்கலாம். எப்படியோ  பாண்டவர்கள் தொல்லை இனி இல்லை ''  என்றான் கர்ணன்.

துரோணர் குறுக்கிட்டு, ''துரியோதனா ,  சத்யசந்தர்கள் மகா வீரர்கள் வாக்கு தவறாமல் நடப்பவர்கள். அவர்களுக்கு துன்பம் வராது. உயிரோடு தான் இருப்பார்கள், அவர்களை வரவழைத்து சுமுகமாக  பேசி,  அவர்களோடு இனி உறவு கொள்வது நல்லது'' என்றார்.

பீஷ்மரும்   தலை அசைத்து   ''துரியோதனா ,  நான் துரோணர் சொல்வதை ஆமோதிக்கிறேன். அவர்கள் தக்க சமயத்தில் வெளி வருவார்கள். அவர்களோடு நட்பாக இருந்து    நீ  அவர்களது பங்கை கொடுப்பது எனக்கு நியாயமாக தோன்றுகிறது'' என்றார்.

கிருபாசார்யாரும்  'துரோணர் பீஷ்மர் இருவரும்  சொல்வதே சரி. வனவாசம் முடிந்து பாண்டவர்கள் நேரே இங்கே தான் வருவார்கள். அவர்கள் விரோதம் கூடாது. உனக்கு அது நல்லதில்லை''  என்கிறார்.

இதுவரை பேசாதிருந்த  த்ரிகர்த்த அரசன் சுசர்மன் கர்ணனை நோக்கி ' இந்த சாரணர்கள் தலைவன் விராட நகரில் இருந்து வந்தவன்  சொன்ன சேதியை யோசித்தேன்.  மகா பலம் வாய்ந்த கீசகன் தனது சேனா பலத்தால் எங்கள் நாட்டில்  புகுந்து எங்கள் ஆநிரைகள், செல்வங்கள் எல்லாம்  அபகரித்துக் கொண்டு சென்றபோதிலும் எங்களால் அவனை எதிர்க்க முடியவில்லை.  இப்போது அவன் கந்தர்வர்களால் கொல்லப்பட்டான் என்ற சேதி எனக்கு நம்பிக்கையை தருகிறது. விராடன் சக்தியற்றவன்.    அந்த நாட்டின்   ஒரே பலம்   கீசகன்.  அவன் இப்போது   இல்லை என்பது  நல்ல சேதி. இது தக்க தருணம்.  விராட  நாட்டில் புகுந்து அவனது செல்வங்கள், ஆநிரைகள் அனைத்தையும் கவர்ந்து அவனைக் கொன்று வென்று  மத்ஸ்ய தேசத்தை துரியோதனன் ராஜ்யத்தோடு இணைத்தால் நமது பலம் பெருகும். எதிர்ப்பும் இனி வராது'' என்று சுசர்மன் தனது கருத்தை  சொன்னான்.

''ஆஹா,  சுசர்மன் சொல்வது சரியான திட்டம்''   என்றான் கர்ணன்.

துர்யோதனன்  ''கர்ணன் சொல்வது சரியான திட்டம்.  துச்சாதனா, உடனே  நமது படையைத் திரட்டு.  திரிகர்த்தர்கள் அவர்கள் சேனையுடன் குறித்த இடத்தில் நம்மோடு சேரட்டும்.  நாம்  மத்ஸ்ய தேசத்தின் மீது படையெடுக்க ஆயத்தம் செய்''  என ஆணையிட்டான். இரண்டு மூணு நாளில் படை தயாராகட்டும். முதலில் த்ரிகர்த்தர்கள்  விராதனை எதிர்த்து ஆநிரைகளை கைப் பற்றட்டும்.  நாம் பின் பலமாக அங்கே நிற்போம்.  த்ரிகர்த்தர்களின்  சைன்யம் தென்கிழக்காக விராட தேசத்தை நோக்கி நகர்ந்ததும் மற்ற பக்கங்களை  கௌரவ சேனை சூழட்டும். அவ்வளவு பசுக்களையும் கவர்வோம்.' என்று கட்டளையிட்டான்.

இதற்குள் பாண்டர்வகளின் பதிமூன்றாவது வருஷமான  அஞ்ஞாத வாசம் பூரணமாக நிறைவேறியது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...