Sunday, March 10, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்       J K SIVAN 

மஹா பாரதம்  
                                                          
                     திரௌபதிக்கு  ஒரு சோதனை 

ஜனமேஜயா,  விராட தேச ராணி சுதேஷ்ணை தான் செய்வது தவறு  என்று தெரிந்தும் அந்த தவறை வேறு வழியின்றி செய்தாள்.  அவள் சகோதரன் கீசகன் பலத்தினால் தான்  விராட தேசம் எதிரிகள்  நெருங்க முடியாதபடி இருந்தது. அவன் ஒரு சர்வாதிகாரியாக எல்லோரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரக்கன்..  ஆகவே தான் ஒருநாள் சுதேஷ்ணை...

''சைரந்திரி, நீ என் சகோதரன் கீசகன் மாளிகைக்கு சென்று அவன் எனக்கு சில மது பான வகைகள் கொடுப்பான். அவற்றை வாங்கிக் கொண்டு வா . வெட்கம் பயம் வேண்டாம்.  அவன் முரட்டு ஸ்வபாவம்  கொண்டவன். ஆனால் ரொம்ப  நல்லவன்.  அவனோடு பேசு''

''அம்மா என்னை அங்கே அனுப்பாதீர்கள். உங்கள் சகோதரர் எவ்வளவு காம எண்ணத்தோடு இருக்கிறார் என்று உங்களுக்கே தெரியும். உங்களிடம் அநேக பணியாட்கள் என்னைப் போல் இருக்கிறார்களே அவர்களில் ஒருவரை அனுப்பலாமே.''

''என்னிடமிருந்து நீ வந்ததால் உன்னிடம் தவறாக நடக்க மாட்டான். கவலை இல்லாமல் போ''

வேறு வழியின்றி மனதில் பாண்டவர்களை வேண்டிக்கொண்டு திரௌபதி கீசகன் மாளிகை சென்றாள் .வழியில் சூரியனை வேண்டினாள் . அவள் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து சூரியன் ஒரு ராக்ஷசனை அவள் கண்ணில் படாமல் பாதுகாக்க அனுப்பினான்.

கீசகன் திரௌபதியைக் கண்டதும் மகிழ்ச்சியோடு வரவேற்று, ''வா பெண்ணே, என்னோடு சேர்ந்து மது அருந்து. இதோ இந்த பெட்டிகளில் வைரம், தங்கம், கோமேதகம், எல்லா ஆபரணங்களும் உள்ளன. எடுத்துக்கொள். எல்லாமே உனக்குத் தான்''  என்றான்..

''ஐயா அரசியார் தாகமாக இருக்கிறார்கள். உடனே அவர்களுக்கு தாங்கள் மது பானங்கள் ஏதோ தருவீர்கள் என்று அனுப்பியதால் உடனே அதை வாங்கிப் போக தான் வந்தேன். சீக்கிரம் கொண்டுவாருங்கள்''

கீசகன் திரௌபதியின் மேலாடையைப் பற்றி இழுக்க அவள்  இதை எதிர்பார்த்து அவனைப் பிடித்து தள்ளி விட்டு ஓடினாள். விராடன் அரசவைக்கு சென்ற பொது அங்கே யுதிஷ்டிரனைப் பார்த்தாள். கீசகன் தொடர்ந்து பின்னாலேயே வந்தான்.  எல்லோர் முன்பும்  அவள் முடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி அவளை உதைத்தான் கீசகன்.  அந்த நேரம்  சூரியனால் அனுப்பப்பட்ட கண்ணில் படாத ராக்ஷசன் வேகமாக கீசகன் முகத்தில் அடிக்க, மயங்கி கீழே விழுந்தான் கீசகன்.

இதைப் பீமனும் பார்த்துவிட அவன் கண்களில் தீப்பொறி. பல்லை நறநற வென்று கடித்து, முகம் வியர்க்க பெருமூச்சு விட்டான். பக்கத்தில் இருந்த ஒரு பெரிய மரம் பீமன் கண்ணில் பட்டது. யுதிஷ்டிரன் இதை கவனித்து அவன் வேஷம் கலைந்து உண்மை தெரியாமல் இருக்க தனது கட்டை விரலை திருகி அமைதிப் படுத்தினான்.

''வல்லபா,   என்ன விஷயம். சமையலுக்கு மரம் வேண்டுமானால் காட்டுக்கு அமைதி யாகப் போ. அங்கே வேண்டியதை வெட்டி வீழ்த்து''.

தன்னை அவமானப்படுத்திய கீசகன் செயலுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாத தனது கணவர்களை நோக்கிய திரௌபதி, விராடனிடம் முறையிட்டாள்.

'அரசே உன் நாட்டில் இப்படி ஒரு கேவலமான சம்பவம் நடந்து நீ நீதி நெறி முறைப்படி குற்றவாளிக்கு தண்டனை வழங்கவில்லைஎன்றால் உனக்கல்லவோ அவப் பெயர். மாற்றான் மனைவியை தொட்டு இழுத்து அடித்து அவளைத் தன் காம இச்சைக்குட்பட துன்புருத்திய கீசகனுக்கு என்ன தண்டனை வழங்குவீர்கள். என் கணவர்கள் இதை கவனித்தும் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் என்ன காரணம்?'' நீ காப்பாற்றுவாய் என்ற எண்ணத்தால் தானே ''

''யுதிஷ்டிரன் குறுக்கிட்டு, பெண்ணே, நீ அந்தப்புரம் செல். உன் கந்தர்வ கணவர்கள் ஒருவேளை தக்க தருணத்தில் இதற்கு பழி வாங்க திட்ட மிட்டிருக்கலாம்''

திரௌபதி பீமனை தனியே  விராட  அரண்மனை மடப்பள்ளியில்  ரகசியமாக சந்திக்கிறாள். மிகவும் மனம் நொந்து அழுகிறாள்:

''யுதிஷ்டிரர்  சூதாட்டத்தில் ஈடுபட்டு அனைத்தும் இழந்து என்னையும் இழந்து தற்போது விராடனுக்கு சூதாட்ட தோழனாக எனக்கு உதவ முடியாத .நிலையில் உள்ளார். அர்ஜுனனைப் பார்த்தாலோ கண்ணில் ஜலம் வருகிறது. உலகமே கண்டு நடுங்கும் வீரன் ஒரு சாபத்தால் பெண்ணாக கையில் வளையோடு பெண்கள் கூட்டத்தில் நடனமாடி, பாடுகிறான். எனக்கு தீங்கு செய்த கீசகனை தண்டிக்க உன்னை விட்டால் வேறு எவருமில்லை.   நான்  இன்னும் நம்பிக்கையில் வாழ்கிறேன். உலர்ந்து போன குளத்தில் மீண்டும் நீர் நிரம்பும். சகலமும் இழந்து நிற்கும் பாண்டவர்கள் மீண்டும் சக்ரவர்த்தி களாவார்கள். கஷ்டங்களை அனுபவித்த நான் என்றோ ஒரு நாள்  மீண்டும்  சுகம் வரும் என்று காத்திருக்கிறேன். இன்பமும் துன்பமும் ஒன்றை ஒன்று மாறி மாறி துரத்தி சுற்றி வருவன அல்லவா?    கீசகன் சக்தி வாய்ந்தவன். அவனை நம்பி தான் விராடனும் அவன் தேசமும்  இருக்கும் நிலை  இங்கே.  அவனை நான் எச்சரித்தேன். என் கந்தர்வ கணவர்கள் உன்னை கொன்றுவிடுவார்கள் என்று. அவன் சிரித்தான். ஆயிரம் கந்தர்வர்களை கொல்லக்கூடியவன் நான் என்றான். பீமசேனா, நீ கீசகனை வதம் செய்யவேண்டும் இல்லாவிட்டால் என் உயிர் போய்விடும் .''

பீமன் தலையாட்டினான். '  வருவது வரட்டும்.  திரௌபதி நீ  அந்தப்புரம் செல். கவலைப்படாதே.கீசகனின் வாழ்வு நாளையோடு முடியப்போகிறது'' என்றான்.


 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...