Sunday, March 3, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம் J K SIVAN
மகா பாரதம்.
விராட நாட்டில் வேலை தேடுபவர்கள்.

''இது எனக்கும் ஒரு கவலையாக இருந்ததால் இதைப்பற்றி நிறையவே சிந்தித்து தூக்கத்தை கோட்டை விட்டிருக்கிறேனே. ஒரு வழி தேடினேன். எங்கு போனாலும் சமையல்காரனுக்கு வரவேற்பு உண்டே. என் பெயர் இன்னும் ஒரு வருஷத்துக்கு வல்லபன். ராஜா ராணிகளுக் கெல்லாம் பிடித்தமான உணவு வகைகள் செய்வதில் நான் பெயருக் கேற்றவாறு வல்லவன். காட்டில் மரம் வெட்டி, சுமந்து இன்சுவை கூட்டி அறுசுவை உண்டி சமைத்துப் போடுகிறேன், பாருங்கள்'' என்று ராஜாவை ஒருவாறு மயக்க என்னால் முடியும்'' என்றான் பீமன். விராடனுக்கு மல்யுத்தம் பிடிக்கும். இதுவும் ஒரு விதத்தில் எனக்கு உதவும். அதில் சில போட்டிகளில் கலந்து கொண்டு ராஜாவை மகிழ்விப்பேன் ஆனால் எவனையும் கொல்ல மாட்டேன். உங்களைக் கேட்ட
மாதிரியே என்னையும் கேட்டால், இதற்கு முன் பாண்டவ ராஜா யுதிஷ்டிரன் அரண்மனையில் சமையல் வேலையாள்'' என்பேன்.

''பலே, பீமா நீ கெட்டிக்காரன். பிழைக்கத் தெரிந்தவன். பேஷ்.'' என்றாள் திரௌபதி சிரித்துக்கொண்டே.

''அர்ஜுனா, எங்கள் கவலையெல்லாம் உன்னைப்பற்றி தான். மாவீரன். அசகாய சூரன் வில்லுக்கு விஜயன். சுலபத்தில் ஆத்திரம் அடைபவன். நீ எப்படியப்பா சமாளிப்பாய் நிலைமையை. எவ்வாறு உன்னால் தலைமறைவாக திரியமுடியும்?

''சகோதரர்களே, வீண் கவலை வேண்டாம். கைவசமாக எனக்கு தப்பிக்க ஒரு தந்திரம் வைத்திருக்கிறேன். ஒரு சாபமே எனக்கு சமய சஞ்சீவியாக இப்போது உதவப்போகிறது.

''அது என்ன சாபம் அர்ஜுனா ? என்றான் பீமன்.
''எனக்கு இந்திரலோகத்தில் ஊர்வசி முன்னம் இட்ட ஒரு சாபம் இப்போது உதவும். நான் பெண்ணாகவும் ஆணாகவும் இன்றி ஒரு நபும்சகனாக உருவெடுப்பேன். என் உரமேறிய கைகளை மறைக்க நிறைய வளையல்களை மாட்டிக்கொள்வேன். காதில் வளையம், மூக்கில் புல்லாக்கு காதில் தொங்கட்டான். ஆளே அடையாளமின்றி எனக்கே கூட என்னை அறிய முடியாதபடி மாறிவிடுவேன். என் குரலே மாறிவிடும். முற்றிலும் அடையாளம் தெரியாத ஒரே பாண்டவன் நானாகத்தான் இருப்பேன். என் பெயர் கூட நிச்சயம் பண்ணி விட்டேன். பிரஹன்னளை. எப்படி? நாட்டியம் கற்றுக்கொடுக்கும் ஒரு ஸ்திரீயாக விராடனின் அந்தபுரத்தில் நுழைவேன். பாடுவேன். நாட்டியம் நட்டுவாங்கம் சொல்லிக் கொடுப்பேன். அர்ஜுனன் என்ற பெயருக்கே சம்பந்தா சம்பந்தமில்லாத சொல்லும் செயலுமாக இருப்பேன். உங்களைப்போல் என்னையும் கேட்டால் இதற்கு முன் பாண்டவ ராணி திரௌபதியின் அந்தப்புரத்தில் நாட்டியம் பாட்டு சொல்லிக்கொடுப்பவள் நான்'' என்பது என் பதிலாக இருக்கும். ஒரு வருஷம் இப்படியே ஓட்டுவேன். முடியும் என்னால். உங்களுக்கெல்லாம் இப்போது ஏதாவது ஒரு பாட்டு பாடி அபிநயம் பிடித்துக்காட்டவா?.''

நகுலன் மீது யுதிஷ்டிரனின் பார்வை சென்றதிலிருந்தே அவன் கேட்காத கேள்வியைப் புரிந்துகொண்டான்.

''அண்ணா, இனி நகுலா என்று கூப்பிட்டால் நான் திரும்பிக்கூட பார்க்க மாட்டேன். என் பெயர் க்ரந்திகன். பாண்டவர்களின் சைன்யத்தில் முக்யமாக அர்ஜுனனின் தேர்க் குதிரைகளைப் பராமரித்து வந்தவன். இப்போது உங்கள் அரண்மனையில் அஸ்வ பாலனாக பணி தேடி வந்தவன்'' என்று சொல்லி நடித்தே காட்டினான் நகுலன்.

"என் சின்னத்தம்பி, சகாதேவா, உனக்கு என்னப்பா வேஷம்?' என்ற யுதிஷ்டிரன் கவலையுடன் கேட்கும்போது 'எழுந்து நின்றான் சஹா தேவன். கைகளைக் கட்டிக்கொண்டு பவ்யமாக

''விராட மகாராஜா, அடியேன் தந்திரபாலன். யுதிஷ்டிர சக்ரவர்த்தியின் ராஜ்யத்தில் அவர்களது சகல ஆநிரைகளும் என் வசம் தான் ஒப்படைக்கப் பட்டன. பசுக்களின் வளமை, பால் கறவை ஆகியவற்றை சிறப்பாக நிர்வாகம் பண்ணி, நல்ல பேர் எடுத்தவன். காளைகள், பசுக்களின் பல், நெற்றிச் சுழிகளில் எனக்கு அனுபவம் உண்டு. அவற்றின் குணாதிசயம் உணர்ந்தவன். நாட்டின் வளத்துக்கு செல்வம் பசுக்கள். அதைப் பராமரிப்பது மிக முக்கியம். அதில் நான் கை தேர்ந்தவன். யுதிஷ்டிரனின் மதிப்பையே பெற்றவன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்'' என்று சஹாதேவன் கூறி நடித்தபோது அர்ஜுனன் அவனை அன்போடு அணைத்துக் கொண்டான்.

யுதிஷ்டிரன் பெருமூச்சு விட்டான். கடைசியில் பட்டத்து ராணி, கிருஷ்ணா என்றே பெயர் பெற்றவள், துருபதனின் கண்மணி, நமது மதிப்பைப் பெற்ற திரௌபதி எப்படி மறைந்து வாழ்வாள்? என்பது பெரிய கேள்விக்குறியாகியது. அவள் பிடிபட்டால் அனைவருக்குமே அல்லவோ அது துரதிர்ஷ்டம். எப்படி ஒரு வருஷ காலத்தைக் கடத்தப் போகிறாள். எல்லோரிலும் அவளுக்கே இது அக்னிபரிக்ஷை ஆயிற்றே.

''உங்கள் பேச்செல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த போதே என் முடிவு தெளிவாகி விட்டது பிரபு''.
அரண்மனைகளில் ராணிகளின் அந்தப்புரத்தில் சைரந்திரி என்று ஒருவள் உண்டு. அவள் தான் அரசகுமாரிகளுக்கு பணிவிடை செய்பவள். முடி திருத்துபவள். அலங்காரம் செய்பவள். உடை உடுத்துபவள்.
நீ யாரம்மா என்று கேட்டால், ''அரசே, இந்த்ரப்ரஸ்தத்தில் சக்ரவர்த்தி யுதிஷ்டிரன் அரண்மனையில் அந்தப்புரத்தில் திரௌபதி மகாராணிக்கு பணிப்பெண்'' என்பேன்.



இவர்கள் பேசியதெல்லாம் தௌமியர் என்கிற ரிஷி கேட்டுக்கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...