Tuesday, July 12, 2022

YATHRA

 


மன யாத்ரை  -  நங்கநல்லூர்  J K  சிவன் 

நமக்கு ஒரு சௌகர்யம் எப்போதும் உண்டு.  கண்மூடி  முழு கவனத்தையும் வேறு எதிலும் சிந்தனை சிதறாமல், மனம் ஓடாமல் ஒரே ஒரு நிலையில் நிறுத்தினால் அதில் கிடைக்கும் ஆனந்தத்துக்கு ஈடு இணை இல்லை.  ஆகவே  நாம்  பட்டணத்தில் நம்முடைய  ஒண்டுக்  குடுத்தனத்திலிருந்து , பல அடுக்கு கட்டிடங்களில் ஒரு புறாக்கூண்டில்இருந்து, 
எங்கோ தனியாக ஊருக்கு ஒதுக்குப் புற  ஒரு வீட்டில் இருந்து புறப்படுகிறோம். எங்கு நாம் வசித்தாலும் பிருந்தாவனத்தில் கிருஷ்ணனோடு இருப்பதாக  மனதில் எண்ணம் நிரம்பினால் நிச்சயம் நாம் பிருந்தாவனத்தில் அவனோடு அவன் காலத்தில் இருப்போம்.
ஆகவே நாம்  இப்போது  பிருந்தாவனத்தில்  இருக்கிறோம்.  

சென்னையில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக வறுத்து எடுத்தால் என்ன? உடல் குளிர்ச்சியை நாடுகிறது..உடல் மட்டும் குளிர்ந்து என்ன லாபம்.?  உள்ளத்துக்கு  குளிர்ச்சி தரும்  இடமாக எனக்கு கிடைத்தது பிருந்தாவனம். ஆகவே அங்கே சென்றுவிட்டேன், நான் மட்டும் தனியாக இல்லை, உங்கள னைவரையும் சேர்த்து தான் என்னோடு அழைத்து வந்திருக்கிறேன். 

எதிரே தெரிகிறதே பெரிய  காரைச் சுவர் கட்டிடம் அது தான் நந்தகோபன் வீடு. சுற்றிலும் மரங்கள் நிறைந்து அதை முழுமையாக வெளிக் காட்டாமல் மறைத்து நிற்கிறது. இந்த வீட்டில் அந்த கண்ணன் பயல் இருக்கிறான்.

கோபாலர்கள் கோபியர்கள் வழக்கமாக  துவங்கும் தினசரி வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள்.  சூரியன் கிழக்கே இருந்து மெதுவாக மேலே  எழும்பிக் கொண்டிருக்கும்போது அவனது தகதகப்பும்,   (ஒளியும்)  கதகதப்பும் (உஷ்ணமும்) கூட  அதிகரிக்குமே.

ஆயர்பாடி  அமைதியான கிராமம்.   விடிகாலையில்  எழுந்துவிட்ட  பக்ஷிகளின்  அரவம் மரங்களில் செடிகள் மேல் ஒலிக்கிறது.  பசுக்களும் கன்றுகளும் எப்போது  கயிற்றை அவிழ்த்து தொழுவத்திலிருந்து வெளியேற லாம் என்று பார்க்கின்றது.  ஆயர்பாடி  சிறுவர்கள்  பள்ளிக்குச் செல்பவர்கள் இல்லை.   விடிந்ததும்  ஏதாவது நீராகாரம் சாப்பிட்டுவிட்டு விளையாட்டு தான்.  கிருஷ்ணன் தான் லீடர்.   அவனோடு சேர்ந்தே  போவார்கள் வருவார்கள். எப்போதும் உற்சாகமாக இருக்கும்  இந்த சிறுவர்களைப்  பார்த்து ஆயர்பாடி  மக்கள்  அனைவரும்  பெருமிதம்  அடைவார்கள்.   

இத்தனை  மகிழ்ச்சி  ஆரவாரம்  எல்லாம்.அவர்களுக்கு  எங்கிருந்து  வருகிறது?  எல்லோரும் அறிந்த ரகசியம் தான். கிருஷ்ணன்  என்கிற  சிறுவன்  தான்  அவர்களைத்   தலைவனாக  ஆட்டி  படைக்கிறவன்.  பசுக்களும்  கன்றுகளும்  கூட   மறக்காமல்  அன்றாடம் ஒருமுறை  கூட்டத்தில்  மற்ற சிறுவர்களிடையே  கண்ணன்  இருக்கிறானா  என்று  முதலில் பார்த்துக் கொண்டு  தான்  சந்தோஷமாக இரை தேட  செல்லும்.   கன்றுகள்  தாவித்   தாவி   குதித்து  ஓட  தாய்ப்  பசுக்கள்  பெருமிதமாக மிதந்து செல்லும். கண்ணன்  ஏதாவதொரு பசுவின் அருகில் தான்  நிற்பான்   கூடவே அதன்  கழுத்தைக்  கட்டிக்  கொண்டே  நடப்பான், ஓடுவான்.  அவன் உடலில்  புழுதி படியாத இடம் எதுவுமே இல்லை.

 உச்சிப்  பகல் வரை  பசுக்களும் கன்றுகளும்  அந்த சிறுவர்கள் கண் பார்வையில் எங்கும் மேயும்.  அதுவரை அவர்களும்  மரங்களின் இடையே, யமுனை ஆற்றில் இறங்கி குளித்து விளையாடி மகிழ்வார்கள். கண்ணன் குழல் எங்கும்  எதிரொலிக்கும்.   பகல்  பூரா   நிசப்தமான அந்த காட்டுப் பிரதேசத்தில் அந்த ஜீவ நாதம்  ஒரு வித மயக்கத்தை அளிக்கும்.   அப்புறம் கூட்டாஞ்சோறு  வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.  ஒரு நாளைக்கு எத்தனையோ விதமான  உணவம்  பதார்த்தங்களும்  அவர்கள்  ஒவ்வொரு இலையிலும் நிறைய  இருக்கும்.உண்டபின்  மீண்டும் ஜமாபந்தி.  கண்ணன் குழலிசை.  கன்றுக்குட்டிகள் வயிறு முட்ட பால் குடித்துவிட்டு மரநிழலில் அவன் இசையில்  கிறங்கி மகிழும். அடிக்கடி கண்ணால் அம்மாவைத் தேடும். அம்மா பசுக்களும் அங்கேயே வட்டமிட்டு  அசைபோட்டுக்கொண்டு   அரைக்கண் மூடி  அமர்ந்து கொள்ளும். அவற்றுக்கும் கண்ணன் தரிசனமும் கீதமும் பிடிக்குமே.  

ஒரு  கன்று  குட்டி  தாயைக்  கேட்டது நம் காதில் விழுகிறது.
"அம்மா  உனக்கு  என்னை பிடிக்குமா  கண்ணனின்  குழல் இசை பிடிக்குமா?
" ஏன் இப்படி கேட்கிறாய்  இரண்டுமே பிடிக்கும்.!  
" ரெண்டுலே  எது  ரொம்ப  பிடிக்கும்?
".உன்னைப்   பார்த்துக்கொண்டே இருக்க  ரொம்ப  பிடிக்கும் ;"  கண்ணன்  குழலிசையைக் கேட்டுக் கொண்டே  இருக்க ரொம்ப பிடிக்கும் "   என்றது தாய்ப்  பசு.

ஒரு  கன்றுக்குட்டி  மற்றொரு  ஆயர்பாடி  சிறுவன்   ஊதிய குழலை  கேட்டது.
"ஏன்  உன்னிடம்  கண்ணன்  ஊதும்  குழலின்  ஓசை  வரவில்லை?
அந்த  குழல் பதில் சொன்னது:  
"நானும்  கண்ணன்  கையில்  இருக்கும்  மூங்கில்  குழலும்  ஒரே  மரத்தில்  இருந்து வந்தவர்கள் தான். என்னை இந்த  சிறுவன்  கண்ணன் ஊதுகிறதைப்போல   உபயோகிக்க  வில்லையே. அதற்கு  நான்  என்ன செய்ய முடியும்?''
இதை கேட்ட  அந்த  சிறுவன்  தனது   குழலை  கண்ணனிடம்  கொடுத்தான்.

'' கிருஷ்ணா,  என்னுடைய   புல்லாங்குழலில் நீ   வாசி நான்  உன்னுடையதில்  வாசிக்கிறேன்'' என்றான்    அவன்  கண்ணனுடைய புல்லாங்குழலை  வாங்கி  ஊதினான்.  ஓசையில்   எந்த  மாற்றமும்  இல்லை. கர்ண  கொடூரமாக  ஒலித்தது.
அப்போது  கண்ணனின்  குழல் சொல்லியது:  

" ஏ, சிறுவா, நான்  மாற்றமே  இல்லாத மரத்துண்டு  தான். நீ ஊதினால்  நான்  அதுவாகவே  இருக்கிறேன். கண்ணன்  என் மீது அவன்  காற்றை  செலுத்தும்போது  எனக்கு  ஜீவன்  கிடைத்து  அவன்  அருளால்  அவனின்  ஒரு  பகுதியாகவே  மாறிவிடுகிறேன்.ஆகவே  தான்  கண்ணன்  ஊதும்போது நான்  அவன்  ஜீவ நாதமாகி  காற்றில்  கலக்கிறேன்".

ஆயர்பாடி  பூலோக  சுவர்க்க பூமியாக  திகழ்ந்ததில்  என்ன  ஆச்சரியம்?  நாமும்  சென்னை  வெயிலுக்கே  திரும்புவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...