Friday, July 22, 2022

FACES MISSING



 

காலத்தில் கரைந்துபோனவர்கள் -  நங்கநல்லூர்_J_K_SIVAN 


பொழுது விடிந்தால் சூரியன் மட்டும் தான் மாறாமல் பல யுகங்களாக ஆரஞ்ஜ்  கலரில் வட்டமாக வளர்ந்து மேலே போய் சூடாக ஒரே மாதிரி தஹிக்கிறான்.  ஆறரை மணிக்கு சாயங்காலம் நெருப்பு உருண்டையாக சிவந்து   அஸ்தமிக்கிறான்.    மற்றதெல்லாம் அவன் வெளிச்சத்தில்  நமக்குத்  தெரிவதெல்லாம் மாறிக்கொண்டே  தான் வருகிறது. 

என்னைப்  பொறுத்தவரை  83 வருஷங்கள்  உருண்டோடி  விட்டன  என்றாலும்  இன்னும்  பசுமையாக  நேற்று  தான்  நடந்தது  போல்  நன்றாக  நினைவில் இருக்கும்  சில  விஷயங்கள்.

வடபழனி  பக்கம் பெருமாள்  கோவில்  வாசலில் புரட்டாசி  மாசம்  கொஞ்சம்  கூட்டம்  அதிகமாகவே இருக்கும்.  அதாவது  எள்ளு  போட்டால்  எண்ணையாகி  விடும்  என்று எல்லாம் கற்பனை  செய்து கொள்ளவேண்டாம்.  அஞ்சு ஆறு   பேருக்கு பதிலாக  பத்து  பதினஞ்சு பேர் தான் அந்த  ''பெரிய''  கும்பல்.

 தினமும்  சாயந்திரம்  நாலு மணி  வாக்கில்  பெரிய  அலுமினியம் தூக்கு நிறைய   கமலா மாமி  சுண்டல்  வீடாக சூடாக  கொண்டு வந்து விற்பாள்.  அவள்  கணவனுக்கு  ஏனோ  அவளிடமிருந்து  ஓடி விட வேண்டும்  என்று  தோன்றி இருக்கிறது.  அவள்  எங்கு தேடியும்  அவன் தென்படவில்லை.  எத்தனையோ  வருஷம் ஆனாலும்   அவள்  அவனை  மறக்கவில்லை.   மரத்து  போய்  விட்டது . யாராவது  சேஷாத்ரி பற்றி கேட்டால்.  
'அது  என்னிக்காவது  ஒரு  நா  வந்து நிக்கும்''  என்று   ஒரு  நாய்க்குட்டி   ஜிம்மியைப்  பற்றி  பேசுவது போல்  சொன்னாலும்  அவளுக்கு  அவன்  திரும்பி வருவான்  என்ற  நம்பிக்கை யோடு  பெருமாள்  கோவில் வாசலில் சுண்டல்  வியாபாரம்  பண்ணினாள் .  பச்சை  இல்லாவிட்டால் மஞ்சள்  புடவை  இந்த  ரெண்டிலும்  தான் அவளை  வருஷம் பூரா  பார்க்கலாம்.  அதுவும்  மடிசாரில்.  ஒரு  சின்ன மரப்பலகை தான்  சிம்மாசனம்.  அதன் மேல்  குண்டு உடம்போடு உட்கார்ந்திருப்பாள். பக்கத்தில்  ஒரு   காலி ஹார்லிக்ஸ் பாட்டில்  அவளது  கேஷ் பாக்ஸ். CASHBOX .  அவளது வருமானம்  ரெண்டு மூணு ரூபாய் சில்லறையாக  டிரான்ஸ்பாரண்ட் ஆக அதில் தெரியும்.  சுண்டலைத் தவிர சில நாள்  காரா சேவ்  ஓமபொடி  சுட  சுட  கம்மென்று  மணம்  வீச ரெண்டு  அலுமினிய  பத்திரத்தில்  நிரம்பி வழியும்.  

ரெண்டு  தெரு தாண்டி  தான்  எங்கள்  கார்ப்பரேஷன் ஸ்கூல்.   அரையணாவுக்கு   கை நிறைய  தருவாள். திடீரென்று   வேப்பமரத்தடி  ஒரு நாள்  காலியாக இருந்தது.  கமலா மாமி  செத்துப் போய் விட்டாள் என்று யாரோ சொன்னார்கள்.   எட்டு வயதில்  எனக்கு  செத்துப்போவது பற்றி  ஏதோ பயமாக இருந்ததே தவிர  விவரம் தெரியவில்லை.  சேஷாத்ரி  வருவான்  என்ற  நம்பிக்கையும்  அவளோடு போய்  விட்டது.  

பல  வருஷங்கள்  கழித்து  சூளைமேடு  பஜனை கோவில்  பக்கம்  போனபோது  பழைய  நண்பன்  ரகோத்தம  ராவ் தெருவில்  வாக்கிங் ஸ்டிக்கோடு நின்று கொண்டிருந்தான்.  சுருட்டை தலைமுடியை காணோம். பளபளவென்று வழுக்கை.
''ரகு   எப்படிடா  இருக்கே? '' என்றேன்
 ''இப்போ  ஏதுரா  மழை?''  என்றான்.  
அவனோடு  பேச  தெம்பு இல்லாததாலும்  தெரு பூரா  எல்லோரும்க்கும் கேட்கும்படியாக உரக்க  நான்  கத்தி  ரகோத்தம ராவிடம்  சொல்லவோ, அதை அவன் புரிந்துகொண்டு பதில் சொல்வதைக்  கேட்கவோ 
முடியாததால்  கை யாட்டிவிட்டு  அவனை விட்டு நகர்ந்தேன்.  இப்போது வேப்ப  மரம் இல்லை.  பெருமாள் கோவில்  இருந்தது ஆனால்  வாசலில்  நிறைய  பூக்கடைகள் அதை  மறைத்து விட்டது. அண்ணா  கலைஞர் தலைவர்கள் பல்லிளித்து சிரித்தார்கள்.  அவர்கள் கீழே  ரெண்டு  ஆட்டோ ரிக்ஷா.   மூத்திர நாற்றம் சகிக்கவில்லை
++ ''கோவிந்தோ   கோவிந்தோ''   என்று  சொல்லிக்கொண்டு  எங்கள் வீட்டு வாசலில் தாடி மீசையோடு மஞ்சள் வேஷ்டியை இடுப்பில்  முழங்காலுக்கு மேல்   கச்சம் கட்டிக்கொண்டு  இருப்பார்.  அதில் புழுதி  மண் நிறைந்திருக்கும். முதுகு  மார்பு கைகள்,  தலை, கழுத்து  எல்லாம்  மண்  புழுதியோடு  தெருவில்  உருண்டு வரும்  சட்டையில்லாத மனிதர் நினைவுக்கு வருகிறார்.  மனிதர் எங்கள்  வீட்டு  வாசலில் '' கிடக்கும்போது ''   (நிற்கும்போது என்று  ஏன் சொல்லவில்லை தெரியுமா? )  எங்க  அம்மா  ஒரு  தட்டுலே  அரிசி  பருப்பு,  வெத்திலை  வாழைப்பழம்,  எட்டணா  காசு  கொண்டு வந்து  அவர்  தலைக்கு மேல்  உயர்த்தி காட்டிய  பள பள வென்று தேய்த்த  பித்தளை சொம்பில்  போடுவாள்.  அந்த  சொம்பு மேல்  மஞ்சள் துணி  சுத்தி  வாயை  கட்டி வைத்திருப்பார்.  ஒரு  கிழிசல்  அதன்  நடுவில்.  அது  தான்  உண்டியல்    ரங்கசாமி நாயுடு  அவர் பெயர்.  கரன்ட் ஆபிஸில்  வயர்மேன் வேலை.  பிள்ளைமார்  தெரு கடைசிவீட்டு  பின் புறம்  குடியிருந்தார்.   என் நண்பன் கேசவலு வின்  அப்பா.   கட்டை குட்டையா  மாநிறமா  இருப்பார். தலையில்  பெரிய  கூந்தல்.   நாரதர் மாதிரி  நடுத்தலையில்  கொண்டை .  அது  சிக்கு பிடித்து  சடையோடு  பிரவுன்  கலரில்   இருக்கும்.  முகமெல்லாம்  தாடி  மீசையோடு  மறைந்திருக்கும். நெற்றியில்  மூக்கில்  பாதி வரை வெள்ளையும் நடுவில் சிகப்புமாக  பெரிய  நாமம். .

கணீரென்று நாயுடுவின்   ''கோவிந்தோ   'கோவிந்தோ''  குரல் தெரு முழுதும்  கேட்கும்.  தரையெல்லாம் கல்லிலும்  மண்ணிலும்  வெயிலில்  உருண்டு  கொண்டு  வருவார்.  அங்க பிரதக்ஷணம். ஐந்து தெரு  ஆறு  தெருவரை  இந்த  அங்க பிரதட்சிணம்  செய்வார்.  ஒவ்வொரு  சனிக்கிழமையும்  காலை   சூர்யோதயத்தின்  போது   ''கோவிந்தோ''  கேட்கும்.  காலை பத்து  பதினொரு மணிவரை ஆறு தெருவிலும்  அவர் எங்காவது  உருண்டு கொண்டு  இருப்பார்.  அதற்குள்  சொம்பில் என்ன  கிடைக்கிறதோ  அதையெல்லாம்  சேர்த்து வைத்துக்கொண்டு  குடும்பத்தோடு  திருப்பதிக்கு  ரெயிலில்  போவார்  மலை நடந்தே  ஏறுவார். உண்டியில் சேர்த்த  காசை போடுவார். மொட்டை தலையோடு  அடையாளம்  தெரியாமல்  வந்து  எங்களுக்கு  கல்கண்டு  பிரசாதம்  கொடுப்பார்.    ,மொட்டையில் முடி வளரும்.   சடை பிடிக்கும்  அடுத்த புரட்டாசியில்  நாரதர்  கொண்டையாகும்.  வருஷா  வருஷம்  ஒரு மாதம்  இந்த  அங்கப்ரதக்ஷிணம்   தெருவெலாம் நடக்கும்.  கூட  அவர் வீட்டில் யாரும்  தெருவில்  அவர் கூடவே  வரமாட்டார்கள்.  சின்ன  பசங்கள்  நாங்கள்  தெருவில்  வழியில்  கல் முள் இருந்தால்  அதை  அகற்றுவோம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும்   நாங்களும்  ''கோவிந்தோ  கோவிந்தோ''  என்று  கத்துவோம்.    

+++
ஒரு  பெரிய  கொம்பில்,  பழுக்காத்  தடி என்று  சொல்வார்கள்.  பள பள  வென்று  பிரவுன் கலரில்  மினு மினுக்கும் -  உலக்கை மாதிரி  இருக்கும் என்று  சொன்னால் மிக  பொருத்தம். அதில்  சிறு  சிறு  ஆணி அடித்து  கலர்  கலராக சாதாரண நூல்கள் கம்பளி நூல்கள் நிறைய  தொங்கும்.  இதை  தோளில்  சாய்த்துக்கொண்டு   கச்சலாக  ஒரு  ஆசாமி.  கழுத்தில்  கோலி  குண்டு   (ஆங்கிலத்தில் ADAM'S  APPLE ) எச்சில் முழுங்கும் போதும்  பேசும்போதும்   உள்ளேயும்  வெளியேயும்  போய் போய்  வரும்.  மீசை தொங்கும்.   வேஷ்டி மேல்  காவி கலரில்  ஒரு  ஜிப்பா.   தலையில்  ஒரு  கலர்  துணியில்  முண்டாசு.     அழுக்காக  இருப்பான். இடது கையில்  ஒரு  வெண்கல  மணியை  அடித்துக்கொண்டு வருவான்.  திக்கி  திக்கி  தெலுங்கில்  பேசுவான். எதற்கு  இந்த  மனிதனை ஞாபகம்  வைத்துக்  கொள்ளவேண்டும் என்றால்  அங்கு  தான்  இருக்கிறது  சூட்சுமம்.  அவன்  இடது  தோளில் கண்கள்  பெரிசாக  ஒரு  தேவாங்கு  (aye aye )  அமர்ந்து கொண்டிருக்கும். அதன் இடுப்பில்  ஒரு  கயிறு  கட்டி  அதன்  மற்ற  முனை  அந்த  உலகைத்  தடியில்  சேர்த்து கட்டி வைத்திருப்பான்.   நாங்கள்  அந்த  தேவாங்கை பார்க்க  அவன்  பின்னால்  சுற்றுவோம்.எங்களை  விரட்டுவான்.  நாங்கள்  ஓடுவது போல்  பாய்ச்சல்  காட்டி விட்டு   மீண்டும் சற்று  தள்ளி  அவன்  பின்னாலேயே  செல்வோம். 

 அவன்  அரணாக்கயிறு   (அரைஞாண் ) விற்பவன்.  ஐந்தாறு வயது வரை ஆண்  பெண் குழந்தைகள் இடுப்பில் அரணாக்கயிறு கட்டும் வழக்கம்.   அதில்  தாழ்த்து, ரக்ஷை  அம்பாள் காசு எல்லாம் கோர்த்து இருக்கும்.  எல்லார்  வீட்டு  வாசலிலும்  நல்ல  வரவேற்பு.   எல்லோருக்கும்  அரணாக்கயிறை தடியிலிருந்து  கழற்றி,  அந்த  தேவாங்கின் மேல்  வைத்து அதன்  கையில் கொடுத்து வாங்கி  விற்பான்.   தேவாங்கு தொட்டு கொடுத்த் அரணாக்கயிறு  கட்டினால்  குழந்தைகளுக்கு  தோஷம் வராது  என்ற  நம்பிக்கை.  அந்த நம்பிக்கையில் தான்  அவன்  வியாபாரம் நடந்தது.  தேவாங்கு  தொட்டுக்கொடுத்த கம்பளிக்கயிறு  கழுத்திலும்  கையிலும்  கட்டி விடுவான்.   கழுத்தில் கட்டினால் அது  ரெண்டணா .  பட்டுநூல்  அரணாக்கயிறு  இடுப்பில்  கட்டி விட்டால்  ஒரு அணா.    இந்த மாதிரி  கட்டுவதற்கு  ''மந்திரிச்சு'' கயறு  கட்றதுன்னு  பேரு. அப்புறம்  சில  வருஷங்களில்  தேவாங்கை பார்க்கவில்லை.

++
காலை  எழுமணிக்கெல்லாம்   ரமணி என்று  ஒரு  பெண் இட்டிலி  கொண்டு வந்து  வீட்டில்  கொடுப்பாள்.   ஒரு  தூக்கில்  இட்டிலி,  ஒரு  பையில் சின்ன அலுமினியம் (எவர் சில்வர், பிளாஸ்டிக் எல்லாம் எங்களுக்கு தெரியாது) டிபன் பாக்ஸில்  தேங்காய் சட்னி  (நீர்க்க இருக்கும்)   மந்தாரை  இலையோ,   பாதம்  இலையோ   பையில் இருக்கும்.  சுட சுட  8 இட்டிலி  பெரிசாக  பூப்போல  இருக்கும்  மந்தாரை  இலையில்   எங்களுக்கு தலா  ரெண்டு  தரையில்    வைத்து   அதன் மேல்  நீர்க்க  சட்னி  ஊற்றுவாள்.  கண் மூடி கண் திறக்கும்  வேளையில்  இட்டிலி  கா
ணாமல் போய் விடும்.   ஆளுக்கு  ஒன்று தரச்சொல்லி  எங்க  அம்மா  ஆர்டர்.   இட்டலி  கணக்கை  ரமணி  சுவற்றில்  கோடு  போட்டுவிட்டு  போய்விடுவாள். ஒரு  நாள்  தோசை,  ஒருநாள்  பொங்கல்   எல்லாம்  ஒரு  பாலக்காட்டு  மாமி  பண்ணி  ரமணியிடம்  கொடுத்து  அனுப்புவாள். இப்படி  சந்தோஷமாக  சில  காலம்  ஓடியது.  இட்டலி  முக்கால் அணா,  பொங்கல்   ஒரு வெங்கல  பானை  அளவு  வைத்திருப்பாள்  அதற்கு   எட்டணா  வாங்குவாள். ரமணியின்  அண்ணா  பாலசுப்ரமணியன்  எங்கள்  வீட்டில் அப்பாவிடம்   இங்க்லீஷ் ட்யூஷன்  கற்றுக்கொண்டிருந்தான்.  அப்பா   அவனிடம் காசு வாங்கவில்லை.

இன்னும்  சொல்வேன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...