Thursday, July 7, 2022

arupaththu moovar



 #அறுபத்து_மூவர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

எறிபத்த நாயனார் -  

2. ''யார் செய்த குற்றம்?''

சோழ ராஜாவின் யானைக்கு எப்போதும் சர்வ சுதந்திரம் சகல மரியாதை.   யானையின் கழுத்து மணி சப்தமும்  கூட வரும் காவலர்கள்,  வாத்தியக்காரர்கள் எழுப்பும்  சப்தமும் விடியற்காலையில் எல்லோரையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டது.  தெருவில் யானை பார்க்க  கும்பல் சேர்ந்து விட்டது. அதற்குள் யானை தனக்கு முன்னே தெருவில் ஒரு ஓரமாக ''ஓம் நமச் சிவாய '' என்று உச்சரித்துக்  கொண்டு மெதுவாக முதுகில் பூக்கூடையோடு,  கம்பை ஊன்றி நடந்த சிவகாமியாண்டாரைப் பார்த்து விட்டது. முதுகில் தொங்கிய பெரிய பூக்கூடை கவனத்தை கவர்ந்தது. துதிக்கையை நீட்டி பூக்கூடையைப்  பிடுங்கி  பந்தாடியது. அத்தனை பூக்களையும் சிதறடித்து. காலால் மிதித்தது.  கூடை காலியாகி பிய்ந்து  சிதறியது .

 ''ஆஹா, அடடா, ஐயோ''  என்று மக்கள் ஆர்ப்பரிக்க, சிவகாமியாண்டார் திகைத்தார். சிலையானார். ''இன்று சிவனுக்கு எப்படி மாலை கட்டி சார்த்துவேன்?. யானை என்னையும் கொன்றிருக்கக் கூடாதா?'' என கதறினார்.

யானைப் பாகர்கள் கவலை கொண்டனர். சீக்கிரம் யானையை ஒட்டிக்கொண்டு சென்றனர். அந்த யானையைத் தண்டிக்க விரும்பினார் ஆண்டார். அவரை வீசித்  தள்ளி விட்டது யானை. சத்தி யில்லாத வராக அந்த முதியவர் நிலை தவறி விழுந்து  ''பரமேஸ் வரா, நான் என்ன பாபம் செய்தேனோ, இன்று உனக்கு புஷ்ப கைங்கரியம் செய்ய பாக்யமில்லாமல் போய் விட்டதே. என்னை மன்னித்துவிடு'' என்று அழுதார். 

''என்ன  ஆயிற்று'' என்ற பரபரப்போடு இந்த கூட்டத்தில் நுழைந்தார் எறிபத்தர். நடந்த விஷயங்களை அறிந்தார். ஓடி வந்து சிவகாமி ஆண்டாரைத்  தூக்கி நிறுத்தினார். ஆஸ்வாசப்படுத்திவிட்டு மித மிஞ்சிய கோபத்தோடு யானையைப்  பின்பற்றி ஓடினார்.

''சிவகாமி யாண்டாரை அவமதித்து துன்புறுத்திய, சிவ பூஜா கைங்கர்யத்தை கெடுத்த அந்த யானையை விட்டேனா பார்'' என்று கூவினார். அதிக கோபங் கொண்டு அதி சீக்கிரம் ஓடிப் போய் யானையை நெருங்கி அதன் மீது தனது கையில் எப்போதும் வைத்திருக்கும் கூரான மழுவை எறிந்து தாக்கினார். யானை கோபமுடன் அவரை திரும்பி தாக்க முனைந் தது. முன் கால்களை தூக்கியது. தும்பிக்கையை உயர்த்தியது. எறிபத்தரின் கோபம் இன்னும் அதிகரித்தது. சற்றும் அஞ்சாமல் அதைத் தடுத்து, அதினுடைய துதிக்கையை மழுவினால் பலத்துடன் வெட்டி துண்டாக்கினார். இதை எதிர்பாராத யானை வலி பொறுக்கமுடியாமல், ரத்தம் சிந்தி கதறிக் கீழே விழுந்து புரண்டது. இதற்குள் யானைக் காவலர்கள் கலவரமடைந்து எறிபத்தரைக்  கொல்ல நெருங்க,  இன்னும் கோபத்தோடு எறிபத்தர் அந்த ஐந்து காவலர் களையும் மடக்கி மின்னல் வேகத்தில்  புலி போல் பாய்ந்து அவர்களை கூரான மழுவுக்கு இரையாக் கினார்.

ராஜா புகழ்ச்சோழன் தன்னுடைய பட்டத்து யானையை யும் காவலர்களையும் தனி யொரு வனாக எறிபத்தர் என்பவர் கொன்றுவிட்டார் என்ற அதிர்ச்சி செய்தியை கேட்டு கோபமும் துக்கமும் கொண்டான். குதிரையில் ஏறி, சதுரங்க சேனைகளோடும் விரைந்து சென்று, யானையும் பாகர்களும்  இறந்த இடத்தை அடைந்தான்

''யார் என் யானையையும் பாகர்களையும் கொன்றவர் ? '' என்று உடைவாளை உருவினான் ராஜா.

''இதோ இவர் என்று தனிமனிதனாக எதிரே நின்ற நெற்றியில் உடலில் திருநீறு பளபளக்க, ஜடாமுடி தாரியாக, கையில் மழுவேந்திய சிவபக்தரை கண்டு திகைத்தான். ராஜாவே ஒரு சிவபக்தன். ஆகவே, அவன் எல்லோரும் கேட்க ஒரு வார்த்தை சொன்னான்.

''இப்படிப்பட்ட ஒரு சிவபக்தர் எனது யானையை கொன்றாரென்றால் அதற்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கவேண்டும் அது என்ன ?'' யானைப்பாகர்கள் செய்த குற்றம் என்ன?''

நடந்ததை கண்டவர்கள் பேசினார்கள்:
''மஹாராஜா, இதோ இந்த வயதான முதியவர் சிவகாமி ஆண்டார் .....'

'அடடா, இவரை நான் கவனிக்காதது என் தவறு. அவரை எனக்கு நன்றாகவே தெரியும். சிவ பக்தர் சிரோமணி. அனுதினமும் சிவனுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்பவர் என்று அறிவேன்''  என்ற ராஜா அவரை வணங்கினான்.

'' சிவகாமியாண்டார் பூக்கூடையை பிடுங்கி பூக்களை சிதைத்து அவரையும் கீழே தள்ளி விட்டு துன்புறுத் தியது உங்கள் பட்டத்து யானை. நான் செய்த பூர்வ ஜென்ம புண்யம் யானை அவரை தாக்கிக்  கொல்ல வில்லை '' என்றார் எறிபத்தர்.

ராஜா புகழ் சோழன் எறிபத்தர் முன்னே மண்டியிட்டு கை கூப்பினான் 

"சுவாமீ! தாங்கள் தான்  யானையைக் கொன்றீரென்று  எனக்கு தெரியாது. என் யானை செய்தது பெருங்குற்றம். அதை ஆதரித்து தங்களை தாக்க வந்த என்னுடைய வீரர்களை, பாகனை, யானையோடு சேர்த்து தாங்கள் கொன்றது போதாது. என்னுடைய ஆட்சியில் இப்படி ஒரு சிவனடியார்க்கு நேர்ந்த தீங்குக்கு, இந்த யானையையும் பாகரையும் காவலர்களையும்  கொன்றது மாத்திரம் போதாது. அபராதமாக யானைக்கு சொந்தக் காரனாக அடியேனையும் கொல்ல வேண்டும். பெரும்பாவியாகிய சிறியேனைத் தாங்கள் கையில் உள்ள மழுவினால் இங்கேயே கொல்வது பொருத்தமாகாது. இந்த ராஜாங் கத்துக்கு நீதி வழுவாத பெயர் வேண்டும். குற்றம் செய்த யானை, வீரர்கள், அவற்றை ஆதரித்த மன்னன் மூவரில் எஞ்சியிருப்பது குற்றம் செய்த மன்னன் நான் மட்டும் தான். ஆகவே சிவனடியார் தாக்கப்பட்டதற்கு, சிவ பூஜை புஷ்ப கைங்கர்யம் தடை பட்டதற்கு பொறுப் பேற்ற அந்த அரசனின் வாளினால் இந்த குற்றம் செய்த அரசனையும் இங்கேயே சிரச்சேதம் செய்து தண்டிக்க வேண்டும்.'' என ராஜா உடைவாளை எறிபத்தரிடம் நீட்டினான்.

எறிபத்தர் அமைதியாக ''சிறந்த பட்டத்து யானையை இழந்தும் , வீரர்களை இழந்த  துக்கத்தையும் பொருட் 5343cபடுத்தாது, ஒரு சிவபக்தருக்கு தீங்கு நேர்ந்ததற்கு காரணமாக தன்னுடைய உயிரையே தியாகம் செய்ய துணிந்த ஒரு அரசனை, சிவபக்தனான உங்களைக் , கொல்லும் பாபம் எனக்கு வேண்டாம். அதற்கு முன் என்னுயிரை தியாகம் செய்வது தான் சிறந்த தீர்ப்பு"  என்று  சொல்லி புகழ்ச்சோழ ராஜா  தந்த உடைவாளால்  தன் கழுத்தை  அறுத்துக்கொள்ள முயன்றார்.

''ஐயோ,இது என்ன அக்கிரமம். சுவாமி நில்லுங்கள்'. புகழ்ச்சோழன் விரைந்து எறிபத்தர் கையிலிருந்த வாளை பிடுங்கினான். அப்போது எல்லோரும் கேட்க ஒரு அசரீரி பலத்த குரலில் ஒலித்தது: 

"இன்று நடந்தது அனைத்தும் சிவபெருமானின் சங்கல்பம். அடியார்களுடைய தொண்டை உலகத்திலே வெளிப்படுத்த யானை புஷ்பத்தைச் சிதறும்படி பரமசிவன் திட்டமிட்டு எறி பத்தரின் தண்டனைக்கு உட்படுத்தினார்''

இன்னொரு ஆச்சர்யமும் தொடர்ந்தது. தூக்கத்தில் இருந்து விழிப்பது போல் யானையும் பாகனும் வீரர்களும் உயிர்பெற்று எழுந்து ராஜாவையும்  எறிபத்தரையும் வணங்கினர். புகழ்ச் சோழன் வாளை வீசி எறிந்து விட்டு எறிபத்தர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். பரம சிவனுடைய திருவருளினாலே சிவகாமி ஆண்டார் பூக்கூடை புஷ்பங்களோடு நிரம்பி வழிந்தது. சிவகாமியாண்டார் அதைக் கண்டு மகிழ்ச் சியடைந்தார். பாகன் யானையை வழி நடத்தி அழைத்துக் கொண்டு போனான். ஏதோ ஒரு கனவுக் காட்சி போல் அனைத்தும் நடந்து முடிந்தது. '' ஓம் நமச்சிவாய'' என்ற அடிவயிற்றிலிருந்து எழுந்த உரத்த நாமம் எறிபத்தர் வாயிலிருந்து புறப்பட்டு எங்கும் எதிரொலித்தது.

கருவூரில் (கரூர்) இன்றும் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், சம்பவம் நடந்த இடத்தில் நிற்கும் புகழ்ச்சோழ மண்டபம் எல்லாவற்றையும் படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...