Sunday, July 24, 2022

SRIMADH BAGAVATHAM KALIYUGAM

 

இப்போதைக்கு அப்போதே  சொன்ன சுகர் 
நங்கநல்லூர்  J K  SIVAN 


ஏதாவது ஒன்று நடக்கப்போகிறது என்று ஏற்கனவே  தெரியாவிட்டால்  தான் அதிர்ச்சி. எதிர்பார்த்தது நடக்கிறது  என்றால்  அதை ஏற்று, அதற்கேற்ப  நம்மை தயார்  படுத்திக்கொண்டு அட்ஜஸ்ட் பண்ணிக்  கொள்ளவேண்டும். அது தான் புத்திசாலித்தனம்.  இன்றோ நேற்றோ அல்ல   ஐந்தாயிரம் வருஷங்களுக்கு முன்பே  இது தெரிந்த விஷயம்.  கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக்கொண்டே வரும்போது  தான் பாதிப்பு  தெரிகிறது.  ஸ்டாக் இன்னும் நிறையவே இருக்கிறது.

''udaraṁ-bharatā svārthaḥ  satyatve dhārṣṭyam eva hi
dākṣyaṁ kuṭumba-bharaṇaṁ yaśo-’rthe dharma-sevanam''

உத³ரம்ப⁴ரதா ஸ்வார்த:² ஸத்யத்வே தா⁴ர்ஷ்ட்யமேவ ஹி ॥ 6॥
தா³க்ஷ்யம் குடும்ப³ப⁴ரணம் யஶோऽர்தே² த⁴ர்மஸேவநம் । ஸ்ரீமத் பாகவதம்  12.2.6

  ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.6 ல் அப்போதே  ''இப்போது''   எப்படியிருக்கும்  நிலைமை என்று பளிச்சென்று கணித்து விட்டார் 
சுகப்பிரம்ம ரிஷி.  அவர் ரொம்ப  விசித்ரமானவர்.   நமக்கு இன்று இன்னும் ஒரு மணி நேரத்தில்  என்ன  நடக்கப் போகிறது  என்பதே தெரியவில்லை.


''முனி புங்கவரே,  கலிகாலம் ஆரம்பித்துவிட்டதே. இந்த கலிகாலத்தில் இன்னும் என்ன நடக்கும்? என்று கேட்கிறான் பரீக்ஷித். அவனைப் பொருத்தவரை  தனக்கு என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்தவன் . அவன் வாழ்க்கை இன்னும் 7 நாள் தான்.   தக்ஷகன் எனும்  கொடிய சர்ப்பம் தீண்டி மரணம் நிச்சயம். அது வரை எதிர்காலத்தில் எப்போது என்ன நடக்கப்போகிறது என்று அறிந்து கொள்கிறான்.

ஹே ராஜன், சொல்கிறேன் கேள். கலியுகத்தில் எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் என்று ஆகும். உண்பதே உடல் எடுத்ததின் காரணம். அடாவடி, அதிரடி தில்லு முல்லு , அக்கிரமம், பொய் , அதிகார துஷ்ப்ரயோகம், பணத்தின் பாபச்  செயல்,தான் சாத்தியமாகும். சத்தியமும் ஆகும். தன் குடும்பத்தை காப்பதே பெரிய உயர்ந்த தியாகச் செயல் என்று  ஆகியிரும்.  குடும்பம் சிதறிவிடும். 

 எவனிடம் அதிகமாக சொத்து, காசு சேர்கிறதோ அவன் சொல் ஒன்றே வேத வாக்கு. அந்த சொத்து காசு வகையறா எப்படி சேர்ந்தது என்பது முக்கியமில்லை. அது சாமர்த்தியமாக போற்றப்படும். அவனையே சிறந்த தலைவனாக, அறிவாளியாக, கௌரவம் கொண்டவனாக, யுக  புருஷனாக கை தட்டி வரவேற்பார்கள்.

எவன் ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு தனது காரியம் நிறைவேற மற்றவர்களுக்கு வயிறார உணவு அளிக்கிறானோ அவன் தெய்வமாக கொண்டாடப் படுவான். ஏனென்றால் கலியுகத்தில் பசி மக்களை வாட்டும். அலைக்கழிக்கும். உணவின் வாசனை கூட கிட்டாதவனுக்கு ஒருவேளை ஒரு நாள் சாப்பாடு பரிபூர்ண திருப்தியை ஆனந்தத்தை அளிக்கும் அல்லவா.

''satyatve dhārṣṭyam eva hi'' கலியுகத்தில் பேச்சு தான் முக்யத்வம் அடையும். எவனால் மற்றவனை மட்டம் தட்டி பொய்யும் கற்பனையும் கலந்து பேச, அல்ல, கெட்ட வார்த்தைகளால்  இகழ முடியுமோ அவன் தான் யோக்ய மானவன், சிறந்த தலைவன்  என்று கருதப்படுவான். வார்த்தை ஜாலம் தான் அவனது சக்தி ஆயுதம் ஆகும். அதுவே சத்யம் ஆகும்.

dakṣyaṁkuṭumba-bharaṇam: மனைவி மக்களை வீட்டில் சௌகர்யமாக வசதிகளோடு காப்பதே அரும் பெரும் செயலாகும். ரெண்டுக்கு மேல் குழந்தைகள் இருந்தாலே அவன் பாடு தர்ம சங்கடம். உணவு, உடை, மருந்து, கல்வி, -- அப்பப்பா இதை சமாளிக்கவே அவன் என்னவெல்லாம் செய்யவேண்டியிருக்கும் என்று சுகர் தெரிந்து வைத்திருக்கிறார். அப்பல்லோ மருத்துவ செலவுகள் பற்றி முன்பே தெரியும் போல் இருக்கிறது.
திருமணம் என்றால் ஓட்டமாக ஓடிவிடுவான். அதனால் திருமணமற்ற உறவு புழக்கத்திலா பழக்கத்திலா? ''மணம்புரியா  தம்பதிகளாக''சேர்ந்து , ஆணோடு ஆணும் சேர்ந்து,  அது நேரும்.


''evaṁ prajābhir duṣṭābhir ākīrṇe kṣiti-maṇḍale
brahma-viṭ-kṣatra-śūdrāṇāṁ  yo balī bhavitā nṛpaḥ'' 

ஏவம் ப்ரஜாபி⁴ர்து³ஷ்டாபி⁴ராகீர்ணே க்ஷிதிமண்ட³லே
 ப்³ரஹ்மவிட்க்ஷத்ரஶூத்³ராணாம் யோ ப³லீ ப⁴விதா ந்ரு’ப:   ஸ்ரீமத் பாகவதம் 12.2.7

ஐயா சுக ப்ரம்ம மகரிஷியே,  நீர் எந்த அளவுக்கு மஹா யோகி, எதிர்காலத்தை துல்லியமாக கணிப்பவர் என்பது நன்றாகவே தெரிகிறது. இன்றைக்கு காலை சுடச்சுட தினத்தந்தி, தினமலர், தினகரன் (அவரைப் பற்றியும் கூட) டிவியில் சில சேனல்கள் பார்த்துவிட்டு வந்து பேசுவது போல் சொல்கிறீர்களே.
ஆமாம் தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற பழமொழி கேட்டிருக்கிறேன். அதை நடைமுறையில் பார்க்கிறேன். லஞ்சம், ஊழல், அக்கிரமம், அனாச்சாரம், எல்லாம் தலைக்குமேலே போய்விட்ட நேரத்தில் இப்படிப்பட்ட ஜனங்களுக்கு இடையே எவன் மிக சிறந்த அயோக்கியனோ அவனே யோக்கியன் என்று நாடு அறிந்து கொண்டுள்ளது இப்போது.  எப்படி உமக்கு இது தெரிந்தது அப்போதே?

ஆடையிலாதவன் ஊரில் கோவணாண்டி கேலிக்கிட மாவான். சிரிக்கப்படுவான். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பார்களே அப்படியென்றால் நாமெல்லாம் நம்மை ஆள்பவர்கள் போல் தான் ஆசாமிகளா. ஏன்  கண்ணாடி  பார்த்து தெரிந்து கொள்ளவேண்டுமா? எல்லோருமே இப்படி என்றால் யாரையும் குறை சொல்வது மஹா தப்பு அல்லவா? உன்னை நீ பார்த்துக்கொள் அப்படித்தான் எல்லோருமே. அதை தான் ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்கிறார்களோ?
.
''கோனுயர குடி உயரும்'' என்ற பிரகாரம் ஆள்பவன் தூய்மையாக கைகள் நீளமில்லாமல் சரியான அளவில் இருந்தால் குடி என்ற ''குடி'' மக்கள் அவ்வாறே கண்ணாடியில் பார்ப்பது போல் பிரதிபலிப்பார்களாம். இங்கே 'குடி' யும் ம்  அதன் விலையும்  உயர்ந்து கொண்டே போகிறதே. எங்கும் கலாட்டா நடக்கிறது. அப்படியும் நிறைய தாக சாந்தி தீர்க்கும் இடங்கள் இருக்கும் குடி தான் உயர்கிறது.  இதற்கு மேல் இதை விவரிப்பது அனாவசியம் என்பதால் அடுத்த  ஸ்லோகத்தில்  சுக ப்ரம்ம ரிஷி கலிகாலத்தில் என்ன என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்கிறார்,பார்ப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...