Thursday, July 28, 2022

badra giriyar

 பத்திரகிரியார் சரித்திரம் - #நங்கநல்லூர்_J_K_SIVAN --

எப்போது எல்லாவற்றையும் வெறுக்கிrறோம் ? ஏமாற்றத்தை ஜீரணிக்க முடியாமல் போகும்போது. எதிர்பார்ப்பு எதிர்ப்பாக மாறும்போது. ஆசை நிராசையாகும்போது. கனவு கைகூடாதபோது. நம்பிக்கை துரோகம் அதிர்ச்சி தரும்போது இதெல்லாம் காரணம் எனலாம்.
சகல சௌபாக்கியங்களும் கொண்ட ராஜா பர்த்ருஹரி ஆசை மனைவியின் பச்சை துரோகத்தால் மனமுடைந்து நாட்டை துறந்து காட்டை நோக்கினான். தவமிருந்தான். மனம் ஒருநிலைப்பட்டது. நடந்தான் தெற்கே வந்தான். தமிழ் கற்றான். திருவிடை மருதூரில் பட்டினத் தாரை தரிசித்து சீடனானான்.அவனது மனக்குமுறல் 'பத்ரகிரியார் புலம்பல்'' என்ற ரெண்டடி தத்துவப் பாடள்களாகியது.
உஜ்ஜைனி ராஜா பர்த்ருஹரி நாட்டைத் துறக்கும் முன்பு நடந்த ஒரு சம்பவம்.
பட்டினத்தார் வடக்கே ஸ்தல யாத்திரை சென்றபோது உஜ்ஜைனி மாகாளபுரத்திற்குச் செல்கிறார். மஹா காளேசுவரரை வணங்கி விட்டு ஊருக்கு வெளியே இரவில் ஒரு காட்டுப் பகுதியில் ஒரு பிள்ளையார் கோவிலில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார்.
அன்றிரவு ஒரு திருடன் ராஜா பர்த்ருஹரியின் உஜ்ஜைனி அரண்மனை அந்தப்புரத்தில் திருடும்போது காவலாளிகள் பார்த்துவிட்டார்கள். ராணியின் முத்து மாலையைத் திருடன் எடுத்துக்கொண்டு தப்பி ஓடினான். வீரர்கள் வேகமாக துரத்தியதால் திருடன் காட்டுப்பக்கம் ஓடியவன் காட்டுப்பகுதியில் இருந்த பிள்ளையார் மேல் அந்த முத்து மாலையைத் தூக்கி எறிந்தான். ஆனால் அவன் எறிந்த முத்து மாலை பிள்ளையார் எதிரில் நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. பட்டினத்தாருக்கு நடந்தது ஒன்று தெரியாத சமாதி நிலை.
திருடனைத் துரத்திய ராஜாவின் காவலர்கள் ராணியின் முத்து மாலையை அணிந்து உட்கார்ந்திருந்த பட்டினத்தாரை துறவி வேஷம் போடும் திருடன் என்று பிடித்துக்கொண்டு போய் ராஜா பர்த்ருஹரியின் முன் நிறுத்த அவன் கோபத்தோடு தீர விசாரிக்காமல் பட்டினத்தாரைக் கழுவிலேற்ற ஆணையிட்டான்.
கழுமரத்தில் மேல் ஏற்றப்பட்ட நேரம் பட்டினத்தாருக்கு நிஷ்டை கலைந்தது. விஷயம் அறிந்தார். பரமேஸ்வரனை நினைத்து ஒரு பாடல் பாட அந்தக் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. இது தான் அந்த அற்புத பட்டினத்தார் பாடல்:
''என்செய லாவதியாதொன்று மில்லை; இனித்தெய்வமே
உன்செய லெயென் றுணரப் பெற்றேன்; இந்த வூனெடுத்த
பின்செய்த தீவினையாதொன்று மில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோலிங்ங னேவந்து மூண்டதுவே''
பரமேசா, எல்லாம் உன் செயல். நான் எதை நினைத்து எதைச் செய்ய இயலும்? இந்த மாமிச பிண்ட உடல் எடுத்து நான் நினைவறிந்து தவறு செய்யவில்லை. ஒருவேளை நான் முற்புறவிகளில் சேந்த தீவினை, பாபங்கள் இங்கே கழுமரமாகி என்னைப் பிளக்கவந்ததோ?''
பட்டினத்தார் பாடல்கள் எளிமையானவை, சுலபமாக அர்த்தம் புரியும். இந்த அதிசயத்தை கண்ட அந்தக் கணமே ஞானம் பெற்றான் ராஜா பர்த்ருஹரி. பின்னர் பட்டினத்தார் சிஷ்யனாக பத்திர கிரியாரானான் .
இறந்து போன பர்த்ருஹரியின் மனைவி திருவிடை மருதூரில் ஒரு நாயாக பிறந்து அவரைச் சுற்றி வந்தது. பத்திரகிரியார் வீசிய திருவோடு மண்டையில் பட்டு அந்த நாயும் இறந்தது. திருவோடும் உடைந்தது. முற்பிறவி ஞாபகம் வந்து, திருவிடைமருதூருக்கு வந்தாள். பத்திரகிரியாரிடம், “துறவியாகிய தங்கள் எச்சில் சோறு உண்டு வளர்ந்த நாய் நான் தான். எனக்கு முக்தி கிடைக்க வேண்டும்''என்று முறையிட்டாள். அவர் மருதூர் இறைவனிடம் முறையிட அங்கே கிளம்பிய ஜோதியில் இருவரும் முக்தி பெற்றனர்.
திருவிடை மருதூர் மஹாலிங்கத்தை வரகுண பாண்டியன், பத்திரகிரியார், பட்டினத்தார், ஸ்ரீதர் ஐயாவாள் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இத்தலம் நான்கு தேரோடும் வீதி நான்கு மடவிளாகம் கொண்டு அழகிய ஊராக விளங்குகிறது. தேரோடும் வீதிகளில் கீழைவீதியில் விஸ்வநாதர் ஆலயமும் தெற்கு வீதியில் அருள்மிகு ஆத்மநாதர் ஆலயமும் மேலை வீதியில் ரிஷிபுரீஸ்வரர் ஆலயமும் வடக்கு வீதியில் அருள்மிகு சொக்கநாதர் ஆலயமும் அமைய நடுநாயகமாக மஹாலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தலம் ஒரு பஞ்சலிங்கத் தலம் . நாலு பக்கமும் நான்கு சிவாலயங்கள். நடுவே திருவிடைமருதூர் ஸ்தலம். கிழக்கே பாணாபுரம்.பாணாபுரீஸ்வரர் ஆலயம். தெற்கே திருநீலக்குடியில் மனோக்கிய நாத சுவாமி ஆலயம், மேற்கே திருபுவனம் கம்பஹரேஸ்வரர் திருக்கோயில் .வடக்கே இடங்கொண்டீச்சுரம் (கல்யாணபுரம்) அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் ஆலயம். சித்தர்கள் பலர் தரிசித்த ஸ்தலம்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் முக்தி அடைந்த பத்திரகிரியார் எழுதிய மெய்ஞான புலம்பல் நூல் சித்தர் நூல்களில் தனித்துவம் வாய்ந்தது. எளிய தமிழில் பொருள் உணரும் வகையில் எழுதப்பட்டவை பத்திரகிரியார் முக்தி அடைந்த இடம் கிழக்கு மாட வீதியில் 'நாயடியார் கோயில்' என்று அடையாளம் காட்டுகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...