Tuesday, July 5, 2022

THIRUVANNAMALAI


 


அக்னி க்ஷேத்திரம் -   நங்கநல்லூர்  J K  SIVAN 


திருவண்ணாமலைக்கு ஒருகாலத்தில்  திரு அண்ணா நாடு என்று  பெயர் இருந்ததாம். 

அண்ணாமலையானை மஹாதேவா  என்று  அழைத்து  வழிபட்டார்கள்.  பல்லவ ராஜ்யத்தில்  இது தொண்டை மண்டலத்தை சேர்ந்தது.  நிறைய  எளிதில் ஏறமுடியாத கரடு முரடு மலைகள்  இருந்தது.  திருவண்ணாமலைக்கு இன்னும் வேறு சில பெயர்களும் உண்டு. புனித அண்ணாமலை ,திருவண்ணாமலை, அருணா சலேஸ்வரம்,   சிவலோகம், சோணகிரி, சோணாசலம், சுணசைலம், அருணாத்ரி, அருணகிரி, சோணகிரி,  சுதர்சனகிரி, ஜோதி லிங்கம்,  தேஜோலிங்கம், லிங்கஸ்தானம், என்றெல்லாம் பேர் பெற்றது.  சிவனை  அன்போடு  அருணாச்சலேஸ்வரா  அண்ணாமலை என்று பாடினார்கள்.  வடபெண்ணை தென்  பெண்ணைக்கு இடையே இருப்து. அகஸ்தியர் தொல்காப்பியர் போன்ற புராதன முனிவர் களால் தரிசிக்கப்பட்டவர்  இந்த  அருணாசலேஸ்வரர். 
வேதங்களாலும்  புராணங்களாலும்  சகல க்ஷேத்திரங்களிலும்  உயர்ந்த உன்னதமான  அக்னி க்ஷேத்ரம்   என்று பெருமையாக பேசப்படுவது  திருவண்ணாமலை. 

ஒருவன் மோக்ஷம் பெற  சிதம்பரம் போகவேண்டும், அல்லது  திருவாரூரில் பிறக்க வேண்டும், இல்லையென்றால்  காசியில் இறக்கவேண்டும், ஆனால் அவன் சைதாப்பேட்டையில் இருந்தாலும்   உட்கார்ந்த இடத்திலேயே  அவன் திருவண்ணாமலையை நினைத்தாலே மோக்ஷம் பெறலாம் என்று பேசப்படும் க்ஷேத்ரம். முக்திஸ்தலம்.  இங்கு என்ன விசேஷம் தெரியுமா?  திருவண்ணாமலையும்  அண்ணாமலை யாரும் வேறல்ல  ஒன்றே.  திருவண்ணாமலை தான் அருணாச்சலேஸ்வரர். திருவண்ணாமலை மேல் தீபம் ஏற்றுவது  அருணாச்சலேஸ்வரரை  ஜோதிஸ்வரூபமாக பார்க்க தரிசிக்கவே.

தமிழ்ச் சங்ககால நக்கீரரே கூட  ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையை பாடியிருக்கிறார்.  எவ்வளவோ  அளவு குறைந்து  விட்டாலும் இப்போதும் 25  ஏக்கருக்கு குறைவில்லாமல்  பரவி இருக்கிறது. எத்தனையோ ராஜ வம்சங்களை  அசையாமல்  அண்ணாமலை பார்த்திருக்கிறது.   

புத்தியும்  அகங்காரமும்   உந்த,  தங்களில் யார் உயர்ந்தவர்  என்று ப்ரம்மாவும்  விஷ்ணுவும் போட்டியிட்டார்கள் . ஆத்மாவே சகலத்திலும் உயர்ந்தது   அடி  முடி காணாதது  என்று நிரூபிக்க  ஸ்தாணு லிங்கமாக வளர்ந்த சிவனை இருவரும் தேடி கர்வம் அழிந்து ஞானம் பெற்ற  புராண கதை எல்லோரும் அறிந்தது.  தெரியாதவர்களுக்காக  சுருக்கமாக ஒரு கதை சொல்கிறேன்.

ப்ரம்மாவுக்கு  பஞ்சபூதங்களை  சகல ஜீவராசிக ளையும்  ''நான் தான் ஸ்ருஷ்டிக்கிறேன்'' என்று பெருமை. 

''நீ படைத்த அனைத்தையும்  ரக்ஷிப்பவன்  நான் என்பது ஞாபகமிருக்கட்டும். என் சங்கல்பமில்லாமல்  படைப்பு கள் எப்படி வாழமுடியும்''   ஆகவே நான் தான் உன்னைவிட பெரியவன்'' என்று விஷ்ணுவின் வாதம். 

பரமசிவன்  இவர்கள் ரெண்டு பேருக்கும்  உண்மை புரியவில்லையே என்று உணர்த்த முன்வந்தார்.  இருவரிடமும் ஒரு  விஷயம் சொன்னார்:

'' ப்ரம்மா, விஷ்ணு  ரெண்டு பேருமே  கேளுங்கள்.   இங்கே ஒரு  ஒளி ஸ்தம்பம் உருவாகும். அதன் அடியை யோ  முடியையோ யார் முதலில் பார்த்துவிட்டு வந்து சொல்கிறீர்களோ அவரே  உங்களில் பெரியவர்,   கிளம்புங்கள் என்று   இருவரையும்   அனுப்பினார். 

ஒரு  ஜோதி ஸ்தம்பம்  கண்ணைக் கூசும் பிரகாசமாக  அக்னி பிழம்பாக  உயர்ந்து நின்றது. ''நான் முடியைக் கண்டுபிடித்து சொல்கிறேன்''  என்று ப்ரம்மா ஒரு அன்னமாக  மேலே  பறந்தார். உயர உயர பறந்தும்  ஒலிஸ்தம்பம் முடிவில்லாமல்   எல்லையில்லாமல் உயர்ந்து கொண்டே வந்தது.   

ஒரு  வராகமாக விஷ்ணு  பாதாளமெல்லாம் குடைந்து தேடியும் இன்னும்  ஆழமாக எங்கோ  கீழ் நோக்கி அந்த ஒளி ஸ்தம்பம்  போய்க்கொண்டே இருந்தது.   ரெண்டு பெரும்  ஆயிரம்  வருஷங்களுக்கு மேலே தேடி  அலுத்தனர். இருவருக்கும்  இது சாதாரண ஒளி அல்ல. பரமேஸ்வரன் ஞான ஒளி என்று புரிந்தது. 

விஷ்ணு  அருணாச்சலேஸ்வரரிடம் வந்து  '' என்னால்  அடியைக் காண இயலவில்லை'' என்று ஒப்புக் கொண் டார். 

ஒரு  நிலையில் ப்ரம்மாவின் மேலே மேலே பறக்க முடியாமல் இறங்கினார். வழியில் ஒரு தாழம்பூவை பார்த்தார்.  

'' நீ எங்கிருந்து  வருகிறாய்?
''பிரம்ம தேவா, அதை ஏன் கேட்கிறாய். நான்  அந்த ஒளி ஸ்தம்பத்தின்  தலை  முடியை பார்த்துவிட்டு இப்போது தான் கீழே வந்து கொண்டிருக்கிறேன்''  என்றது  தாழம்பூ.
பிரம்மாவுக்கு ஒரு ஐடியா .''விநாச காலே  விபரீத புத்தி ''என்று  எனோ அவருக்கு உதயமாகவில்லை. 

'ஹே  தாழம்பூவே,  நானும் உன்னோடு  இந்த ஒளிப்பிழம்பின்  உச்சாணி முடியை பார்த்ததாக சொல்கிறாயா?'' என்கிறார் ப்ரம்மா.

''இதில் எனக்கென்ன கஷ்டமா, நஷ்டமா''  என்றது தாழம்பூ.  

விஷ்ணுவிடம் சென்று ''உன்னால் அடியை காண முடியவில்லை, நான் பார் முடியைக் கண்டுவிட்டேன். இதோ இந்த தாழம்பூவும் என்னோடு பார்த்தது. அதுவே சாக்ஷி. அதையே கேள்''  என்கிறார் ப்ரம்மா.  தானே பெரியவன் என்று நிரூபித்ததாக எண்ணம்.

இதை பார்த்துக் கொண்டிருந்த அருணாசசலேஸ்வர னுக்கு  உண்மை தெரியுமே.

'ப்ரம்மதேவா, நீ சொல்வது உண்மையா?

''ஆமாம்  ஹரா, என்று தலையை ஆட்டினார் ப்ரம்மா

''பாவம் விஷ்ணுவால் அடியைக் காண முடியவில்லை''  என்கிறார்.  நீங்கள் இருவருமே மகா சக்தி வாய்ந்த வர்கள், இதில் யார் பெரியவர் யார் சிறியவர் எனும்  கேள்விக்கே இடமில்லை  என்றாலும்  ப்ரம்மா,   நீ சொன்ன  பொய்  உனக்கே தெரியும் நான் சொல்ல வேண்டாம். உனக்கு ஒரு தண்டனை அதனால் என்ன தெரியுமா?பூலோகத்தில் உனக்கு  இனி ஆலயங்கள் கிடையாது. பக்தர்கள் உன்னை வழிபட வாய்ப்பில்லை.  தாழம்பூவே நீயும் இதற்கு உடந்தையானதால் இனி உன்னை ஆலயங்களில் வழிபாட்டுக்  குகந்த மலராக ஏற்க மாட்டார்கள் '' என்றார் பரமேஸ்வரன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...