Sunday, July 31, 2022

KALIYUGAM

அப்போதே சொன்ன சுகர்:   நங்கநல்லூர்  J K  SIVAN  
கலிகாலம்  5


अनाढ्यतैवासाधुत्वे साधुत्वे दम्भ एव तु । स्वीकार एव चोद्वाहे स्न‍ानमेव प्रसाधनम् ॥ ५ ॥  ஸ்ரீமத் பாகவதம்  12.2.5
anadhyataivasadhutve sadhutve dambha eva tu  svikara eva codvahe snanam eva prasadhanam

பாவம், இன்னும் ஏழு நாளில் சாகப்போகிறவனை  சுகப்பிரம்ம ரிஷி பயமுறுத்துகிறார் என்று சொல்லலாமா?  கலியுகத்தில்  எப்படியெல்லாம் மனிதர்கள் நடந்து கொல்வார்கள், அதாவது இப்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம்  என்பதை அப்படியே  சுகர்  அப்போதே தெரிந்து வைத்திருக்கிறார். ஞானக்கண்ணுக்கு  நல்ல பவர்  இருக்கிறது.

 ரெண்டு மூணு நாளைக்கு ஒரு தரம் குளிப்பவனே  சுத்தமானவன் என்று போற்றப்படுவான்...ஒருவரை ஒருவர் மனமார விரும்புவதே தாம்பத்யம். அக்னி சாட்சியாக, சப்த பதி  சுற்றி வரும் அர்த்தம் எத்தனையோ  பேருக்கு இன்னும்  தெரிந்து கொள்ள விருப்பமிலையே. கல்யாணம் என்பது  ஒரு வியாபாரமாகிவிட்டது. அங்கே குணம் காணோம். பணம் விளையாடுகிறது. 
 ஏதோ ஒரு வேகத்தில், தப்புக் கணக்கில் திரு மணங் கள் நடைபெறும். சூரியனைக் கண்ட பனித்துளி போல் திருமண உறவு  மறையும். வெகுநாள் நிலைப்ப தில்லை.  திருமணம்  என்பது புனிதமான ஆயிரங்கால பயிர் என்பது சும்மா. எந்த அவலையோ நினைத்து எந்த உரலையோ இடித்த விவகாரம், சமையல்,  சத்திர கண்டிராக்டர்களை மகிழ வைக்க ஒரு வசதி ஆகிவிட்டது.

நமது முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் கல்யாணம் செய்து கொள்ளும்போது , தப்பு தப்பு, அவருக்கு கல்யாணம் செய்து வைக்கப்பட்டபோது அவர் 8 வயது சிறுவனாம் .

யாரையோ போய் சொல்வானேன்.   எனது  தாய்க்கு  கல்யாணம் நடந்தபோது  பன்னிரண்டு  வயது.  அப்பாவுக்கு 18 . கல்யாணங்கள்  ஜாதகப் பொருத்தம் பார்த்து நடந்தது அப்போது.  இப்போது   ஜாதகத்தில்  'மூணு கேள்விக்கு ஐநூறு ரூபாய். ஒரு கேள்வி எக்ஸ்ட்ரா கேட்கலாம்''
பால்ய உறவு அன்யோன்யம் கடைசி வரையில் அப்போது தொடர்ந்தது. ஒருவரை விட்டு ஒருவர் பிரியவே இல்லை.   இப்போதும் எனக்கு தெரிந்து  வெகுகாலம் சேர்ந்து வாழ்ந்த ஒரு சில கணவன் மனைவியர் வயதான காலத்தில் ஒருவர் பிரிந்தால் சீக்கிரமே மற்றவரும் பிரிந்துவிடுவது கண்ணில் நீர்த்தேக்கம் உண்டாக்குகிறது.

அதிசயமாக  இப்போது கருப்பு கோட்டுகள்   நீதிமன்றத்தில்  கணவன் மனைவியை பிரிக்க  உபயோகிக்கும் அஸ்திரம்  ''ஆண்மை/பெண்மை குறைபாடு''  . இது  அப்போதே  சுகப்பிரம்ம ரிஷிக்கு தெரிந்திருக்கிறது.

 கலிகாலத்தில்  பணம் தான் குணத்தை நிர்ணயம் செய்யும். படிப்பு யோக்கியதாம்சம் எல்லாம் ஏட்டில் யாருக்கோ எழுதி வைக்கப்பட்டது.  காசு இருக்கிறவன் படிக்கவே வேண்டாம்.  பதவி காத்திருக்கும். பல  சர்வகலாசாலைகள் அவனுக்கு டாக்டர் பட்டம் கழுத்தில் மாட்டும். 

சுகர் இன்னொரு   ஷாக் கொடுக்கிறார்.  கலியுகத்தில்    கையிலே காசு  வாயிலே  தோசை தவிர    நீதி நேர்மை காசுக்கு, அதிகாரத்தால் அந்தஸ்தால்  கிடைக்கும் வஸ்து என்கிறார். '' காட்சியான பணம் கைவிட்டு போன பின் சாட்சி கோர்ட் ஏறாதடா'' பாட்டு   நிறைய தடவை கேட்டாகிவிட்டது.

சுகர் யூ ட்யூப்  பார்க்காமலேயே  நிறைய சொல்லியிருக்கிறார் இப்போதைய நிலவரம் பற்றி.  கலிகாலத்தில்  நிறைய பேசுவார்கள். பேசுபவன் எல்லாம் விஷய ஞானம் அறிந்த பண்டிதனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. மற்றவனை எப்படியெல்லாம் கீழ்த்தரமாக மட்டமாக கொச்சையாக திட்டமுடியுமோ அதை அடுக்குச் சொல்லாக அடுக்கி அடுக்கி சொன்னால் போதும்.  யாருக்கும் புரியாமல் பேசுபவன் மஹா பண்டிதன். எங்கும் கோயபெல்ஸ்கள் நிறைந்து விடுவார்கள்  என்கிறார். 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...