Sunday, July 31, 2022

ETERNAL LOAN

 தீராத கடன்.   -   நங்கநல்லூர் J K  SIVAN


 
உலகிலேயே  அதிகமான  தெய்வங்களும் ஆலயங்களும் புண்ய ஸ்தலங்களும் உள்ள நாடு நமது பாரத தேசம் என்று தாராளமாக சொல்லலாம்.  எண்ணற்ற அதிசயங்கள் பல யுகங்களாக நடந்து இன்றும் தொடர்கிறது. தென்னிந்தியாவில் ஆலயங்கள் அதிகமாக  இருப்பதன் காரணம் வட இந்தியாவில்   தொடர்ந்து பல பிற மத வெறியர்கள், அந்நியர் ஆக்கிரமிப்பில்  தாக்குதலில்  பல ஆலயங்கள் அழிந்துவிட்டன. ஆனால் பக்தியை எதாலும்  எவராலும் அழிக்க முடியவில்லை.

பல அதிசயங்களை  தன்னுள் கொண்டது  திருப்பதி  திருமலை வேங்கடேச  பெருமாளின்
 ஆலயம்.   உலகில்  செல்வம் கொழிக்கும்  தன்னிகரற்ற  பிரசித்தமான ஆலயம். ஆந்திரா சித்தூர் ஜில்லாவில் உள்ளது. சென்னை மாநகரத்திலிருந்து சில மணி நேரங்களில் செல்ல முடியும். கலியுகத்தில் பூலோக வைகுண்டம்  என போற்றப்படுவது. மஹா விஷ்ணு கலியுக வரதன்  வேங்கடேசனாக  நின்றருள் புரிவதை பல மணிநேரம்  கால்கடுக்க நின்று ஒரு வினாடியில் கண்டு மகிழ பக்தர்கள் கூட்டம் மொட்டைத்தலையோடு  அலைமோதுகிறது.

 கிட்டத்தட்ட  நானூறு கூடி ரூபாய் சொத்துள்ள  ஆலயம்.  லக்ஷக்கணக்காக ஒவ்வொரு நாளும் பக்தர்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து தரிசிக்கும்  க்ஷேத்ரம்.  வருஷத்துக்கு  சுமார்  700 கோடி ரூபாய் காணிக்கை பெறுகின்ற  பெருமாள் வேங்கடேசன்,  வேங்கடாசலன்.  தன்னைச் சுற்றி  ஏழுமலைகள் கொண்ட ஏழுமலையான். பக்தர்கள் குறை தீர்ப்பதற்கென்றே உருவான ஸ்ரீனிவாசன், பாலாஜி.   எண்ணற்ற மஹான்கள் தரிசித்த  ஆலயம்.   வேங்கடேசன்  நிற்கும் ஆலயம் உள்ள மலை சேஷாசலம், சேஷகிரி, ஆதிசேஷன் மலையாக நிற்கும்  வேங்கடாத்ரி ஸ்தலம்.  இந்த ஏழு மலைகள் தொடர்ச்சியாக  ஸ்ரீ சைலம் வரை பரவி நிற்கிறது.  மற்ற  ஆறு மலைகள்  ரிஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, கருடாத்திரி, நாராயணாத்ரி, சேஷாத்ரி.

தேவர்கள் ரிஷிகள் ஒரு பெரிய யாகம் வளர்க்க முடிவெடுத்து, அந்த யாக பலனை யாருக்கு அளிப்பது, மும்மூர்த்திகளில் யார் பொருத்தமானவர்? இதை தேர்ந்தெடுக்க பிருகு மகரிஷி நியமிக்கப்பட்டு அவர் ப்ரம்மா விஷ்ணு சிவன் மூவரையும் அணுகி,  கைலாசத்தில் ப்ரம்மலோகத்தில் அவர்  உபசரித்து வரவேற்கப்படவில்லை. வைகுண்டம் சென்றார்.  விஷ்ணு மஹாலக்ஷ்மி மடியில் தலைவைத்து சயனித்திருந்தார்.  பிருகு ரிஷி வருகிறார் என்று அறிந்தும் வரவேற்கவில்லை.  கோபத்தில் விஷ்ணுவின் மார்பில் பிருகு  ரிஷி உதைத்தார்.  விஷ்ணு விழித்து  பிருகுவை வணங்கி உபசரித்து தன்னை உதைத்த அவர் கால்களை  அன்போடு  தடவிப்  பிடித்து விடுகிறார்.   தவறை உணர்கிறார்.  பிருகு  மஹாவிஷ்ணுவின் தயை, அன்பு, பெருந்தன்மை அனைத்தையும் கருதி மெச்சி, அவரே யாகத்தின் பலனை பெற உசிதமானவர், உகந்தவர் என்று முடிவெடுக்கிறார்.  ஆனால் மஹாவிஷ்ணுவின் மார்பில் உறையும்  மஹாலக்ஷ்மி  விஷ்ணுவின் செயலால் கோபமடைந்து  பூமிக்குச்சென்று விடுகிறாள். ஆகாச ராஜன் பெண் பத்மா வதியாகிறாள். அவளைத்  தேடி வரும் மஹாவிஷ்ணு ஸ்ரீனிவாசனாக ஏழை முதியவள்  வகுள மாலிகாவிடம் வளர்கிறார்.

பத்மாவதி நந்தவனத்தில் விளையாடும்போது ஒரு யானை அவளை துரத்த  அப்போது அங்கே வந்த ஸ்ரீனிவாசன் யானையை அடக்கி  பத்மாவதி மனதில் இடம் பெறுகிறான்.  அப்புறம் அண்ணலும் நோக்கினான் . அவளும் நோக்கினாள் .

பத்மாவதியை மணக்க பெரும் கோலாகலமான திருமண செலவிற்காக  ஸ்ரீனிவாசன் குபேரனிடம் கடன் வாங்கியது இன்னும் வட்டியுடன் அசல் திருப்பிக்  கொடுக்கப்படவில்லை.  கலியுக முடிவில் கடன் தீரலாம்.
ஸ்ரீனிவாசனின்  கடன் தீர பக்தர்கள் கோடி கோடியாக காணிக்கை அளிக்கிறார்கள் என்பது ஐதீகம்.  மனமுவந்து இதனால் ஸ்ரீனிவாசன் பக்தர்களின் குறை தீர்க்க  குறையொன்றுமில்லாத கோவிந்த னாக காட்சி தருகிறான்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...