Sunday, July 31, 2022

RAMAKRISHNA PARAMAHAMSAR

அருட்புனல் -  #நங்கநல்லூர்_J_ K_SIVAN 
ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 


11  எல்லாம் நீயே தாயே

ராமகிருஷ்ணர்  பழசை  நினைவு கூறும்போது சொன்னது:

 ''எனக்கு  தாபுரி மஹராஜ் அளித்த உபதேசங்கள் அடிக்கடி நினைவுக்கு வரும். சர்வ சக்தி படைத்த அந்த பரமாத்மா ஒரு வித செயலிலும் ஈடு படாமல் வெறுமனே இருந்தால், படைத்தல், காத்தல், அழித்தல் எதுவுமின்றி, அதன் பெயர் அப்போது ப்ரம்மம், புருஷன். அதுவே பரம்பொருள். மேலே சொன்ன மூன்று  செயல்களில்  ஈடுபடும்போது பரமாத்மாவை சக்தி, மாயா, ப்ரக்ரிதி, என்கிறோம்.  கடவுளாக வழி படுகி றோம். இந்த ரெண்டுக்குமே ஒரு வித்தியாசமும் இல்லை. பாலும் அதன் வெள்ளை நிறமும் போல். வைரக் கல்லும் அதன் ஒளி வீச்சும் போல. பாம்பும் அதன் அசைவும் போல. ஒன்றில்லாமல் ஒன்றை நினைத் துக்கூட பார்க்க முடியாது. என் தாய் சக்தி தேவதையும் பிரம்மமும் ஒன்றே''. இதைத்தான் ''ப்ரம்மம் ஒக்கட்டே'' என்று பாடி இருக்கிறார்கள் போல் இருக்கிறது.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர்  மேலும் சொல்கிறார்:

''தக்ஷிணேஸ்வரிலிருந்து தோதாபுரி விடைபெற்று சென்று  கிட்டத்தட்ட  ஆறுமாத  காலம்  ஆகி விட்டது.  இருந்தபோதிலும் நான் இடைவிடாது ப்ரம்மத்தோடு ஒன்றி சமாதி நிலையில் இருந்தேன். யாராலும் இந்த நிலையிலிருந்து சாதாரணமாக மீண்டு வர முடியாது. மூன்று வாரத்திலேயே காய்ந்த சருகாக இந்த உடல் பிரிந்து விடும். இரவு பகல் எனக்கு தெரியவில்லை. வாய் வழியாக ஈ கொசு வண்டுகள் எல்லாம் புகுந்து மூக்கின்  வழியாக வெளியேறும். அதுவும் எனக்கு தெரியவில்லை. என் ரோமங்கள் புழுதி படிந்து சடையாகியது. மற்றவர்களுக்கு நான் இறந்த பிணம்.''

யாரோ ஒரு சந்நியாசி இந்த நிலையில்  ராம கிருஷ் ணரைப் பார்த்துவிட்டு அவரை பாதுகாத்தார். அவ்வப்போது அவர் வாயைத்   திறந்து ஏதாவது ஆகாரத்தை உள்ளே செலுத்துவார். ஆன்மா வெளியே உடலை விட்டு பிரியாது காத்தார். ஆறு   மாதங்கள் கழிந்து நினைவுக்கு திரும்பினார் ராமகிருஷ்ணர். எல்லாம் காளியின் அருள். ஆனால் வயிற்றுப் போக்கு ஆரம்பித்தது. வயிற்றுவலியால் சுருண்டார்.

இனி ராமக்ரிஷ்ணரைச் சுற்றி சாதுக்கள், முனிவர்கள், துறவிகள், சந்யாசிகள், பக்தர்கள். சதா அவருடைய ஆசிகளையும் உபதேசங்களையும் நாடி எண்ணற் றவர்கள் குழுமினர். ராமகிருஷ்ணரின் மஹத்வம் எங்கும் பரவ ஆரம்பித்தது.    தாந்த்ரீகர்கள், வைஷ்ண வர்கள், ஞானம் வேண்டுவோர்  என்று   வரிசை வரிசையாக எத்தனையோ பேர்  அவரைத் தேடி வந்தனர்.

அனைவரையும் வரவேற்று உபசரித்து தங்க இடம், உணவு வசதிகளை மாதுர் பாபு அளித்தார். ராம கிருஷ்ணரின் வேதாந்த புராண ஞானம் அனைவ ரையும் அதிசயிக்க வைத்தது.

''நான் படிக்காதவன். எனது நற்புண்ணியம் அநேக விதவான்களையும், ஞானிகளையும் சந்திக்க இயன்று அவர்களிடமிருந்தெல்லாம்   விருப்பத்தோடு தெரிந்து கொண்டது தான்'' என்பார் ராமகிருஷ்ணர்.

பூ பூக்க ஆரம்பித்தால் கூப்பிடாமலேயே வண்டு தேடி வருவது போல் பக்தர்கள் தக்ஷிணேஸ்வரம் வந்தார்கள்.

''ப்ரம்மம் ஒன்று தான். எல்லா மதங்களும் அதை வெவ்வேறாக பார்த்து வித  விதமாக வெவ்வேறு  மொழிகளில்  சொல்கிறது. இதுதான் நிர்விகல்ப சமாதியில் நான் அறிந்தது''   என்கிறார் ராமகிருஷ்ணர். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் விஷயம் இது தான்.

இதை நிரூபிக்க 1866 ல் ஒரு முஸ்லீம் குருவை நாடி முஸ்லீம் மத கோட்பாடுகளை பின்பற்றி, முஸ்லிமாக உடுத்து அல்லா ஜபம் பண்ணினார் ராமகிருஷ்ணர். உண்மையான முஸ்லிமாக மாறிவிட்டார். மூன்று நாள் இடைவிடாத த்யானத்தில் ஒளி ஸ்வரூபத்தில் முகம்மது நபி தரிசனம்  ராமகிருஷ்ணருக்கு  கிடைத்ததாம்.

அதேபோல் நவம்பர் 1874ல் தனது சிஷ்யர், ப்ரொபஸர் சம்பு சரண் மல்லிக் என்பவரை பைபிள் வாசித்து அர்த்தம் புரிந்துகொண்டு இயேசுவின் கிறிஸ்தவ மத கோட்பாடுகளை நன்றாக அறிந்துகொண்டார். த்யானம் செய்தார்.

ஒருநாள் சம்பு சரண் மல்லிக் வீட்டு கூடத்தில் உட்கார்ந்திருந்தபோது மடோனா குழந்தை இயேசுவை வைத்திருக்கும் படம் கண்ணில் பட்டது. உற்றுப்  பார்த்துக்  கொண்டே இருந்தவர் தெய்வீக உணர்வில் ஆழ்ந்தார். படத்தில் இருந்த உருவங்கள் உயிர் பெற்று வெளிவந்து அவர் ஆத்மாவில் கலப்பதை  அவரால்  உணர  முடிந்தது.

உணர்ச்சி வசப்பட்ட ராமகிருஷ்ணர் பக்தி மேலீட்டால்  ''தாயே என்னவெல்லாம் அம்மா நீ செய்கிறாய் எனக்கு?'' என்று கண் கலங்கினார்.   இயேசுவை மனதில் இருத்திக் கொண்டு மூன்று  நாள் காளி பவ தாரிணியை சென்று பார்க்கவே இல்லை ராமகிருஷ்ணர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...