Thursday, July 28, 2022

RAMAKRISHNA PARAMAHAMSA

 அருட்புனல் -   நங்கநல்லூர்  J K SIVAN 

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 


''ப்ரம்ம ஞானோபதேசம்''


காலம்  யாருக்காகவும் காத்திருக்காமல் என்பது  ஓடிக்கொண்டே தான் இருக்கும்.  அது ஓடினால் தான் சரித்திரம். அதன் ஓட்டத்தின்  பக்கங்கள்  தான் சம்பவங்கள்  எனும்  எத்தனையோ எண்ணப் பதிவுகள்.

பிராமணிக்கு பரம சந்தோஷம்.  ''இந்த  சிஷ்யன் ராமகிருஷ்ணன் மிக அருமையாகப்  பாடம்   கற்றுக்
கொள்கி றானே என்று.  அவனுக்கு நம்மை விட ஒரு அபூர்வ அனுபவம் வேறு இருக்கிறதே. அவனுக்கு  தாயார்  பவதாரிணியின் கருணைப் பார்வை வேறு செல்லமாக இருக்கிறதே. நினைத்தபோது அவளை அடைய முடிகிறதே.  என்னால் முடியுமா?'' என்று வியக்கிறாள்.

1874ல்  தோதாபுரி என்கிற  ஒரு  துறவி தக்ஷிணேஸ்வரம் வந்தார். அத்வைதி.  நர்மதை நதிக்கரையில் நாற்பது வருஷங்களுக்கு மேலாகத்  தவம் புரிந்தவர். கங்கைக்   கரைக்கு வந்தவர். கம்பீரமும் மிடுக்கும் கொண்ட தேகம். அதட்டல் குரல், கடுமையான பார்வை. சிடு சிடு முகம்.  ஆஜானுபாகுவான உருவம்.  போதாததற்கு  கரு கருவென தாடி மீசை. உடம்பில் துணியில்லாத அவதூதர்.    ப்ரம்ம ஞானி. ப்ரம்மம் ஒன்று தான் நித்ய வஸ்து .   அதற்கு காலம், நேரம், காரணம், எதுவும் இல்லை. நிரந்தரம். மாயையால் ஒன்று பலவாக காணும். தோன்றி மறைவது போல் தோற்றங்கள் ஏற்படும். மாற்றங்கள் உண்டாகும். ''இது இல்லை, இது இல்லை'' என்று ஞானம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து தெளிவு தரும். எண்ணத்தில் எல்லைக்கப்பால் ஆன்மா ஒளிர்வது தெரியும். எண்ண ஓட்டம் நிற்கும். பிறகு தான்  மோனத்தில் ஞானம் உணரமுடியும். தேகம் மறந்து விடும். ''நான்''  யார் என்று புரியும்  என்று  அழகாக  உணர்த்துபவர்.

''சுவாமி,  எனக்கு வேதாந்தம்  போதியுங்கள் " என்று வேண்டிய  ராமகிருஷ்ணருக்கு வேதாந்த நாட்டம் இருப்பதை அறிந்து தோதாபுரி மகிழ்ந்தார்.   ராமகிருஷ்ணர்  நேராக பவதாரிணியிடம் சென்றார்

''அம்மா  நான் இவரிடம் வேதாந்தம் கற்றுக்கொள்ள அனுமதிப்பாயா?''  
''ஆஹா  நல்ல திட்டம்.  ஆரம்பி'' என்றாள்  அன்னை. அது அவருக்கு மட்டுமே  தானே தெரியும்.
''சந்யாசிகள் தான் அப்பா வேதாந்தம் கற்று  அப்யஸிக்க தகுந்தவர்கள். நீ  இளம் வாலிபனாக இருக்கிறாயே. நீ  சந்நியாசி ஆக முடியுமோ?'' என்கிறார் தோதாபுரி.

''எனக்கு சம்மதம்.   ஆனால் ரகசியமாக என்னை சந்நியாசி ஆக தீக்ஷை கொடுங்கள். என் வயதான அம்மா  மனைவி ஆகியோர் இது தெரிந்தால்  வருந்துவார்கள்''

ஒரு சில நாள் கழிந்தது.   ஒரு  விடியற்காலை அக்னி வெளிச்சம். பஞ்சவடியில். தோதாபுரியும் ராம கிருஷ்ணரும்.  இருளில்  அக்னி  ஜ்வாலையின் ஒளி இரு முகங்களிலும் பளிச்சிட்டன.

ஒல்லியான  ராமகிருஷ்ணர், குறுந்தாடி  மீசை கொண்ட வர் .அழகிய பரந்த  ஆழ்ந்த கருமை நிற கண்கள் எப்போதும் அரை மூடி பாதி திறந்த  நிலையில் இருப்பவை.  புன்னகை புரியும் முகம், திறந்த வாய். வெண்மை நிற பற்கள் சில  வெளியே தெரியும்.  எதிரே சிறிய குன்று போன்ற  திண்மையான சந்நியாசி. வெயிலும் பனியும், இடியும், மின்னலும், காற்றும் மழையும் தாங்கும் தேகம். இரும்பு மனது.  தேக்கு நிற உடம்பு. இது தான் தோதாபுரி.

அக்னியில் மந்திரங்கள் உச்சரித்து உறவு, பந்தங்கள் எல்லாம் விடுபட்டது. குடுமியை  அறுத்தெறிந்தாகி  விட்டது. பூணல் அக்னியில் கலந்தது. ஜாதி, மதம், குலம் , சமூகம், எல்லாம் விலகி விட்டது.  இனி ஆசை, பாசம் எதுவும் கிடையாது. அதுவும் அக்னியில் கரைந்தது.  ஆன்மா ஒன்றே லக்ஷியம். காவி  கோவணம், அரையில் சுற்றிக்கொள்ள காவி உடை பெற்று அணிந்தாகிவிட்டது. கதாதர்,   ''ராமகிருஷ்ண பரமஹம்ஸர்'' எனும் புது  யோகியாகி விட்டார்.

தியான அறையில் இருவரும்.   குருவிடமிருந்து சிஷ்யனுக்கு  ப்ரம்ம ஞானம் போதிக்கப்பட்டது. உபநிஷத் துகள் வேதங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பூரண நிம்மதி, அமைதி, சாந்தம் குடிகொண்டது அந்த குடிசையில்.

''உலகத்திலிருந்தும்  அதன் பொருள்களிடமிருந்தும்  என் மனம் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெற்று வருவதை உணர்ந்தேன்'' என்று பின்னால் இந்த அனுபவத்தைச்  சொல்கிறார் ராமகிருஷ்ணர்.

''என்னால் ஒரே அடியாக முற்றிலும் விடுபட முடியவில்லையே, குரு மஹராஜ்''-   ராமகிருஷ்ணர்.
''விடுபட்டே  ஆகவேண்டும் நீ.  ஆன்மாவில் முழுதுமாக  உன் மனம் தோய வேண்டும்  ''  -- தோதாபுரி.

ராமகிருஷ்ணர் முயன்றார். சமாதி நிலை எளிதில் கிட்டியது .  மூன்று நாள் அசையாமல் நிர்விகல்ப சமாதியில்  இருந்தார்.

எங்கும் மூன்று நாளுக்கு மேல் தங்காத  தோத்தாபுரி  தக்ஷிணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணருடன் மூன்று மாதங்கள் தங்கினார்.

''எல்லாம் மாயை தான்'' என்கிறார் தோதாபுரி.  ''
''அந்த மாயையே  என் தாய் தானே''  என்று அவளையே எதிலும் கண்டார் ராமகிருஷ்ணர். 
அவித்யா மாயையில் பிறப்பு இறப்பு, சுக துக்கம் எல்லாம் உண்டாக்குகிறாள்.  இது கீழ் மட்டத்தில்.   வித்யா மாயையில் தான் தயை, காருண்யம், உயர் எண்ணங்கள், பணிவு பூரண அன்பு எல்லாமே கொடுக்கிறாள். அது மேல் மட்டத்தில்.

மெல்ல மெல்ல  ராமகிருஷ்ணரிடமிருந்து  குருவான தோதாபுரி மஹா காளி அம்சத்தை, சர்வ சக்தியை, புரிந்து கொள்கிறார்.

ஒருநாள் மாயை, வேதாந்தம் பற்றி இருவரும் கார சாரமாக பேசிக்கொண்டிருக்கும்போது தோட்டக் காரன் ஒருவன் உள்ளே வந்து ஹோம அக்னியில் தனது சுருட்டை பற்ற வைத்துக் கொள்கிறான். அவ்வளவு தான் தோதாபுரி அவனை நோக்கிப்   பாய்ந்து கோபாவேசத்தில் அடிக்க ஓடுகிறார். அவரைத்  தடுத்து  ராம கிருஷ்ணர் ''சுவாமி மாயையின் சக்தியை பற்றி அறிந்தவர் நீங்கள். அதை சந்திக்கும்போது  புரிந்து கொள்ள  தவறுகிறீர்களே'' என்றபோது  தோதாபுரி தலை குனிந்தார் .

தோதாபுரியின் உடலில் நோய் கண்டது. விடாமல் சீத பேதி. இதன் உபாதையால் மனம் தியானத்தில் ஈடுபட தடங்கலாயிற்று. இந்த உடலை கங்கையில் தொலைத்து விடலாம் என்று கங்கையில் இரவு நேரத்தில் இறங்கினார். என்ன ஆச்சர்யம்.ஆழமான கங்கையில் அவர் ஏன் முழுகவில்லை. தண்ணீர் இல்லையா?  எப்படி அக்கரை  நடந்து சென்றார் ? திரும்பி பார்த்தால்  ஓ வென்று கங்கை பிரவாகம், எதிரே தக்ஷிணேஸ் வரம் கோவில், பஞ்சவடி, ஆஹா  இது என்ன எங்கு பார்த்தாலும் பவதாரிணி. காளி , கங்கை பூரா காளி'' அவளா  என்னை மூழ்கி சாகாமல் காப்பாற்றியவள். எங்கே என் வயிற்றுவலி? எங்கே அந்த உபாதை? எப்படி நின்றது? நானா அவதிப்பட்டவன்?  ராமகிருஷ்ணர்  உணர்ந்ததை நான் இப்போது உணர்கிறேன். அவளே எல்லாம், மாயையும் அவளே, நிஜமும் சத்தியமும் அவளே.எப்படி  மூன்று மாதம் பதினோரு மாதங்களாக அங்கே கழிந்தது என்று ஆச்சரியப்பட்டார்  தோதாபுரி.

''அப்பா மஹா பிரபு, ராமகிருஷ்ணா, இனி நீ என்னிடம் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லை  காளி புத்ரா'   என  வாழ்த்திவிட்டு  தன் வழியே நடந்தார் தோதாபுரி.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...