Sunday, July 31, 2022

ANDAL


 பூரக்காரி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 


ஆடி  மாதம் முச்சூடும்  ஏதேனும் ஒரு விசேஷம் குதூகலம் இருந்து கொண்டே இருக்க காரணம்,   அந்த மாதம் தெய்வீக மாதம், மார்கழியைப் போல்.  மார்கழிக்காரி ஒருவள் சம்பந்தம் அதற்கும் உண்டு.  நாளை  ஆடிப்
 பூரம்.  ஆண்டாள் ஜெயந்தி என்று கொண்டாடப்படும் தினம்.  மனசு பூரா வில்லிப்புத்தூரில்  இருக்கிறது.
லக்ஷ்மி ஒரு ஆழ்வார் மகளாக உதித்த நாள். ஒரு சக்தி பிறந்தது பெரியாழ்வார் மூச்சினிலே  அன்று.

சூரியனுக்கு உரிய சிம்ம ராசியில், இடம் பெற்றுள்ள பூரம் சுக்கிரனின் நட்சத்திரமாகும். ஆண்டாள்  அதனால் தான் கம்பீர  ஆழ்வாராக திகழ்கிறாள்.  ஸ்ரீனிவாசன் பத்னி சுகபோகத்தில் ஆழ்த்துபவள்.  அவள் எழுதிய  நாச்சியார் திருமொழி, திருப்பாவை போதுமே அவள் கலைத்திறனை எடுத்துக் காட்ட.

பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். பிறந்த அன்றே சுக்கிரதசை.  இல்லையென்றால் விஷ்ணு சித்தர் கண்ணில் படுவாளா?  திருப்பாவை பாடுவாளா?  ரெங்கமன்னாரை அடைவாளா?  நமக்கு தெய்வமாக சந்நிதியில் நிற்பாளா?  பூர நக்ஷத்ரக்காரர்கள்  அழகாக இருப்பார்களாம்?  ஆண்டாளே , உன் கொண்டை யழகே போதுமடி பெண்ணே!  ஒவ்வொரு வைணவ திருமணத்திலும்  மணப்பெண் அழகிகள் உன்னைப்போலவே அல்லவோ தலையலங்காரம் செய்து கொள்பவர்கள்! 

பூர நக்ஷத்ரக்காரர்கள்  இரக்ககுணமும்  இனிமையாக பேசுபவர்களாகவும்  காரியம் சாதிப்பவர்களாகவும் இருப்பார்களாம். உன் இரக்கம் தான், உன் இனிமையான சொல் தான்,  நீ  ரங்கனை அடைவதை சாதித்ததும் தான் எங்களுக்கு தெரியுமே.  உன் திருப்பாவை தெரியாத தமிழன் தமிழனே அல்ல.

பூரக்காரர்கள்   எப்போதும் பரபரப்பாகக் காணப்படுவார்க்கலாம்.  மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படாமல் காரியத்தில் கண்ணாக இருப்பவர்களாம்.   எதிரிகளையும் வெற்றிகொள்ளும் வல்லமை பெற்றவர்களாம்.   ஆஹா  இதெல்லாம் நிரூபித்தவள் நீ! .   பர  பரவென்று சுறுசுறுப்பாக  விடிகாலையில் எழுந்து மற்ற தூங்கும் பெண்களை எழுப்பி  யமுனையில் குளிக்க வைத்தவள் நீ.  மார்கழி முப்பது நாளும் தவறாமல்,  விடாமல்  காத்யாயனி நோன்பு நோற்கவேண்டும் என்று தீர்மானித்து எல்லோரையும் ஈடுபட வைத்தவள் அல்லவா?  

எதிரிகளை வெற்றி  கொள்பவள்  என்பதை உன்னை  சிலவருஷங்கள்  முன்பு எதிர்த்தவர்களை கப் சிப் பண்ணியதை  நினைவு கொள்கிறேன் . .... இன்னும் என்ன சொல்வதற்கிருக்கிறது? 

பூர  நக்ஷத்ரத்தில் பிறந்தவர்கள்  விதவித  ஆடைகள் அணிபவர்களாம்.  ஆமாம் உனக்கில்லாத  அலங் காரமா? பெண்ணே,  நீயே  அழகின் வடிவம் தானே.   எல்லோரையும்  பூர நக்ஷக்காரர்கள் அரவணைத்து செல்வார்களாம்.

நீயல்லவோ சரியான உதாரணம்?  வைணவர் சைவர் மற்றவர் என்று எல்லோரையும் உனைக் காண, தரிசிக்க, உன் அருள் பெற செய்பவளாயிற்றே நீ.     உன்  அன்பு  அரவணைப்பால் தானே எங்கிருந் தெல்லலாமோ  மார்கழியில் உன்னைத் தேடி கோவில்களில் மொய்க்கிறார்கள்.

பூர நக்ஷத்ரகாரர்கள் உணவு வகைகளை  தேடித் செல்பவர்கள்  என்று ஜோசியர்கள் சொல்கிறாரகளே. ஒரு சின்ன திருத்தம்.  நீ தேடித் செல்கிறாயோ இல்லையோ,  உன்  பிரசாதமாக  மார்கழி திங்கள் மடி நிறைய பொங்கல் பெற்று திருப்தியாக சாப்பிட்டவர்களின் நானும் ஒருவன்.  இப்போது நினைத்தாலும் நாவில் நீர் சுரக்கிறது. ஆஹா உன்னால் தான்    முழங்கை வழியாக நெய் மணத்தோடு வழிந்து ஓட , முழங்கை வழிவாற  அக்கார வடிசல்,  சர்க்கரை பொங்கல்   சாப்பிடுபவர்கள்  இன்றும்  எண்ணற்றவர்கள் உண்டே. 

உறவினருக்கும் நண்பர்களுக்கும் உதவுபவர்களாம் பூர நக்ஷத்ரக் காரர்கள்.  இதற்கு  எங்கும் உதாரணம் தேடி செல்லவேண்டாம். பேசாமல்  ஸ்ரீபெரும்புதூர் சென்று ராமானுஜரைக்  கேட்கலாம்,  அடித்துச் சொல்வார்.  பெரிய நம்பி, அத்துழாய் எல்லாம் சாக்ஷி சொல்ல வரிசையாக காத்திருக்கிறார்களே .

 பூரக்காரர்கள்  உடல்நலனில் அக்கறை காட்டுபவர்களாக இருப்பார்களாம்.  நீ கூட அழகாக  எப்படி உபவாசம் இருப்பது எதையெல்லாம்  நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று  எதெல்லாம் விரதமிருக்கும்போது   சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது  என்று  எடுத்துச் சொன்ன  பீஸ் FEES  வாங்காத லேடி டாக்டர் தானே அம்மா.. 

கடைசியாக ஒரு வார்த்தை.
பூர நக்ஷத்துக்காரர்கள்  புத்தகம் எழுதி வெளியிட்டு பணமும் புகழும் சம்பாதிப்பவர்கள் என்று ஜோசியம் சொல்கிறது. நீ எழுதிய புத்தகங்கள் இன்றும்  பலரால் வெளியிடப்பட்டு அவர்களுக்கு  பணமும் உனக்கு புகழும் சம்பாதிப்பவர்கள் தானே. நான் கூட  உன்னைப் பற்றி எழுதினேன், புகழ் சம்பாதித்தேன். பணம் சம்பாதிக்க விருப்பமில்லை. பூரக்கார்களுக்கு  ஆன்மீகத்தை வியாபாரமாக்கினால் பிடிக்காது  என்று ஜோசியம் எனக்கு தெரியும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...