Friday, July 1, 2022

RAMAKRISHNA PARAMA HAMSA

 


அருட்புனல்  -  நங்கநல்லூர்  JK SIVAN 
ராமகிருஷ்ண பரம ஹம்ஸர் 

 14  ''இவர் ஒரு ஆத்ம ஞான சுரங்கம்''

அன்றைக்கும் இன்றைக்கும் என்ன வித்யாசம்? அதே பாரத தேசம் தான். அதே மண். அதே இயற்கை வளம். மக்கள். ஆனால் எதனால்  இவ்வளவு வித்யாசம்?  பூமி,இயற்கை வளம்  ரெண்டையும்  தனது மனம் போனபடி மாற்றிக் கொண்டே  இருக்கும்  மனிதன் தான் முக்ய காரணம். சகல இன்ப துன்பத்துக்கும் அவன் செயலே எண்ணமே  காரணம். அதனால், காட்சிகள் மாறுகிறது. கட்சிகள்  தோன்றுகிறது. கடவுள்  போற்றவும் தூற்றவும் படுகிறான். இயற்கை உள்ளேயும் வெளியேயும் மனிதனால் செயற்கையாகி விடுகிறது.  தனது எண்ணங்களையே செயல்களையே  பிறரும் பிணற்றவேண்டும் என்ற துடிப்பு, அதிகாரம் பதவி இருந்தால் கட்டாயம் வேறு.  இது நிரந்தரம் இல்லை. சரித்திரத்தில் இது போல் எத்தனையோ பக்கங்கள் இருக்கிறதே.

தக்ஷிணேஸ்வரம் ப்ராமணிக்கு ரொம்ப பிடித்தது. அதன் கங்கை நதி, சோலை வனங்கள், அமைதி, காளி மாதா  ஆலயம்,  அங்கே  விசித்திர மனிதன்  ராமகிருஷ்ணரின் போக்கு எல்லாமே அவள் மனத்தைக் கவர்ந்தது. 

''ஆஹா, இந்த ராமகிருஷ்ணன் என்பவர்  ஒரு சிறந்த ஆத்ம ஞானியாக அல்லவோ இருக்கிறார். இவரே ஒரு குட்டி கிருஷ்ணன்'' என்று புரிந்து கொண்டு ராமகிருஷ்ணனுக்கு நான்   அம்மா  என்று பாசமாக  இருந்தாள். உலகுக்கு ராமகிருஷ்ணன் ஒருநாள் ஒரு ஆன்மீக வழி  காட்டியாக  இருக்கப்போகிறவர்  என்றுஉள்ளுணர்வு சொல்லியது.  ''சைதன்யர் மாதிரி ராமக்ரிஷ்ணரும் ஒரு  அவதாரம்''  என்று மதுர் பாபுவிடம்  ப்ராமணி சொன்னபோது பாபுவுக்கு கொஞ்ச  நஞ்சம் இருந்த சந்தேகமும்  காணாமல் போனது.

ப்ராமணி மதுர்  பாபுவை சந்தித்து ஒருநாள் ''நீங்கள் ஒரு வித்வத் சபையை கூட்டுங்கள். ராம கிருஷ்ணர் அவர்களைச்  சந்திக்கட்டும். அவர் சக்தி அப்போது புரியும்'' என்றாள். நட மந்திர் எனும் காளி கோவில் மண்டபத்தில் ஒரு மகாநாடு  அப்படியே ஏற்பாடாயிற்று.

வைஷ்ணவ சரண் எனும் வைஷ்ணவ சபையின் தலைவர் அநேக பண்டிதர்களோடு வந்தார். அவர்களுக்கு இடையே ராமகிருஷ்ணர் ஒரு சாதாரண ஒன்று மறியாத குழந்தை போல் தானுண்டு தனது காளிஉண்டு  என்ற  நினைவுடன் சமாதி நிலையை அவ்வப்போது அடைந்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே கூட   அறியாமல் இருந்தார்.

'' அடடா, இந்த மாதிரி கடவுளோடு ஒருமித்த மனோ நிலை மிகவும் சிறந்த மகான்கள் மட்டுமே அனுபவிப்பது, கடவுளின் கடாக்ஷம் பரிபூர்ணமாக இருப்பவர்களுக்கு தான் இது சித்தியாகும். ராமகிருஷ்ணர் இளம் வயதிலேயே ஒரு மஹா பெரிய ஞானி '' என்றார் வைஷ்ணவ சரண்.

''மதுர் பாபு, இவர் சொல்வது ஆச்சரியமாகவும் திருப்தியாகவும் இருக்கிறது. நல்லவேளை எல்லோரையும் போல் இவரும் என்னை ஒரு பைத்தியம் என்று சொல்லவில்லை'' என்று  சொல்லிச்  சிரித்தார் ராமகிருஷ்ணர்.

சிறிது நாளில் இன்னொரு மகா பண்டிதர் கௌரி என்பவர் வந்து ராமகிருஷ்ணரை சந்தித்த போது ' மதுர்  பாபு, வைஷ்ணவ சரண் சொன்னது கொஞ்சம் தான். ராமகிருஷ்ணர் ஒரு ஆன்ம சக்தி நிறைந்த சுரங்கம். அவதாரம் என்பது எப்போதாவது உருவாவது தானே? . இவர் சதா சர்வகாலமும் ஆன்ம ஒளி வீசுபவர்'' என்கிறார்.

''ஆஹா, நல்ல வேடிக்கை. என்னிடம் அப்படி என்ன கண்டீர்கள்?'' என்கிறார் ராமகிருஷ்ணர்.

''நான் சொல்லவில்லை. என் இதயம் பேசுகிறது. நீங்கள் ஒரு வரப்பிரசாதம். உங்களைப்  போன்றவர்களை பற்றி சாஸ்திரங்கள் நிறைய சொல்கிறது.எவரிடம் வேண்டுமானாலும் இது பற்றி நான் வாதாட முடியும்''

''நீங்கள் சொல்வதெல்லாம் எனக்கு விளங்கவில்லை. எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது மட்டுமே எனக்கு தெரியும் ''

இரு சிஷ்யர்கள் அவரைப் பற்றி இதே  போல் அவரை ஒரு அவதாரமாக புகழ்ந்தபோது ராம கிருஷ்ணர் ''அவர்களுக்கு வேறே வேலை இல்லை. அப்படித்தான் ஏதாவது சொல்வார்கள். ஒருவர் நாடக நடிகர், மற்றவர் ஒரு மருத்துவர். அவதாரங்களை பற்றி என்ன பேசமுடியும். நான் ஒரு மாணவன். தினமும் ஏதாவது கற்பவன்' என்று அங்கிருந்து நகர்ந்தார்.

இதுவரை தனது மனதில் தோன்றிய வழிபாடோடு இருந்த  ராமகிருஷ்ணர்  ப்ராமணியை குருவாக ஏற்று, தந்த்ர சாஸ்திரம், ஆத்ம தத்துவம் எல்லாம் அறிந்துகொண்டார்.

தானே சத் சித்தானந்த ஸ்வரூபமாக இருந்ததால்   சத்யம், ஆன்ம நிலை போன்றவை எளிதாக அவரால்  ப்ராமணியிடமிருந்து அறியமுடிந்தது.

தந்த்ர சாஸ்திரம் உலக வாழ்க்கையின் இன்பம் துய்ப்பவனுக்கு அதில் கடவுளைக் காண உதவுகிறது. சில ரகசிய வழி பாடுகளை போதிக்கிறது. புலன்களை அதில் வசியப் படுத்துகிறது. மாயையைத்  தெளிவித்து இந்த பிரபஞ்சமே சக்தி-சிவ ஸ்வரூபம் என அறிவிக்கிறது. படிப்படியாக மனித சக்தி, மனதின் சக்தி,  வலுப்படுகிறது. பெண்ணை அன்னையாக, காளியாக, பாவிக்கும் சக்தி அளிக்கிறது.

ராமகிருஷ்ணர் பஞ்சவடியில் வில்வ மரத்தடியில் தியானத்தில் வழக்கம்போல் ஈடுபட்டார். தந்த்ர சாஸ்திரத்தின் 64 விதிகளும் அவரது கட்டுப்பாட்டுக்குள் எளிதில் வந்தது. சகஜமாக சமாதி நிலை சித்தியாயிற்று. எங்கும் எதிலும் பரிபூரணானந்தம் தெரிந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...