Saturday, July 23, 2022

BATHRAGIRIYAR PULAMBAL

 


பத்திரகிரியார்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 

பத்திரகிரியார் புலம்பல் 

மனைவியின் த்ரோகம்  தந்த  அதிர்ச்சியில்  வாழ்க்கை வெறுத்து,  மனசு  ஒடிந்து போன ராஜா புலம்புவது  நிறைய பேருக்கு  அதில் ததும்பி  தளும்பி  வெளியே  கொட்டும்  வேதாந்த சாரமும், வாழ்க்கை  நிலையாமையும்,  இறை  உணர்ச்சியும்  அப்பட்டமாக சுத்த கலப்பில்லாத பசும்பால்  போல்  இனிக்கிறது  என்று  அனுபவித்து தொடர்கிறேன்.  

ஒன்று  புரிந்து கொள்ள வேண்டும்.

' நான் இவ்வாறெல்லாம்  இருந்து,  இதிலெல்லாம்  மயங்கி, தேவையின்றி,   மாயையில் சிக்கி, அல்லல் பட்டு உலகில்  உழன்று தவிக்கிறேனே,  இனி  இதையெல்லாம்   தவிர்த்து உன்னை சேருவது எப்போ? எப்போ ?"  என்று  ராஜா  பர்த்ருஹரி  (இனி  பத்திரகிரியார்) குமுறுவது  அவன் தனக்காக  சொன்னது இல்லை,  நம்மையும் சேர்த்து, நமக்காகவும்  தான்,  என்று  அறிந்து கொள்ள வேண்டும்.
 
பத்திரகிரியார்  பெயர், அவர்  விருத்தாந்தம்  எல்லாம் காலப்போக்கில்  அழியலாம்.  ஆனால்  இந்த ராஜா நம்மிடம்  விட்டுச் சென்ற  இந்த  நீதி வாக்யங்கள்  கல்மேல்  எழுத்தாக  காலமெல்லாம்  நின்றதே, நிற்கிறதே,
என்றும் நிற்குமே.
 
ஒவ்வொரு  சமயம்  ராஜா சொன்னதை  இன்னும்  சுருக்கலாமா  என்கிற  யோசனை  வருகிறது.  ராஜா தொடுத்த   வாக்ய  அழகு கையை  கம்பியூட்டர்  பக்கம்  கொண்டு  செல்ல விடவில்லை

நிறைவேறாமல்  விட்டுவிட்ட சில  எண்ணங்களை  இனி நான் அறிந்து செயல் புரிவது  எப்போது  என்று ராஜா  தன்னைத்தானே  கேட்பது போலவே  நம்மை  நமக்குள்ளேயே  கேட்க வைக்கிறார்.  இதனை  அழகாக  புரிந்துகொள்ளவேண்டும்.  

மிகச்சீரிய  எண்ணங்களின்  கோப்பு  மிகச்சிறிய  வார்த்தை  அலங்காரத்தில்  பரிமளிப்பது கவனிக்கத் தக்கது.  தமிழ் அறிந்தவர்களுக்கு இந்த  வாக்யங்கள்  ஒரு வரப்ரசாதம்  என்பதில்   ஐயம் ண்டா?

ஐந்து பொறிவழிபோய் அலையும் இந்தப் பாழ்மனத்தை
வெந்து விழப் பார்த்து விழிப்பது இனி எக்காலம்?

''நான் எனக்கு இது வேண்டும்  என்று அடம்பிடித்து, அழுது, தொந்தரவு,  பண்ணி உன்னைக் கேட்டேனா?  பின் எதற்கு நீ இந்த ஐம்புலன்களை எனக்கு வைத்து அதனால் நான் படாத பாடு  பட வைத்து விட்டாய்? அதன்  எத்தனையோ  உபாதைகளில்  ஒன்று இல்லை யென்றால் மற்றொன்றில்  மூழ்கி திணறி,  களைத்துப்  போய்  விட்டேனே. என் மனதை சுட்டு எரித்து சுண்ணாம்பாய் பண்ணுகிறது இந்த புலன்கள். அதிலிருந்து நான் மீள்வது எப்போதோ?

''கூண்டுவிழும் சீவன் மெள்ளக் கொட்டாவி கொண்டாற்போல்
மாண்டுவிழும் முன்னே நான் மாண்டிருப்பது எக்காலம்?''

''இந்த உடல்  எனும்  கூண்டிலிருந்து என் ஜீவன் வாயிலிருந்து கொட்டாவி வெளிவருவது போல் விடுபட்டு பறந்து போகும் முன் '' ''நான்''  என்பது மறந்து, மறைந்து,  செத்து  இவன்  உன்னையே நினைத்து உன்னில் கரைந்து போவது எப்போது?''

''ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகுமுன்னம்
நான் இறந்து போக இனி நாள் வருவது எக்காலம்?

 ''இதோ நாளுக்கு நாள் என் எடை கூடிக்கொண்டே வருகிறதே, என் சதை, தசை எல்லாம் பருத்து பெருத்து போகிறதே . என் தொப்பை  வளர்ந்து  என்  வயிறு, கால்களை ப்பார்க்கவே முடியவில்லையே.  இந்த உடல் இப்படி வளர்ந்து ஒருநாள் டப் பென்று வெடித்து என் உயிர் போய்விடும். அதற்கு முன்  ''நான்'' ''எனது'' என்ற எண்ணங்கள் முதலில் இறந்து போகவேண்டும்,  அது எப்போது?
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...