Friday, July 1, 2022

SWAMI DESIKAN

#சுவாமி_தேசிகன் நங்கநல்லூர் J K SIVAN
அடைக்கலப் பத்து - பாசுரம் 9

இன்று நாம் சுதந்திரமாக, எல்லாம் இருந்தும் சந்தோஷமாக ஒற்றுமையாக வாழத்தெரியாமல் நம்மையும் காலத்தையும் பாழாக்கிக்கொண்டிருக்கிறோம்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் பாரத தேசம் பல சிறிய ராஜ்யங்களாக துண்டு துண்டாக இருந்தபோது இங்கு வேட்டையாடி நம்மைக் கொன்று நம் ஆலயங்களை அழித்து, நமது செல்வங்களை கொள்ளை அடித்து, நமது பெண்களை கற்பழித்து மதம் மாற்றியபோது நம் முன்னோர்களுக்கு எது பாதுகாப்பு, எவர் ஆதரவு? பகவான் ஒருவனையே நம்பி தம்மைக் காப்பாற்றிக்கொள்ளக்கூட சக்தியற்று உயிர் வாழ்ந்தார்கள்.

ஆமாம், சரித்திரம் சொல்கிறது. பதின்மூன்றாம், பதினான்காம் நூற்றாண்டுகளில் பாரத தேசம் ரொம்ப கொதிப்படைந் திருந்தது. முகலாய ராஜாக்கள், ஹிந்துக்களை ஒழிப்பதிலும், இந்து கோயில்களை இடிப்பதிலும் கடவுள் சிலைகளை அழிப்பதிலும் மும்முரமாக இருந்தனர். வடக்கே அக்கிரமம் அதிகம். இருந்தாலும் அது தென்னிந்தியாவிலும் தமிழகத்திலும் கூட பரவ ஆரம்பித்தது. ராமானுஜர் மறைவிற்கு பிறகு வைணவத்தில் பெரிய மாற்றம். வடகலை தென்கலை என பிரிவு. ஸ்வாமிதேசிகன் வடகலை ஆச்சார்யர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு ஆளானது. ஆக்கிரமிப் பாளர்கள் படையோடு வரும் விஷயம் காற்றில் செய்தி முன்னதாகவே வந்து விட்டதால் ஸ்ரீரங்க ஆலய பக்தர்கள் உற்சவ விகிரஹங்களை முன்னேற்பாடாக ஜாக்கிரதையாக அப்புறப்படுத்தினர். பிள்ளை லோகாச்சார்யார் என்னும் வைஷ்ணவ ஆச்சார்யர் ''என் உயிர் போனாலும் என் அப்பன் ரங்கநாதனை காப்பேன்'' என்று பொறுப்பேற்றார். வெளியேறிச் சென்றவர்களை தவிர்த்து மற்ற பல உயிர்கள் ஸ்ரீரங்கத்தில் பலியாயின. ச்ருதப்ரகாசிகா என்னும் ஸ்ரீ ராமானுஜரின் ஸ்ரீ பாஷ்யத்துக்கு உரை எழுதிய சுதர்சன சூரி தப்பிக்க முயல வில்லை. முக்கிய கிரந்தங்களை அழியாமல் பாதுக்காக்கும் பொறுப்பேற்றார். விசிஷ்டாத்வைத சித்தாந்த நூல்கள் காப்பாற்றப்பட்டன.

''சுவாமி நீங்கள் இங்கிருக்க வேண்டாம். உடனே ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேற வேண்டும். அந்த பாதகர்களிடம் நீங்கள் சிக்கி அழிய நாங்கள் விடமாட்டோம் என்கிறார் சூரி.
ஸ்வாமிதேசிகன் ஸ்ரீ ரங்கத்தை விட்டு சுதர்சன சூரியின் இரு புதல்வர்களோடும் , ஸ்ருத பிராசிகா நூலோடும் செல்கிறார்.

காட்டு வழிப்பாதை சங்கடங்களை தந்தது. திடீரென்று முஸ்லீம் மத வெறியர்கள் குதிரை வீரர்கள் ஆயுதங்களோடு எதிர்படும்போது இறந்த பிணங்களின் மத்தியில் அசையாமல் பிணங்களாக கிடந்து தப்பவேண்டியிருந்தது. ஸ்ரீரங்கத்தில் சுதர்சன சூரி கொல்லப்பட்டார். சுவாமி தேசிகரால் அவர் இரு பிள்ளைகளும் அவரது ஸ்ரீ பாஷ்ய உரை ச்ருதப்ரகாசிகா நமக்காக காப்பாற்றப்பட்டது. சுவாமி தேசிகன் கர்நாடக தேசம் சென்று அடைந்தார். சுவாமி தேசிகனுக்கு நமது சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

கர்நாடகாவில் சத்யகலம் என்று ஒரு காவிரிக்கரை கிராமம். அங்கே ஸ்வாமிதேசிகன் அடைக்கலம் புகுந்தார். ஒரு காவிரிக்கரையில் ஸ்ரீரங்கத்தை விட்டு இன்னொரு கர்நாடக தேச காவிரிக்கரை. ஆனால் ரங்கநாதனை எப்படி தரிசிப்பது? வரதராஜன் விட்டுவிடுவானா தனது பக்தர் தேசிகரை?

ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேதனாக சத்யகலத்தில் ஏற்கனவே ரெடியாக வரதராஜன் காத்திருந்தானே . கொஞ்சம் தள்ளி நடந்தால் சற்று தூரத்தில் சிவனஸமுத்ரம் என்கிற ஊரில் ரங்கநாதனே கூட கோயில் கொண்டு இருந்தானே.

சத்யகல கிராமத்தில் தினமும் காவிரி ஸ்னானம், அருகே அரசமரத்தடியில் த்யானம், நித்ய கர்மாநுஷ்டானம். தினமும் சுவாமி தேசிகனை அரசமரத்தடியில் ஒரு ஆமை நிழல்மாதிரி தொடர்ந்து வந்தது. ''என் மேல் ஆசனமாக உட்காரு'' என அது அவரை வற்புறுத்தியது அவருக்கு தெரிந்தாலும் ஒரு பிராணியை ஆசனமாக்கிக் கொள்ள தேசிகன் விரும்பவில்லை.

''தேசிகா, அந்த ஆமை ஒரு சுத்தாத்மா, நீ அதன் வேண்டுகோளை ஏற்றுக்கொள்'' என்றான் வரதராஜன் ஒரு நாள் கனவில். அடுத்த நாள் தேசிகன் அந்த ஆமையை சந்திக்க அரச மரத்தடியில் ஆற்றங்கரையில் தேடும்போது அது ஒரு கருங்கல் பாறையாக மாறி இருந்தது. வரதராஜன் கட்டளையால் அன்றுமுதல் சத்யகலத்தில் அந்த கூர்மாசனத்தின் மீது அமர்ந்து தான் தேசிகன் நித்ய ஜபம், தியானம் தொடர்ந்தது. .

ஸ்ரீரங்கத்தின் அபாய நிலை தேசிகர் மனதை வாட்டியது. ஸ்ரீ ரங்கநாதன் மீது அபீதிஸ்தவ ஸ்தோத்ரம் இயற்றினார். ''உன் பக்தர்களை பயமகற்றி பாதுகாத்து க்ஷேமமாக வை. ஸ்ரீரங்கத்தை பிடித்த பீடை விலகவேண்டும்'' என வேண்டியதற்கு பலன் கிடைத்து ஆக்கிரமிப்பாளர்கள் அகன்றனர். தேசிகர் தனது பக்தர்கள் தொண்டர்களோடு ஸ்ரீரங்கம் திரும்பினார் . திருவையாறு அருகே ராயம்பேட்டையில் திரும்பியவர்கள் பலர் குடியேறினார்கள். சத்யகலத்தில் ஸ்ரீ தேசிகர் வாழ்ந்ததை நினைவு கூர்ந்து இன்றும் அந்த கிராமத்தில் ஒவ்வொரு வைஷ்ணவ குடும்பத்திலும் ஒரு பிள்ளைக்காவது தேசிகாச்சார் என்று பெயர் உண்டு என்று அறியும்போது அவர் பெருமையை, மஹிமையை என்ன சொல்வது?

இனி சுவாமி தேசிகன் இயற்றிய அடைக்கலப் பத்து பாசுரங்களில் ஒன்பதாவது பாசுரம் அறிவோம்.

சுரிதி நினைவிவை அறியும், துணிவுடையார் தூ மொழிகள்,
பரிதி மதி ஆசிரியர், பாசுரம் சேர்ந்தருக்கணங்கள்,
கருதி ஒரு தெளிவாளால், கலக்கம் அறுத்தத்திகிரி,
பரிதி மதி நயனமுடைப், பரமன் அடி பணிந்தேனே ||9||

''வரதா, அத்தி கிரீசா, நான் கற்றுணர்ந்த பெரியோர்களிடம் இருந்து வேத சாஸ்த்ர ஸ்ம்ரிதிகளை அறிந்து கொண்டேன். மஹான்கள் இயற்றிய திவ்ய பாசுரங்களை அறிந்தேன். ஆச்சார்யர்கள், குருமார்களிடமிருந்து, ரிஷிகளிடமிருந்து எல்லாம், சூரியனிலிருந்து ஒளியை பெறுவது போல் ஞானம் பெற்றேன். என் சந்தேகங்கள் அறுந்தன . சிந்தனை பரிசுத்த மாகியது. சர்வ லோகேஸ்வரா, சூரிய சந்திர நேத்ரனே, பரம் பொருளே, உன்னை சரணடைந்தேன்''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...