Thursday, March 19, 2020

THIRUPALLANDU




திருப்பல்லாண்டு J K SIVAN
பெரியாழ்வார் 
                                       

நாராயணா   நீ  எத்தனையோ  ஆண்டுகள்  வாழ்க 

குழந்தைகளுக்கு  திருஷ்டி வராமல் பாதுகாக்க, அவர்கள்  ''பல்லாண்டு'' (குறைந்தது பதினாயிரம் வருஷம்)   வாழ தமிழ்நாட்டில்  அம்மாக்கள் பாடுவது வழக்கம்.  நம்மைக் காக்கும்  சாமிக்கே  பல்லாண்டு பாடுகிறார் ஒருவர் என்றால் முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது  அவரது அளவுகடந்த பக்தி, பாசம், நேசம். இறைவன் நம்மை நீண்ட நாள் வாழ வைக்க வேண்டுவது போய் அவனுக்கே  ''நீ  நீண்டகாலம் '' வாழவேண்டும் என்று சொல்வது  எளிதில்
விளக்கமுடியாத பக்தி. ஆழ்வார்களில் அதனால் தான் அவரை பெரியாழ்வார் என்கிறார்கள். அவர் பெயரே  விஷ்ணு சித்தர். சித்தமெல்லாம் விஷ்ணுவிடம் அடகு வைத்தவர். இந்த அடகு மீட்க விருப்பமில்லாத அவனுக்கே அளித்த அடகு.  எந்த சந்தர்ப்பத்தில் இந்த பல்லாண்டு பாடினார்   தெரியுமா?

மதுரையில் அடிக்கடி பெரிய அளவில் மத மாநாடு கூடும். பல மதக் கோட்பாடுகள் கொண்டவர்கள் வந்து தங்கள் பெருமையை ஸ்லாக்கியமாக பேசுவார்கள். வைஷ்ணவர்கள், சைவர்கள், சாக்தர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், என்று பலர் கார சாரமாக வாதம் புரிவார்கள். மற்ற மதங்களை இழிந்து கேவலமாக பேசுவார்கள். எனவே மதுரையில் பாண்டியன் அரண்மனையில் இப்படி ஒரு மாநாடு கூடி எல்லோரும் காரசாரமாக விவாதித்தார்கள். பாண்டிய ராஜாவுக்கு இவர்கள் வாதத்தில் திருப்தியில்லை. பாண்டியன் விஷ்ணு பக்தன். பகவானை வேண்டினான்.   நாராயணன்  பேசாமல் பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பானா? 

''விஷ்ணு சித்தா, எழுந்திரு. உடனே மதுரை போ. அங்கு மத மாநாடு ஒன்று பாண்டிய ராஜா முன்னிலையில், தலைமையில் நடக்கிறது. நீயும் சென்று அதில் பங்கு கொள்''என்று கனவில் விஷ்ணுசித்தர் எழுப்பப்பட்டார்.  

''பகவானே, நானா?  ராஜ சபையில்  பண்டிதர்களோடு  வாதம் புரிவேனா? வாதம் பண்ணும் திறமை இல்லாத சாதாரணன் ஆச்சே நான். என்னை போகச் சொல்கிறீர்களே! இது நியாயமா?''

'' இல்லை, விஷ்ணு சித்தா, நீ போய்ப் பேசு, நீதான் ஜெயிக்கப் போகிறாய். ஹரி பக்தியை எடுத்துச்சொல்ல உனக்கு யாரும் கற்றுத் தரவேண்டியதில்லையே? உடனே போ. பாண்டியனுக்கும் சபையோருக்கும் அதை எடுத்துச் சொல்லேன் ''

புது தெம்போடு விஷ்ணு சித்தர் மதுரை நடந்தார். வைணவ மத சார்பாக ஒருவர் வந்திருக்கிறார் என்று பாண்டியன் அறிந்து அவரை வரவேற்றான். ''உங்கள் வாதத்தை முன் வையுங்கள்'' என்றான்.

எத்தனையோ கேள்விகள் அவரை துளைத்தன. பெரியாழ்வாருக்கு எங்கிருந்தோ ஒரு அமானுஷ்ய சக்தியும் ஞானமும் வந்து அனைத்துக்கும் அசாத்தியமாக விளக்கங்கள் கூறினார். நாராயணன் ஒருவனே உயர் தெய்வம். உயர் சத்யம், சர்வ லோக ரக்ஷகன். அவனை சரணடைந்தவர்களுக்கு எந்த குறையும் இல்லை. குறையொன்றும் இல்லாத கோவிந்தனே காக்கும் தெய்வம் பாதுகாக்கும் ரக்ஷகன் என்று  சிம்ம கர்ஜனை செய்தார்.

''ஓம் நமோ நாராயணாய '' என்கிற சர்வ சக்தி வாய்ந்த அஷ்டாக்ஷர மஹா மந்த்ரத்துக்கு எதுவும் ஈடு இணையில்லை . இதுவே தாரக மந்திரம், சர்வ சக்தியோடு, சர்வ வியாபியான ஹரியின் பாதங்களை பிடித்தோர்க்கு பரகதி நிச்சயம் ''. சண்டமாருதமாக மூச்சு விடாமல் பேசி அசத்திவிட்டார் விஷ்ணு சித்தர்.

அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. பொற்கிழி ஒன்று ஒரு உயர்ந்த கம்பத்தில் நடு நாயகமாக வெற்றி பெற்றவர்க்கு பரிசாக வைக்கப் பட்டிருந்தது. T 20 கிரிக்கெட் போட்டியில் அழகான ஒரு கார் பரிசாக வைக்கப்பட்டு கண்ணை உறுத்துமே அது போல். விஷ்ணு சித்தர் பேசி முடித்ததும் அந்த பொற்கிழி தானாகவே தாழ்ந்து வளைந்து அவர் காலடியில் ''தொப்'' பென்று வந்து விழுந்தது. பாண்டியன் அசந்து விட்டான். பரம திருப்தி அவனுக்கு.  பெரியாழ்வாரை பட்டத்து யானை மேல் அமர்த்தி ஊர்வலம் வரச்செய் தான் பாண்டியன். அந்த கண்கொள்ளாக் காட்சியைக் காண நாராயணன்  மஹாலக்ஷ்மியோடு கருடவாஹனராய் வந்தது  பெரியாழ்வார் கண்ணுக்கு தெரிந்து அவனழகில் மயங்கினார்.  

''ஐயோ  இந்த கலியுகத்தில் இத்தனை கொள்ளை அழகோடு நாராயணன் காட்சிதருகிறானே.  அவன் அழகைக் கண்டு எத்தனையோ கண்கள் திருஷ்டி வைத்து அவன் அழகுக்கு தீமை உண்டாகிவிடுமோ என்று நடுங்கினார். பொங்கிவரும்  பரிவு, பாசம்,  நேசம், பக்தி எல்லாம் கலந்து  நீ சுகமாக  பல ஆண்டுகள்  வாழவேண்டும் பரமா  என்று  பன்னிரண்டு பாசுரம் பாடினார். 

பெரியாழ்வார் இயற்றிய திருப்பல்லாண்டு 12 பாசுரங்கள் கொண்டது.  எப்படி  ''ஓம்'' என்ற  பிரணவ மந்திரத்துக்கு பிறகே  வேதம் ஓதப்படுகிறதோ அதுபோல் திராவிட வேதத்தில் பெரியாழ்வாரின் திருப் பல்லாண்டு இல்லாமல் மற்ற பாசுரங்கள் துவங்குவதில்லை  அன்றும் இன்றும் என்றும். 

(1)பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

என் தெய்வமே,  கண்ணைப்பறிக்கும்   மரகத பச்சை  மா மலை போல் மேனியனே,  உன் திரண்ட  தோள்களின்  வலிமைக்கு எத்தனையோ ராக்ஷஸர்கள் பலியாகியுள்ளார்களே. சிவந்த உனது தாமரைமலர்ப் பாதங்கள்  எண்ணற்ற  எத்தனையோ கோடி கோடி  ஆண்டுகள் பாதுகாக்கப்பட்டு  பக்தர்களுக்கு அருளவேண்டும்....


(2)அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே


ஸ்ரீமந்  நாராயணா , என்னைப்போன்ற எண்ணற்ற  வைணவ அடியார்களுடன், எங்கள் நாயகன் உன் தொடர்பு என்றென்றும் காலம் கடந்து நீடிக்கவேண்டும்.  உன் வலது மார்பில் ஒளிவீசிக்கொண்டு அழகாக வீற்றிருக்கும்  மஹாலக்ஷ்மியும் எத்தனை எத்தனையோ கணக்கற்ற ஆண்டுகள் வாழவேண்டும். நீ வலது கரத்தில் தாங்கி இருக்கும்  சுதர்சன சக்கரமும் அத்தனை வருஷங்களுக்கு  வாழ்க.  பாஞ்சஜன்யம் எனும் உன் வெண்ணிற சங்கின் ஒலியைக் கேட்ட எதிரிகள் செத்து விழுவார்களே  அந்த சங்கும் அத்தனை வருஷங்களுக்கு வாழ்க.

இன்னும்  பத்து பல்லாண்டுகள்  அடுத்த பதிவில்...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...