Monday, March 9, 2020

NAVAGRAHA TEMPLES CHENNAI






                                       
       சென்னையில் செவ்வாய் கிரஹ ஆலயம் 
                                          J K   SIVAN  


இந்த வருஷம்  எனது  சிவராத்திரி சிவ தரிசனத்தில் ஒரு ஆலயம்  பூந்தமல்லி  வைத்தீஸ்வர சுவாமி ஆலயம். அங்காரக, செவ்வாய் நவகிரஹ க்ஷேத்ரம்.

சென்னைக்கு தெற்கே இருக்கும் பூந்தமல்லியில் உள்ளது வைத்தீஸ்வரன் கோவில். இந்த ஆலயம்தான் செவ்வாய் பரிகார தலமாக கருதப்படுகிறது.     காரணம் செவ்வாயும், தேவர்களின் அதிபதியான இந்திரனும் இத்தலத்தில் உள்ள வைத்தீஸ்வர சுவாமியை வணங்கி, தங்களது சிரமங்கள் நீங்க பெற்றிருக்கின்றனர். 1,300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் சோழர்களால் நிர்மாணிக்கப்பட்டது. ஹிந்துக்களின்  தெய்வ வழிபாட்டுக்கு மிகச் சிறந்த  பலமாக சோழர்களின் பங்கு அமைந்தது  அந்த கடவுள் கிருபையே . பட்டி தொட்டி யெல்லாம்  பல அற்புத  ஆலயங்கள் அமைத்தவர்கள் அவர்கள்.  அதை பராமரிக்கக்கூட முடியாதவர்கள் நாம்.  இன்றுவரை நாம் அதற்காக  வருந்தவில்லை என்பது அதைவிட கொடுமை.

பூந்தமல்லி சிவாலயத்தில் மூலவர்  வைத்தியநாத சுவாமி., வைத்தீஸ்வரர்.   அம்பிகை தையல் நாயகி . நவக்கிரகங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய்க்குரிய தலமாக இத்தலம் விளங்குகிறது. தெற்கே எப்படி வைத்தீஸ்வரன் கோவிலோ அப்படியே . அதனால் தான்  வட வைத்தீஸ்வரர் கோயில் என்று ஒரு பெயர்.

கர்ப்பக் கிரகத்தின் வெளியில் பனைமரத்தின் கீழ் கல்லில் செவ்வாயின் அங்காரகன்  பாதம் செதுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இது ஒரு பரிகார ஸ்தலமுமாகும். இந்த ஸ்தலத்தில் அங்காரகன் (செவ்வாய்) சிவனை வணங்கியதாக ஐதீகம். அங்காரகனுக்கான சிறப்பு பூஜைகள் செவ்வாய்கிழமைகளில் இங்கு நடத்தப்படுகின்றன.  தேவார பாடல் பெற்ற ஸ்தலம்.  அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுள் .

செவ்வாய்க்கிழமை அன்று வரும் ராகுகால நேரத்தில் இத்தலத்தில் உள்ள அங்காரகனுக்கும், விஷ்ணு துர்கைக்கும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அதன் மூலம் செவ்வாய் பரிகாரமும், தீராத நோய்கள், பகை மற்றும் தோல் நோய்கள் நீங்குவதாக பக்தர்களின் நம்பிக்கை நிலவுகிறது.

வாகன நெரிசலும், ஜன நெருக்கமும் கொண்ட மிக முக்கியமான பகுதியில் இப்படி ஒரு அமைதியான பழங்கால ஆலயம் அமைந்துள்ளது நாம் செய்த பாக்யம். மறக்காமல் இதுவரை செல்லாதவர்கள் ஒரு முறை சென்று தரிசிக்கவும். இப்போது நிறைய  போக்குவரத்து வசதிகள் மலிந்து கிடக்கிறதே. அக்காலத்தில் ஆதி சங்கரர் வழி விசாரித்துக்கொண்டு காட்டிலும் மேட்டிலும் பல காத தூரங்கள் நடந்து வந்து இந்த ஆலயத்தை தரிசித்திருக்கிறாரே.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...