Tuesday, March 10, 2020

MEDITATION




                  ஒரு சின்ன   பர  தத்வம்.  J K  SIVAN 

நமது சந்தோஷம்  மகிழ்ச்சி திருப்தி  எல்லாமே  அல்பமானவை.  உண்பது, உறங்குவது, தின்பது, ஐம்புலன்களால் உணர்வது எல்லாமே  திரும்ப திரும்ப  தேவைப்படுபவையாக இருப்பதால் இவற்றால் கிடைக்கும் இன்பம்  நிரந்தரமானது அல்ல.  இதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு  நீண்ட கால இன்பம், சாஸ்வத இன்பம் தருபவைமேல் நாட்டம் கொண்டால் முன்னேறலாம்.  அளவைக் குறைத்துக்கொண்டு வந்தால்  ஒரு  நிலையில் அது இல்லாமல் கூட  அதனால் கிடைக்கும் இன்பம் வளரும்.  முயற்சி அவசியம்.  தமோகுண, ரஜோகுணம்  நீங்கி சத்வ குணம் அதன் இடத்தைப் பெறுவது அமையும். கொஞ்சம் காலம் தேவைப்படும் அவ்வளவு தான். ஆனால்  விடா முயற்சி கண்டிப்பாக அவசியம்  ஸார் . இந்த சில்லறை இன்பத்தை அடையும்போது கூடவே  என்னென்னால் அவஸ்தை தெரியுமல்லவா? கோபம், தாபம், சண்டாளம், பொறாமை, பொய் , ஐயையோ , எத்தனையோ.

எப்படி கோபத்தை அடக்குவது?   அடேய்  அர்ஜூனா , இந்த கோபம் இருக்கிறதே  அதது தான்  நமது முதல் எதிரி. எல்லாவற்றையும்  கபளீகரம் பண்ணுவது.  பாபங்களுக்கு தாய். (கீதை  3.37).

நாம் அறியாமையால்,  எதிரியை நண்பனாக பார்த்து அருகில் வைத்துக் கொள்கிறோம். நண்பன்  எதிரியாக தெரிகிறான்.  கோபம் ஆத்திரம் அப்படிப்பட்ட  எதிரி. நம்மை ரொம்ப சுலபமாக  ஆக்கிரமித்துவிடுகிறது. நண்பனாகி விடுகிறது.   ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு .  அதனால் விளையும்  கஷ்டங்கள் அதிகம். தவறுகள் மலிந்து விடுகிறது.  முட்டாளாக்கி விடுகிறது.   கோபத்தில்  நம்மிடமிருந்து வெளிவரும்  எண்ணங்கள், வார்த்தைகள் கொடியவை .  அதனால் விளையும்  தீமையான பயன்கள் இன்னும் கொடுமை.  ஆகவே தான் கோபத்தை மெதுவாக  ஒழிக்கவேண்டும். 

ஆசை, விருப்பம், பேராசை, சுயநலம்  ஆகியவை தான்  கோபத்தின் பெற்றோர்கள்.  ஒரு நல்ல சக்தி நம்மிடமிருந்து வீணாவதை தவிர்க்கவேண்டும்.  அவற்றை வீணாகாமல்  சேமித்தால் வாழ்க்கை ரம்யமாக இருக்கும்.   ஆயுள் ஆரோக்யத்தால்  நீளும். 

கீதையில்  (16.21)  இதைத்தான்  கிருஷ்ணன் எடுத்துரைக்கிறார்.  காமம், க்ரோதம், லோபம்,  (ஆசை, கோபம், பேராசை ) ஆகிய மூன்றும் நரகத்தின் நுழை வாசல்கள்.   எல்லாமே  ரஜோகுணத்தை சார்ந்தவை. 

 ஆதி சங்கரரும்  ''அடே மனிதா, உலகத்தில் உன் முதல் வைரி  ஆசை தான்.  அதன் குட்டிகள் தான் மற்றவை.  செல்லக்குட்டி கோபம்.. சம்சார சாகரத்தில் முழுக வைத்து மூச்சு முட்ட வைப்பது. 
ராமர்  சொல்லும் ஒரு அருமையான வாக்கியத்தையும் நினைவு   கூர்வோம். '' நாக்கை அடக்கு, பேராசையை விட்டொழி. நீ எங்கு வேண்டுமானாலும் ஆனந்தமாக சுகமாக இருக்கலாம்''. நாக்கை அடக்குவது ரெண்டு விஷயம். ஒன்று  அனாவசியமாக எதையும் பேசாதே.  உன் வார்த்தை எவரையாவது புண் படுத்துகிறதா என்று யோசித்து பேசு.  பேச்சைக் குறை.   இன்னொன்று,   நாக்கின் சுவைக்கு அடிமையாகாதே.

ஒரு கிசுகிசு.    சைதன்யர் தனது குரு விடம் சென்றார்.

''சுவாமி எனக்கு சன்யாசம் அளியுங்கள்''

''நீ ரொம்ப   இளம் வயதினன். அழகானவனும் கூட. உனக்கு யார் தைரியமாக சன்யாசம் அளிப்பார்கள்?

'' ஐயா  ஒரு குருவானவர்  சிஷ்யனுக்கு சன்யாசம் அளிக்கும் முன்பு, அவனை சோதிப்பார். அதில் அவன் தேர்ந்தால் மட்டுமே சன்யாசியாக்குவார்,  என்னை சோதியுங்கள், நான் சன்யாசம் பெற தகுதி பெற்றால் எனக்கு  தீக்ஷை வழங்குங்கள்''

''உன் நாக்கை நீட்டு ''

சைதன்யர் நாக்கில்  சர்க்கரையை  ரெண்டு ஸ்பூன்  போட்டார் குரு.  சர்க்கரை துளியும்  கரையவில்லை. 
சுவை நரம்புகளை தட்டி எழுப்பவில்லை சைதன்யர்.  காற்றில் சர்க்கரை பறந்து கீழே  பொடியாக  விழுந்ததே தவிர  எச்சிலில் கலந்து இனிமையாக உள்ளே செல்லவில்லை.   எவ்வளவு மனக்  கட்டுப்பாடு இருந்தால் சர்க்கரை நாக்கில் கரையாமல் அப்படியே  உலர்ந்து இருக்கும். 
நாவடங்கினால்  மனிதன் சந்தோஷத்தை அடைய முடியும்.    
ஐம்புலன்களை அடக்க முடிந்தவனைப் பற்றி பேசவே வேண்டாம்.   அவன் ஜிதேந்திரியன். ஞானி.  இதற்கு காலேஜ் படிப்பு,  சொத்து, வீடு வாசல், வெளிநாட்டு பயணம், பாங்கில் ரொக்கம்,  எதுவுமே  தேவையல்ல.  ஒரு சிறு ஓட்டை இருந்தால் கூட போதும், அவ்வளவு நீரும் பாலும் கசிந்து பானை காலியாகிவிடும். ஆகவே எந்த புலன், இந்திரியத்துக்கும் அடிமையாக கூடாது.  

சத்வ, ரஜோ, தமோ குணங்கள் ப்ரக்ருதியை சார்ந்தவையே தவிர  ஆத்மாவுடன் சம்பந்தமில்லாதவை. 
ஓம்  எனும்  மந்திரம் சத்வ குணத்தை பெருக்கி மற்ற இரு குணங்களை   மெல்ல  வலுவிழக்க செய்து கடைசியில் முற்றிலும்  மறையச்  செய்யும் சக்தி படைத்தது.   மனம் பரிசுத்தமாகி விட்டால் கிருஷ்ணன் தானே வந்து குடியேறி  விடுவான். நமது அறையில் குப்பை சேர்ந்திருந்தால் நாம் அங்கே உட்காருவோமா?  . முதலில் அறையை சுத்தம் செய்யமாட்டோமா? 

 மனம் பரிசுத்தமானால் பரமாத்மன் சந்தோஷமாக உள்ளே புகுவான். ''கட  உள்ளே''  என்று கடவுளை பூட்டி வைத்துக் கொள்வோம். 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...