Wednesday, March 4, 2020

kalabairavashtakam






கால பைரவாஷ்டகம் 5                             J.K. SIVAN
ஆதி சங்கரர் 


                                                   
         
             சிதம்பர அதிசயமா  ரகசியமா?

இது வரை  ஆதிசங்கரர்  இயற்றிய  காலபைரவாஷ்டகம் எனும்  எட்டு ஸ்லோகங்களில் நான்கை படித்தோம்.  பைரவர் உபாசனை, வழிபாடு பெரும்பாலான ஹிந்துக்கள் கடைபிடிப்பது.  பைரவர்களில் பிரதானமானவர் காலபைரவர்.  ஸாக்ஷாத்  பரமேஸ்வரனுடைய ஒரு அம்சம். காக்கும்  தெய்வம். 

காலபைரவாஷ்டகம் என்பது காசியில் இருக்கும் காலபைரவர் மீது ஆதி சங்கரர் இயற்றிய எட்டு ஸ்தோத்திரங்கள்.

 காலபைரவர் சிவனின் கோப, சக்தி அம்சம். சிவனைப்பற்றி, அவனது காலபைரவ மஹத்வத்தைப் பற்றி சிந்திக்கும்போது நம்மை அறியாமல் நாம் கொஞ்சம் சிதம்பரத்தை பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்ளவேண்டும்.

எந்த காலத்திலோ, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது ரிஷிகள், முனீஸ்வரர்கள், தம்மை த்யானத்தில்  யோகத்தில் ஸ்புடம் போட்டு  உடல் வருத்தி அறிந்த உண்மைகளை, அவர்கள் அறிந்து, அனுபவித்து, நமக்கு அறிவித்ததை இப்போது, பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன.(Centre Point of World’s Magnetic Equator). ஆம்  ரிஷிகள் த்யானத்தில்  ஞானத்தில் அறிந்ததை இப்போது விஞ்ஞானம் சொல்கிறது. 

நாம் எப்போதுமே நம்மிடம் இருக்கும் அற்புத விஷயங்களை அறியாத ஒரு கூட்டம். இங்கிருந்து கெட்டிக்காரர்கள் அவற்றை கவர்ந்து கொண்டு போய் நமக்கு இங்கிலீஷ்ல சொன்னால் அவர்களை வணங்கி கை தட்டி வரவேற்பவர்கள்.

எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் பேசாமல் ஒரு மரத்தடியிலோ, கோவில் ப்ராகாரத்திலோ, தனிமையாக இயற்கையாக, கண்ணை மூடிக்கொண்டு, சிந்தனையை குவித்து பிரபஞ்சத்தை தன்னுள் கண்டு அனுபவித்து அந்த ஞானிகள், மகான்கள் போதித்த கணக்கற்ற ஞானமுத்துக்களில் ஒன்று தான் இந்த சிதம்பர ரகசியம், அற்புதம், அதிசயம்.

இதனைக் கண்டறிந்த நமது ஞானிகளை, ரிஷிகளை, இக்கால விஞ்ஞானி களோடு ஒப்பிடுவது மகா பாபம். அணுத்  துகள் எப்போதுமே அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவர்கள் சாதனை எப்பேற்பட்டது.? அதை இன்னும் நம்மால் புரிந்துகொள்ளமுடியவில்லையே.

5000 வருடங்களுக்கு முன்பே திருமூலர் இதை தனது திருமந்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.   திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது. புரிகிறதா? திருமூலரின் திருமந்திரம் உலகிற்கே வழிகாட்டி. இதை உணர்ந்து கொள்ள எல்லோருக்கும் இன்னும் ஒரு நூற்றாண்டு கூட தேவைப்படலாம். அவர் சாதாரணமாக இப்போதைய தமிழ் சினிமாக்களுக்கு காதல் சீனுக்காக ''ஜாலிலோ ஜிம்கானா என்று ஏதோ, காசுக்காக  அர்த்தமில்லாமல் எழுதவில்லை. 

திருமூலரின் ஒவ்வொரு  பாடலும்  ஒரு மந்திரம்.  நமக்கு கிடைத்தவை  மூவாயிரம் மந்திரங்கள்.. ஒரு மந்திரம் எழுத ஒரு வருஷமாம். மொத்தம் மூவாயிரம் தான் நமக்கு கிடைத்திருப்பது  என்பதாலேயே   திருமூலர் என்ற பிரம ஞானி மூவாயிரம் வருஷங்கள் மரத்தடியில் உட்கார்ந்து சிந்தித்து எழுதியது என்று  உணரமுடிகிறது.  நம்பாமல் சிரிப்பவன் சிரிப்பாய் சிரிக்கட்டுமே. நமக்கெதற்கு அந்த பிரச்னை.!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம், ஆச்சர்யங்களில் சில:

நமது முன்னோர்கள் எதையுமே ஒரு தெளிவான சிந்தனையோடு தான் செய்பவர்கள். அவர்கள் கட்டியிருக்கும் பிரம்மாண்டமான கற்கோவில்கள் சில அற்புதங்களை உள்ளடக்கியவை அல்லவா?

(1) சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய காந்த ரேகையின் சரியான மையப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic 
Equator).

(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காள ஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது. இது தற்போதைய சயன்ஸ் சாஸ்திரங்கள் வியக்கும் வானவியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்  தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதனின் ஒரு நாளைக்கான சராசரி  சுவாசம்.  21600 தடவை சுவாசிக்கிறோம் . (ஒரு நிமிஷத்துக்கு 15,  அறுபது நிமிஷமான ஒரு மணிக்கு  15x 60, ஒருநாளில் அதாவது 24 மணியில்   :  15*60*24 = 21,600 சுவாசங்கள்).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமூலர் இதை சுருக்கமாக  எப்படி சொல்கிறார்:  

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று சொல்கிறோம். அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்க வாட்டில் வருகின்றது. இந்த கனக சபையை  தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான  நவ  சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப் படுகின்றது.

''நவீன விஞ்ஞானமே, வாயைப் பிளக்காதே'' இன்னும் கூட நிறைய சொல்லமுடியும். இதற்கே அசந்து போய் விட்டாயே. போய் சூடாக ஒரு டோஸ் டிகிரி காப்பி குடி.

இதற்கிடையில் கொஞ்சம் அந்த சிவனைப்பற்றி, காலபைரவனாக இன்று ஐந்தாவது அஷ்டகம் தெரிந்து கொள்ளவேண்டாமா?

धर्मसेतुपालकं त्वधर्ममार्गनाशकं । कर्मपाशमोचकं सुशर्मदायकं विभुं ॥
स्वर्णवर्णशेषपाशशोभितांगमण्डलं । काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥५॥

''தர்மஸேது பாலகம் த்வதர்மமார்க னாஶகம்
கர்மபாஶ மோசகம் ஸுஶர்ம தாயகம் விபும் |
ஸ்வர்ணவர்ண கேஶபாஶ ஶொபிதாங்க னிர்மலம்
காஶிகாபுராதினாத காலபைரவம் பஜே || 5 ||

''பொன்னார் மேனியனே, பரமேஸ்வரா, பராத்பரா, தர்ம ரக்ஷகா,தர்ம பரிபாலன மூர்த்தி, அதர்மத்தை விநாசம் பண்ணுபவனே, கர்ம பாசத்தில் கட்டுண்ட எமை கட்டவிழ்த்து விடுவித்து ரக்ஷிப்பவனே, அசாத்தியமான திரிமூர்த்தி, வார்த்தைகளுக்கு எட்டாத ருத்ரா, புண்ய க்ஷேத்ரமான காசிகா நகர அதிபதி கால பைரவா, உனக்கு எண்ணற்ற நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறோம். ஏற்றுக்கொண்டருள்வாய்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...