Monday, March 9, 2020

HOLI



ரங்வாலி ஹோலி .      J K  SIVAN 

                            கண்ணன் பூசிய வண்ணம்   ... 


நாம்  எவ்வளவு துன்பம்  அனுபவித்தாலும்  கூடவே  இன்பமாக மகிழ்ச்சியாகவும் இருக்க  தெரிந்தவர்கள் அதற்காகவே  எண்ணற்ற  பண்டிகைகளை  குறைந்த பக்ஷம் மாதத்திற்கு ரெண்டாவது வைத்திருக்கிறோம்.
இன்று  ஹோலி பண்டிகை. 
இந்தியாவில் கேட்கவே வேண்டாம். வெளிநாடுகளில், பிரதேசங்களில்  இந்தியர்கள்  வாழும் இடங்களில் பரவலாகவும்  வருஷா வருஷம்  ஹோலி பண்டிகை  எல்லோர் மேலும் கலர் கலராக  கொண்டாடப்  படும்.  வெள்ளை சட்டை பார்க்கமுடியாது.  தன்னை வானவில்லாக்கியதற்கு எவரும் கோபிக்க மாட்டார்கள். மகிழ்ச்சியோடு சிரிப்பார்கள். எப்போதும் அல்ல. அன்று ஒரு நாள். அது தான் ஹோலி பண்டிகை. 

ஹோலி பண்டிகை  கெட்டதை நல்லது, தீமையை நன்மை வென்ற நாள். அன்பின் வெளிப்பாடு. வசந்தத்தின் வரவை அறிவுறுத்தும் நாள் என்றெல்லாம்  அர்த்தம் சொல்வார்கள்.  சந்தோஷம் எப்படி வந்தால் என்ன?

ஹோலி கொண்டாட  வயசு கிடையாது.  ரங்வாலி ஹோலி என்றால்  கிழம் கட்டைகள் கூட ஒருவர் மேல் ஒருவர் சாயம் பூசும், பீச்சும். வடக்கே ஜாஸ்தி எல்லாமே கலர் கலராக  சிரிக்கும் . கிருஷ்ணன் பிறந்து விளையாடிய ஊரில்  அடேயப்பா  .... கொஞ்சம்  பின்னாலே போவோம்  இப்போது நான் பிருந்தாவனத்தில் அல்லவா இருக்கிறோம் ...

கோபிகளோடு கிருஷ்ணன் யமுனா நதி தீரத்தில் ராஸ லீலையில் அனைவரோடும்  விளையாடுகிறான் . ஞாபகம்  வைத்துக்கொள்ளுங்கள்  கண்ணனுக்கு  பத்து வயதுக்கு மேலே  இல்லை........

அப்போது ராதை எங்கிருந்தோ ஓடிவந்து அவனை இறுக அணைத்துக்கொள்கிறாள். மூச்சு முட்டுகிறது. அந்த சந்தோஷத்தோடு உரத்த குரலில் கண்ணன் மீது கொண்ட அன்பை பாசத்தை பெருமையோடு பாடுகிறாள். மற்ற கோபியர்களும் போட்டி போட்டுக்கொண்டு வந்து கண்ணன் மீது முட்டி மோதி அவனை தமது சொத்தாக்க க முயல்கிறார்கள். கண்களில் ஆர்வம், மனதில் இன்பம். பக்தியும் பாசமும் கலந்த சொல்ல இயலாத சுகம்.

ஒருத்தி எப்படியோஅவனது முகத்தை இறுக்கி பிடித்துகொண்டு காதில் ஏதோ ரகசியம் சொல்வதுபோல் அவன் கன்னத்தில் நிறைய முத்தமிட்டுவிட்டாள் . அவளது நீண்ட நாளைய ஆவல் நிறைவேறியது.

ஒருவள் கிருஷ்ணனின் பீதாம்பரத்தை இழுத்து அவனை தன்னோடு சேர்த்துக்கொண்டு கரும்பு  தோட்டத்தில் தொபுகடீர் என்று அவனோடு சேர்ந்து வீழ்ந்தாள்.

ராதையும் கிருஷ்ணனும் நிஜமும் நிழலுமாகவே தோன்றினாலும், நிலவும் குளுமையும் போல் இணை பிரியாமலே நமக்கு காண்கிறார்கள். ராதையை நினைக்காமல் கண்ணனை எண்ண முடியவில்லை. ராதா இருந்தாளா, என்பதே கேள்வி இல்லை. கிருஷ்ணன் இருந்தான் என்றால் ராதை இருந்தாள் என்பதே விடை.

பிருந்தாவனத்தில் உடலும் உயிரும் கண்ணனே. அவர்கள் வாழ்க்கையே அவனைச் சுற்றியே அமைந்திருந்தது. கோபியர் அவனோடு சேர்ந்து விளையாடினர். அவன் குழல் நாதத்தில் மயங்கினர். அன்பை எவ்வளவு அவன்மீது கொட்டினார்களோ பலமடங்கு அவனிடமிருந்து அதை பெற்ற பாக்யசாலிகள். கோபியரில் தலை சிறந்தவளாக திகழ்ந்தவள் ராதா. அவளது குரல் கண்ணன் குழலைப் போன்று இனிமையானது என்று கூட சொல்லும் அளவுக்கு காந்த சக்தி கொண்டது. 

கண்ணன் குழல் ஒலி உலகையே தன்னுள் அடக்கும் சக்தி வாய்ந்தது. அதில் மயங்கிய அனைத்து கோபியரும் கண்ணனை தங்கள் இதயத்தில் பிணைத்துக் கொண்டதோடு அல்லாமல் அவனைத் தங்களுக்கே என்று ஒவ்வொருவரும்  போட்டி போட்டார்கள்.சொந்தமாக கருதினார்கள். அதில் முதலாவது ராதா. கிருஷ்ணன் தனது பிரேமையை அவளுக்கே அளித்தான். அவனிலும் 10 வருஷங்கள் அவள் மூத்தவள் என்பது அங்கு வித்யாசமாக படவே இல்லை. பிரேமைக்கு வயசோ, வித்தியாசமோ, மதமோ, மொழியோ எந்த பேதமும் கிடையாதே. இருமனம் ஒன்றாய் கலந்தபின்னாலே எது வரும் குறுக்கே?

மனித காதலோடு தெய்வீக பிரேமையை ஒப்பிட்டு எடை போடவே கூடாது. தவறான சிந்தனைக்கு அது அடி கோலும். புத்தியை பேதலிக்க வைத்துவிடும். அது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது. 

 ராதாவின் தூய காதல் கண்ணனைக் கட்டிப்  போட்டிருந்தது. எல்லா கோப கோபியரும் கண்ணனை விரும்பினாலும் அவனது அன்பில் பங்கேற்றவர்களாக இருந்தும் ராதை எப்போதுமே தனி இடம் பெற்றிருந்தாள் . கண்ணனின் எண்ண பிரதிபலிப்பு அவள். இளம் வயதில் கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் ராதையோடு சேர்ந்து விளையாடினான்.  கொஞ்சம்  பெரியவள்  என்றாலும்  அவனோடு   சரி சமமாக ஜோடியாக விளையாடினாள்.

ஒருநாள் கிருஷ்ணன் தேம்பி தேம்பி அழுதான். வெகுநேரம் யாரும் சமாதானம் செய்தும் அழுகை நிற்கவில்லை.

''எண்டா கிருஷ்ணா அழறே, உனக்கு என்ன ஆச்சு? .பதறினாள் யசோதை. சாப்பிட மறுத்தான். எவ்வளவோ சொல்லியும் முடியாது என்று தலை அசைத்தான். கெஞ்சிக் கூத்தாடி ஏன் அவன் அழுகிறான் என்ற காரணத்தை  மெதுவாக கண்டுபிடித்தாள்  அம்மா யசோதை.

''ராதா மட்டும் அழகாக சிவப்பா இருக்கிறாளே ?' நான் கருப்பா  இருக்கேனே''

விம்மலுக்கு இடையே ஒவ்வொரு வார்த்தையாக காரணத்தை வெளியிட்டான் அந்த மாய கிருஷ்ணன்.

''அப்படி ஒண்ணும் இல்லைடா என் செல்லமே. நீ தான் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு'' என்றாள் யசோதை அவனைக் கட்டிக்கொண்டு.

''நான் அழகு என்று யார் உன் கிட்டே சொன்னது? ராதாவை விடவா?.
 அவள் தானே    சிகப்பு.நான்  ஏன்  கறுப்பா இருக்கேன்?''

''சிவப்பா இருந்தா தான் அழகு என்பதே தப்பு. கருப்பா மினுமினுன்னு இருக்கிற கண்ணைப் பறிக்கிற கிருஷ்ணா ,  உன்னைவிட யாருமே அழகு உலகத்திலேயே யாரும் கிடையாதுடா. கருப்பு இல்லாம வெளுப்பு இல்லை. இரவு இல்லாம பகல் இல்லை.  பிரபஞ்சமே முழுதும்  கருப்பா  இருட்டா  தான் இருக்கு.  இருண்ட பிரபஞ்சம் இல்லாமல் சூரியனோ நக்ஷத்திரங்களோ இல்லை. '' ஒரு பிரசங்கமே செய்துவிட்டாள் யசோதை.

ஒ அப்படியா. அப்போ கருப்பு தான் அழகு என்கிறாயா அம்மா ?''

''ஆமாம் ஆமாம் ''

''சரி உன்னையும் அந்த ராதாவையும் கருப்பா பண்ணிவிடுகிறேன்;; என்று கண்ணன் யசோதை, ராதையின் முகம் கை எல்லாம் கருப்பு நீல வண்ணம் பூசினான். மற்ற கோபியர்க்கும் கூட பூசினான். தை வடக்கே கிராமிய ஓவியமாக பல இடங்களில் இதை வீட்டுச் சுவற்றில் படமாக வரைந்திருக்கிறார்கள். '

கண்ணன் இவ்வாறு ராதைக்கும் மற்றோருக்கும் வண்ணங்கள் பூசியதை இன்றும் கொண்டாடுகிறார்கள். ஹோலி பண்டிகை இது தானோ? அன்று தெரிந்தவர் தெரியாதவர் எல்லோர் மீதும் வண்ணங்கள் கலந்த பொடிகள், கலவைகளை பூசுவார்கள், நீரில் கலந்து பீச்சுவார்கள். இன்றும் கண்ணன் ராதா சம்பந்தப்பட்ட பர்சானா, பிருந்தாவன், கோகுலம், மதுரா என்று அநேக இடங்களில் இந்த வண்ணக்கலவை பூசும் வைபவம் கோலாகலமாக நடைபெறுகிறது. அனைவருமே மகிழ்வர். கண்ணன் சம்பந்தப்பட்ட எல்லாமே மகிழ்ச்சி தானே

என்  வீட்டுக்கு  நேர்  எதிர் வீட்டில் ஒரு பீஹார் குடும்பம். நிறைய ஆணும் பெண்ணுமாக சிரிப்பும் கும்மாளமும். எல்லோரு கையிலும் வண்ணப்பொடிகள். பேங்க்கு போகலாம் என்ற எண்ணம். என்று மில்லாமல் இன்று ஏன் எனக்கு புத்தி   இப்படிப்போயிற்று. வெள்ளைச் சட்டை . வெள்ளை வேஷ்டி.. வாசலில் என்னைப் பார்த்ததும் சில இளசுகள் ஏதோ அவர்கள் மொழியில் பேசி சிரிக்கும்போது எனக்கு பட்சி சொல்லியது. உடனே எனக்கு எதிர்புறமாக இருந்த சந்தில் தீயணைக்கும் இன்ஜின் மாதிரி என் ஸ்கூட்டரை விட்டுக்கொண்டு வேகமாக சென்று    வண்ணப்பூச்சில் ஹோலி யிலிருந்து தப்பினேன். திரும்பி வரும்போதும் பால் திருட வரும் பூனை மாதிரி நாலு பக்கமும் பார்த்துக்கொண்டு சப்தமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்தேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...