Friday, March 6, 2020

LALITHA SAHASRANAMAM

7/3/20




            ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(851 -865 ) J.K. SIVAN

ஜன்ம  ம்ருத்யு ஜராதப்த ஜன விஶ்ராம்தி தாயினீ |
ஸர்வோபனிஷ துத்குஷ்டா, ஶாம்த்யதீத களாத்மிகா || 159 ||

கம்பீரா ககனாந்தஸ்தா  கர்விதா  கானலோலுபா |
கல்பனாரஹிதா  காஷ்டா  காந்தா காந்தார்த்த விக்ரஹா || 160 ||

கார்ய காரண நிர்முக்தா  காம கேலி தரங்கிதா  

கனத்-கனகதாடங்கா  லீலாவிக்ரஹ தாரிணீ || 161 ||

                     

  லலிதா ஸஹஸ்ரநாமம் - (851-865 ) அர்த்தம்

*851 ஜன்ம ம்ருத்யு ஜராதப்த ஜன விஶ்ராம்தி தாயினீ |  जन्म-मृत्यु-जरा-तप्त-जन-विश्रान्ति-दायिनी .    இந்த உலகில் தோன்றி யவர்கள்,  தோன்றியவைகள், எல்லாமே  பிறப்பு, வயோதிகம், முதுமை,  இறப்பு என்ற வழியில் தான் தப்ப முடியாமல் செல்லவேண்டும். மீண்டும் அதே.  அவர்களுக்கு ஆறுதல் தரும் ஒரே தெய்வம் அம்பாள் ஸ்ரீ  லலிதை தான்.  தாயல்லவா?  முக்தி ஒன்றே இந்த பந்தத்திலிருந்து விடுபடும் மார்க்கம்.  ஸ்வர்கம் என்பது நிரந்தரவாசமல்ல . ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தான்.  அப்புறம் விடுதியை காலி செய்துவிட்டு கீழே இறங்கவேண்டும். முக்தி என்பது  ஆத்மா  இறைவனோடு ஒன்று  சேர்வது. அதற்கு  பிறப்பு இறப்பு இல்லை.  அது தான் ப்ரம்மத்தோடு கலந்துவிட்டதே. அதற்கு தனியாக எந்த அடையாளமும் இல்லையே.

*852* ஸர்வோபநிஷதுத்குஷ்டா, सर्वोपनिषदुद्गुष्टा    எல்லா உபநிஷதங்களும் போற்றுவது அம்பாளைத்  தானே.  அவள் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவள். சக்தி வாய்ந்தவள். அவள் சொல்லுக்கு மறுப்பு இல்லை.  ஞானத்தை தருபவை  உபநிஷதங்கள். அவற்றின் உருவம் அவள்.  ப்ரம்ம ஸ்வரூபம்.  அவளில்லையேல் சிவன் இல்லை. பக்தர்களை சிவனிடம் கொண்டு சேர்ப்பது சக்தி தான்.

ஏற்கனவே சொல்லி இருப்பதால் உங்களுக்கு தெரியுமல்லவா?  உபநிஷதங்கள்  வேதங்களின் சாரம். அந்தம். முடிவு.  ப்ரம்ம ஞானத்தை அடைய உதவுவது.  உபநிஷதங்களுக்கு  ஞான காண்டம் என்று பெயர் உண்டு. பிரம்மத்தை அறிய, தெரிய, உணரச்  செய்வதால்  இந்த பெயர்.  சாந்தோக்ய உபநிஷத்  (I.i.10) “ ஞானமும், அறியாமையும் வெவ்வேறு முடிவை தருபவை. ஞானத்தை அறிவதன் மூலம், ஆச்சர்யன் மேல் பக்தி, நம்பிக்கை கொண்டு அதை உணர்பவன், தெளிபவன்,  வேதங்களை அறிபவன் பயன் அடைகிறான்'' என்கிறது.  ரிஷிகள் பலர் இப்படி எல்லாம் அற்புதமாக எழுதி வைத்து விட்டு போயிருக்கிறார்கள்.  அஞ்ஞானம் என்ன செய்யும் என்று சொல்லவோ  எழுதவோ வேண்டாம். அனுபவிக்கிறோமே  தெரியாதா? போதாதா?

உபநிஷதங்கள் ப்ரம்மத்தோடு ஆன்மாவை இணைப்பவை என்கிறது ப்ரம்ம சூத்ரம்.  (III.iii.1),இப்படி  ஆன்மாவுக்கும்  ப்ரம்மத்துக்கும்  இணைப்பு பாலமாக விளங்குபவள் அம்பாள். 

*853* ஸந்த்யதீத களாத்மிகா  शन्त्यतीत-कलात्मिका -  ஸந்த்யதீத  என்றால் சாந்தியை அளிக்கும் நிலை. நவாவரண பூஜையில் வரும் வார்த்தை.  ஜீவன் முக்தி அளிக்கும் நிலை.  அவித்யா முழுதும் மறைந்த நிலை. அம்பாள் அந்த நிலையில் சதா இருப்பவள்.

*854* கம்பீரா, गम्भीरा    -   எல்லாவற்றினுக்கும் உறைவிடமாக இருப்பவள்.   தெய்வீக சக்தியின் உறைவிடம். உன்னத சக்தி கொண்டவள். 

*855*  ககனாந்தஸ்தா  गगनान्तस्था  -   ககனம் என்றால் ஆகாசம் . அம்பாள்  எல்லையற்ற  வெளியை கடந்தவள் .   ஸ்வீதாஸ்வதார உபநிஷத்  என்ன சொல்கிறது?  (III.9)  “அதே ஆத்மா  தான் முழு  பிரபஞ்சம்''. அதாவது ப்ரம்மம்.  அம்பாளுக்கு ''மஹா பிரளய சாக்ஷிணி '' என்று ஒரு அற்புதமான நாமம் உண்டு. .

*856* கர்விதா, गर्विता  -  அவளிடம் காணப்படும் கர்வம் நம்மிடம் உள்ள வறட்டு கர்வம் இல்லை.  சர்வமும் தன்னுள்  அடங்கிய பெருமிதம் அது. கருணையால் பொங்கி வழிவது. '' நான்'' என்பதை கடந்தது. நம்மிடம் காணும் அகம்பாவம் அங்கே அவளிடம்  இல்லை.

*857* கானலோலுபா  गान-लोलुपा  -  அம்பாளுக்கு  கீதம், கானம்  ரொம்ப பிடிக்கும்.  சியாமளா தண்டகத்தில் ''ஜெய  சங்கீத ப்ரியே''  என்று வருமே.  ஒருவிஷயம்  தெரியுமா?  அம்பாளுக்கு அற்புத குரலாம் !  சௌந்தர்ய லஹரி சொல்கிறது  (verse 66).  எப்படிப்பட்டதாம் தெரியுமா?  சரஸ்வதி  தேவியின் வீணை கம்பிகள் எழுப்பும் நாதத்தின் இனிமையை விட  அதிகமான  இனிமையாம்.

*858* கல்பனாரஹிதா, कल्पना-रहिता  -    சத்ய ஸ்வரூபி, ஸ்ரீ லலிதாம்பிகை கற்பனைகள் நிரம்பியவள்  அதே நேரம் அவை இல்லாதவளாகவும் தோன்றுபவள். சத்யம் நிரம்பிய இடத்தில் கற்பனைக்கு இடம் ஏது? கல்பனா ரஹிதா வை  பிரித்து அர்த்தம் சொல்வதுண்டு  கல்ப- நர-ஹிதா -  கல்பம் என்றால்  ப்ரளயகாலம்,  அப்போது நரர்களுக்கு உதவிசெய்ய தனது கர்ப்பத்தில்  ஜீவன்களை பாதுகாத்து வளர்த்து அளித்தவள்  என்று பொருள் படும்.   
ஸமஸ்க்ரிதம்  ஒரு  அளவற்ற சிறந்த மொழி என்பதற்கு இந்த சிறிய உதாரணமே போதும். பிரித்து பதம் சொல்லும்போது தனித்வம், மஹத்வம்,  விளங்கும்.
\
*859*  காஷ்டா   काष्ठा -  எது  வளர்ச்சியின் எல்லையோ,   அது வரை மனித முயற்சி தொடரும்.   பிரம்மத்தை தாண்டி எதுவும் இல்லை.  அதை நாடுவது தான் ரிஷிகளின் முயற்சி.  பெரிதிலிருந்து சிறியதற்கு  தேடல்.  அண்டத்திலிருந்து அணுவுக்கு  நாட்டம்.  காஷ்டா என்பது ஒரு அளவு.  1.60 வினாடி ஒரு காஷ்டா என்பார்கள்.  ஒரு முறை கண் சிமிட்டும் நேரத்தை குறிக்கும்.  யோகிகளின் சக்தி காஷ்டாவில் கணக்கிடப்படும்.  அவ்வளவு சீக்கிரம்.  அவர்கள் அடையும் பாதை எளிதல்ல,  முள்ளும் கல்லும்  நிறைந்து கத்திமுனையில் நடப்பது போல  என்கிறது கடோபநிஷத் (I.iii.14).

*860* அகாந்தா  अकान्ता -  ஸ்ரீ லலிதை  பாபங்களை அழிப்பவள். நல்ல கர்மாக்களை செய்ய வழிகாட்டுபவள்.  என்னைச்  சரணடை. உன் கர்மாக்களை பந்தமின்றி  முடித்து பலனை என்னிடம் விட்டு விட்டு
 என்னைச் சரணடை.  உன் பாபங்களை விலக்குவது எனது வேலையாகிவிடும். எதற்காக  கவலை உனக்கு ? என்கிறார் கிருஷ்ணன் கீதையில்  (XVIII.66.).    இதைத்தான் அம்பாள் செய்கிறாள்.

*861* காந்தார்த  விக்ரஹா  कान्तार्ध-विग्रहा  -  அம்பாள் அர்த்த நாரி . பாதி பரமசிவன். காந்தன் சிவன்.  புருஷன் ப்ரக்ரிதி சேர்க்கை.  சாந்தோக்ய உபநிஷத் (III.xii.6)    “புருஷனான  சிவன் பெருமை பெரியது. பிரபஞ்ச ஜீவன்கள்  அவனில் ஒரு கால் பாகம்.  மற்ற முக்கால் பாகம்  ஸ்வர்கத்தில் அம்ருதம் '' என்கிறது.  அம்ருதம் அம்பாள்.”

*862* கார்ய காரண நிர்முக்தா  कार्य- कारण-निर्मुक्ता  -- அம்பாள் ஸ்ரீ லலிதை  காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவள் அதெல்லாம் நமக்குத்தான்.  எல்லாமே தானான  பரப்ரம்மத்துக்கு காரியமோ  காரணமோ எது?  ஏது?  ''அர்ஜுனா, இந்த மூவுலகிலும் எனக்கு செயல்புரிய என்று எதுவுமில்லை,  எதுவும் தேடவேண்டியதுமில்லை, ஏனென்றால் என்னிடம் இல்லாதது எதுவுமில்லை, இருந்தும் காரியங்கள் என் மூலம் நடந்துகொண்டு தான் இருக்கிறது.'' என்று கிருஷ்ணன் சொல்லவில்லையா?

*863*   காம கேளி  தரங்கிதா  काम-केलि-तरङ्गिता   அம்பாளுக்கு சிவனைப் பார்த்துவிட்டால்  போதும். பரமானந்தம். சந்தோஷம். அன்பு  லலிதாம்பிகையின் ஒரு முக்கிய குணம் இல்லையா. 

*864* கனது கனக தாடங்கா  कनत्-कनक-ताटङ्का   பளபளவென்று  ஒளி வீசும்  பொன்னிற தாடங்கங்களை 
அணிந்திருப்பவள் அம்பாள்.   சௌந்தர்ய லஹரி   28வது ஸ்லோகம்  ''அவள்  தாடங்க ஒளியால் தான் சிவன் அமரத்வம் கொண்டவன், ஆலகால விஷம் கூட  ஒன்றும் செய்ய முடியவில்லை,  சூரிய சந்திரர்கள் அவளது இரு காதிலுள்ள தாடங்கங்கள் . 

*865* லீலா  விக்ரஹ தாரிணி  लीला-विग्रह-धारिणी   குழந்தைகள் நிமிஷத்தில் அழும், அப்படியே சிரிக்கும். நம்மால் அது முடியாது.  அம்பாள் நினைத்த நேரத்தில் அடுத்தடுத்து வெவேறு  ரூபங்களை கொள்பவள். சமய சந்தர்ப் பத்துக்கேற்ப.
கிருஷ்ணனும் கீதையில் அதை தானே சொல்கிறார்.  நான் பிறப்பு இறப்பற்றவன் என்றாலும், எனது யோகமாயையினால் அவ்வப்போது வேறுவிதங்களாக தோன்றுபவன். ” (IV.6).


சக்தி பீடம்                               திருவானைக்கா 


 திருவானைக்காவல், திருவானைக்கோவில் என  எப்படி அழைத்தாலும் அந்த பழம் பெரும்  சிவாலயம்  திருச்சிக்கு அருகே உள்ளது.   எத்தனையோ பேர் நமக்கு முன்னே   இந்த  ஆலயத்துக்கு  விஜயம்  செயதிருந்தாலும்   நாம் நினைத்து பார்ப்பது சிவபக்தர்கள் அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர்  விஜயம் செயது தரிசனம் செய்தது பற்றி  தான்.  ஏன் என்றால் அவர்கள் தான் அருமையாக சிவனை, அம்பாளை, இந்த ஊரை பற்றி எல்லாம்  பாடி இருக்கிறார்கள். நம்மால் முடியுமா?


 இக்கோயில் பஞ்சபூத தலங்களில் ஒன்றான “நீருக்கு” உரியது. காவிரி நதியின்  வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது பாடல்பெற்ற  சிவ ஸ்தலம்.

இந்த  ஆலயத்தின்  நாலாவது   பிரஹார சுவர் கட்டும்போது  சிவபெருமானே ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு  விபூதியை கூலியாகக் கொடுத்ததாக ஸ்தல வரலாறு.   அந்தந்த  வேலைக்காரர்களின் உழைப்புக்கேற்ப  அவர்களுக்களித்த விபூதி பொற்காசுகளாக  மாறியதாக  அந்த ஸ்தல புராணம் சொல்கிறது. ஆகவே தான் அந்த  மதில் சுவற்றுக்கு  திரு நீற்றான் மதில் என்று  இன்னும் பெயர். 

மூலவர் பெயர்  ஜம்புகேசுவரர். லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே எப்போதும்  ஜலத்தில்  இருக்கிறது.  எந்த காலத்திலும் இந்த ஈரம் வற்றவே இல்லை. 

ஜம்புகேஸ்வரர் ஆலயம் பிரம்மாண்டமான ஒரு கோவில்.  சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பு. உயரமான கோயில் மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது. 

அம்பாள் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நாலாம்  பிரஹாரத்தில் உள்ளது. தனி சந்நிதி. கிழக்கு பார்த்து ஆளுயரம்  நிற்கிறாள்.  ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவாக ஜல லிங்கம். 

ஆதி காலத்தில் இங்கே  நிறைய  வெள்ளை  நாவல்  மரங்கள்  காடாக  இருந்தது. ஒரு வெண் நாவல் மரத்தடியில்  சிவலிங்கம் இருந்தது. கைலாயத்தில்  பரமேஸ்வரனுக்கு சேவை செய்த சிவகணங்களான புஷ்பதந்தன், மாலியவான் என்ற இருவரிடையே அதிகமாக சிவ சேவை புரிவது யார்  என்ற ஒரு போட்டி.  ஒருவரையொருவர் சபித்துக் கொண்டதால்,  புஷ்பவான் யானையாகவும்,  மாலியவான் சிலந்தியாகவும் திருவானைக்காவில் பிறந்து சிவனை வழிபட்டார்கள். 

 சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது.    சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் பாதுகாத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை   சிவனுக்கு அவமரியாதையாக கருதி  அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன.  அவற்றின்  தூய  பக்தியை மெச்சி சிவனருளால் யானை,   சிவகணங்களுக்கு தலைவனாகவும்  சிலந்தி கோச்செங்கட் சோழனாகவும் பிறந்தனர். 

 பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலை  மீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அக்கோயில்கள் யாவும் மாடக்கோயில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயில்.  திருவானைக்கா ஆலயம் செல்பவர்கள்  அங்கே கோச்செங்கட் சோழன் சந்நிதியை காணலாம்.  ஆலயம்  பெரிய  ஐந்து பிரஹாரங்கள் கொண்டது.  ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டம், நூறு கால் மண்டம், நவராத்திரி மண்டபம், சோமாஸ்கந்தர் மண்டபம் ஆகவே சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவை. 

திருவானைக்கா  சிவலிங்கம்  காவிரி  ஆற்று  மண்ணைப்  பிசைந்து அகிலாண்டேஸ்வரி படைத்தது. காவிரி ஜலம்  அதிகமாகி   நீர் லிங்கமாக மாறியது. . நீரால் செய்யப்பட்டதால் சிவலிங்கம் ஜம்புகேஸ்வரர் என  பெயர் பெற்றது.  அம்பாள் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாகத் தெரியும்படி உள்ளது. இந்தக் காதணிகளை தாடங்கங்கள் என்பார்கள். 

அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்ரமாக  கோபாக்னி யோடு  கொடூரமாக இருந்ததால்  பக்தர்கள் வழிபட  பயந்ததால்  அவள் கோபம் தணிய  இங்கு வந்த  ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்ரத்தைத் தணித்தார் என்று வரலாறு.  அம்பாள்  உக்ரம் தணிய  எதிரே விநாயகர், பின்னால்  முருகன். பிள்ளைப்பாசம் கோபத்தை மறைக்காதா?

தினமும்  விடிகாலையில்  கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண் டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். அம்பாள் சிவனை வழிபடுவதன் வெளிப்பாடு. அந்த நேரம் சென்று காத்திருந்து  நான் கண்டு களித்திருக்கிறேன்.  அம்பாள் சந்நிதியில் பாடி இருக்கிறேன்.    திருவானைக்கா  அப்பர்  சம்பந்தர், சுந்தரர்,  பாடல்களைப்  பெற்ற ஸ்தலம். 
சக்தி பீடங்களில் திருவானைக்கா  ஒன்று. 

ஜம்புகேஸ்வரர் மூலஸ்தானத்தில்  வாசல் கிடையாது. ஒன்பது துளைகளுடன் கூடிய கல் ஜன்னல் வழியாக  லிங்க தரிசனம்.  ஒன்பது துளைகள் மனித தேகத்தின் நவ துவாரத்தை குறிக்கும்.  காளமேகம் பற்றி எழுதும்போது   வரதன் என்கிற பெயரில் படிப்பறிவில்லாதவனாக இருந்த ஒருவன் ஒரு நாள்  இரவில் இந்த கோவிலில் படுத்துறங்கும்போது அம்பாள்  அதிர்ஷ்டவசமாக அம்பாளின் தாம்பூல பிரசாதத்தை தனது வாயில்  ஏற்றுக்கொண்டு  அவள் வரப்ரசாதத்தால்  வரதன் 
 பிரபலமான  காளமேகப் புலவர் ஆனான். வேறு ஒரு பக்தன்  ஸரஸ்வதி கடாக்ஷம் பெற  பல காலம் தவமிருந்து அவள் அன்றிரவு அவனுக்கு தனது  தாம்பூலத்தை தர வந்தபோது ''சேச்சே  எச்சில்.. வேண்டாம் '' என்று இழந்ததை   அங்கே படுத்திருந்த  எந்த முயற்சியும் செய்யாத  முட்டாள் வரதன் பெற்று கவி காளமேகமானான். இதல்லவோ  இருட்டு அதிர்ஷ்டம். குருட்டு அதிர்ஷ்டம் என்று சொல்லவேண்டாம். 

 திருச்சியில் உள்ள சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 6 கி.மீ., தூரத்தில் திருவானைக்காவல் உள்ளது. திருச்சி ரயில் நிலையத்திலிருந்தும் திருவானைக்கா ஆலயம்  செல்லலாம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...