Tuesday, March 3, 2020

THIRUK KOLUR PENPILLAI



திருக்கோளூர்  பெண் பிள்ளை வார்த்தைகள்  - J K SIVAN

 47. ''அக்கரைக்கே விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே?''

கங்கை ஒரு கடல் போன்ற நதி.  அதன் ஒரு கரையில் உள்ள சிறு ஊர்   ஸ்ருங்கி பேரம். அதற்கு தலைவன்  வேடுவ குலத்தை சேர்ந்த  குகன் என்பவன். கங்கையில் பிறந்தவன், வளர்ந்தவன் என்பதாலும், அந்த நதியை கடக்க  படகுகள் செலுத்துவதிலேயே  அவன் வாழ்வு  சிறக்கிறது செழிக்கிறது.  குகன் இயற்கையிலேயே நல்ல குணமுடையவன் . பிறர்க்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்பவன். 


ராம லக்ஷ்மணர்கள், சீதையோடு கங்கை நதிக் கரையில் மரவுரியோடு நிற்கும்போது குகன் அவர்களுக்கு கங்கையைக் கடந்து அக்கரை  செல்ல உதவுகிறான். ராமனிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவன்.  அயோத்தி யில் ஞாயமாக சேரவேண்டிய ராஜ்யத்தை அநியாயமாக தசரதன் எப்போதோ கொடுத்த  வரத்தை வைத்து அவனை வாட்டி, வதைத்து வேறு வழியில்லாமல் ராஜ்யத்தை   அவன் பரதன் ஆள   ஒப்புக்கொள்ள வைத்த தோடல் லாமல் ராமனை மரவுரி தரித்து காட்டுக்கு 14 வருஷங்கள் அனுப்பிய கைகேயி, அவள் மகன் பரதன் ஆகியோர் மேல் கடும் கோபம் கொண்டவன் குகன். 

குகனிடம் ஆயிரக்கணக்கான  நாவாய்கள், படகுகள்.  வீரர்கள் உண்டு.   ராமன் காட்டுக்குள்  வீரர்கள், மந்திரி பிரதானிகளோடு  நுழைந்தபோது அவனுடன் வந்த வர்கள் கங்கைக் கரையில்  இரவு  தங்க  உணவு    இட வசதிகள் செய்து தந்தவன்.

ராமனைக்  கண்டதும்  குகன்  ஓடிச்சென்று ராமன்  பாதங்களில் விழுந்து வணங்கினான். 
கண்களில் 
கண்ணீரோடு, 

''நீங்கள் தான் உங்கள்  நாடு  ராஜ்ஜியம்  எல்லாம் விட்டு விட்டு வந்துவிட்டீர்களே. இதுவே காட்டுப்பகுதி போல் தானே.  எதற்கு வேறு எங்கோ கானகம் செல்லவேண்டும். எங்களோடு தங்கி இந்த ஊரை ஆண்டு எங்களுக்கு ராஜாவாக  பரிபாலனம் பண்ணி எங்களை ரக்ஷியுங்களேன்'' என்று  வேண்டுகிறான்.   

''குகா, உன் அன்புக்கு, பாசத்துக்கு,  நான் என்றும்  அடிமை. உனக்கு தெரியாதா ?  தந்தை சொல்  மிக்க மந்திரமில்லை.   நான் 14 வருஷம் கானகத்தில் தான் வசிக்க வேண்டும். எவர் இல்லத்திலோ  பாதுகாப்பிலோ  வசதியோடு  வசிப்பது தந்தையின் வாக்கை மீறுவதாகும் , என் பெற்றோர் வாக்கை அவமதிப்பதாகும் '' என குகனின் கோரிக்கையை  மறுக்கிறார் ராமன். 

''இன்றிரவு இங்கே  கங்கைக்கரையில் தங்குவோம். நாளை கங்கையைக்  கடப்போம்'. கானகத்தில்  நுழைவோம்.'' 

ராமர் சொல் மீறாது அரைமனதோடு குகன் ஒப்புக் கொள்கிறான்.   தேனும், மீனும்,  காயும் கனியும் தந்து குகன் அனைவரையும்  உபசரிக்கிறான் என்கிறது ராமாயணம்''

இரவு கழிந்தது. பகலவன் கிழக்கே உதயமானான்.  குகன் படகை தயார் செய்து தானே  ராம லக்ஷ்மணர்களை மறுநாள் காலையில் கங்கை ஆற்றை கடக்க, குகன் தனது படகில் மூவரையும் அமர்த்தி   கங்கை ஆற்றின் மறு கரையை அவர்கள்  அடைகிறார்கள்.  அவர்களுக்கு சித்ரகூடம் செல்லும் வழியும் காட்டுகிறான் குகன். 

வனவாசம் சென்றார்  ராமர் என்று அறிந்து துடித்து,   ராமரைக்  காண்பதற்கு கங்கை ஆற்றின் கரைக்கு வந்த பரதன் சேனையோடு வருகிறான்.  ராம லக்ஷ்மணர்களை சீதையோடு தக்க  ராஜ மரியாதையோடு திரும்பி அயோத்தி வந்து ராஜ்யம் ஆள  கூட்டிச் செல்வதற்குத் தான் ஸேனையோடு வருகிறான். 

முதலில் பரதன் தீய எண்ணத்தோடு நாட்டை பறித்ததோடல்லாமல், காட்டிலும் பெரும் படையோடு வந்து ராம லக்ஷ்மணர்கள் சீதையை கொல்ல வந்திருக்கிறான் பரதன் என்று குகன் தவறாக நினைத்து கோபம் கொள்கிறான். பிறகு பரதனை கண்டு, அவன் நற்குணத்தை அறிந்து மகிழ்ந்து  ''பரதா,   ஆயிரம் ராமர்களை  ஒன்று சேர்த்தாலும் உன் ஒருவனுக்கு இணையாக மாட்டார்கள்''  என்று புகழ்கிறான்.''   (அந்த அற்புதமான  இனிய தமிழ் கொண்ட  கம்ப ராமாயண  செய்யுள்களுக்குள்  நுழைந்து விட்டால்  நான் திசை மாறி போய்விடுவேன் என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.) 

நம்மை விட  பல நூற்றாண்டுகளுக்கு முன்  வாழ்ந்த திருக்கோளூர்  பெண் பிள்ளை மிக ஞானம் கொண்டவள். அவளுக்கு தெரியாததே இல்லை. 

 ''ராமானுஜரே , நான் என்ன குகனா? அவனைப்போல  ராமன் முதலானோர்  கங்கை ஆற்றைக் கடக்க,  காத்து நிற்க, அடியார்களுக்கு செய்யும் சேவையாய் கருதி, அவர்கள் ஆற்றை கடக்க உதவி புரிந்தவளா ? அல்லது அது போன்ற வேறு ஏதாவது சேவை பரமாத்மாவுக்கு செய்தவளா? "' எந்த தகுதியில் இந்த புண்ய பூமி திருக்கோளூரில் வசிக்க உரிமை பெற்றவள் சொல்லுங்கள்?'என்று கேட்கிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...