Thursday, March 26, 2020

THIRUKOLOOR PEN PILLAI



  திருக்கோளூர் பெண் பிள்ளை  வார்த்தைகள் 
                                   J K  SIVAN


    50  இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே -

''ஒ, ராமன் என்பது நீ தானா. உன்னைப்பற்றி நன்றாக அறிவேன். நான் உன் வரவுக்காகவே உயிர் வாழ்கிறேன். நான் ஒரு கந்தர்வன். அழகில் கர்வம் கொண்டு ஒரு முறை அஷ்டாவக்கிர முனிவரை இகழ்ந்ததால் அவரால் சபிக்கப்பட்டு கோரமான கபந்தன் எனும்  ராக்ஷசனானேன். மன்னிப்பு கேட்டு  அவரிடம்  சாப விமோசனம் கெஞ்சியபோது திரேதாயுகத்தில் நாராயணன் ஸ்ரீ ராமனாக வந்து உன் கரங்களைத் துண்டித்து உனக்கு சாபம் நீங்கும்'' என்றார்

'' ராமா, உன் திருக்கரங்களால் எனக்கு எரியூட்டி உதவி என்னை தேவலோகத்துக்கு விடை பெற்றுச் செல்ல அருள்வாய்''.

 தீயில் கபந்தன் உடல் மறைய அதிலிருந்து சர்வ லக்ஷணத்துடன் ஒரு கந்தர்வன் தோன்றி நெஞ்சில் நன்றி தழுதழுக்க கண்களில் நீரோடு ராமனை வலம் வந்து வணங்கினான். ராமனது ஸ்தூல சரீரம், விராட் ஸ்வரூபம், சூக்ஷ்ம சரீரம் ,ஹிரண்ய கர்ப்பன், அண்ட பகிரண்டம் தன்னிலே கொண்ட ராமனின் விஸ்வ ரூபம், ஜடாமுடி, மரவுரி, கையில் வில் முகத்தில் சோகம் கொண்ட மனிஷ அவதாரம் எல்லாவற்றையும் விவரித்துப் போற்றினான் .

''ராமா, பரமாத்மா. பிரமனும், பரமேஸ்வரனும் உன்னை பூஜிக்கிறார்கள்.    மகாதேவன் காசியில் மரண மடைந்தவர்களுக்கு தாரக மந்த்ரமான ''ரா மா'' என்ற உன் திருநாமத்தை உபதேசித்துக் கொண்டு உன் இந்த மனித அவதார தோற்றத்தையே புகழ்ந்து போற்றி தியானிக்கிறார்.   நீ உண்டாக்கும் மாயையினால் மயங்கிய ஜனங்கள் உன் உண்மை ஸ்வரூபம் குணம் எல்லாம் அறிய மாட்டார்கள். அம்மாயை இருளிலிருந்து விடுபெற உன்னையே வணங்கும் பக்தர்களுக்கு உடனே அருளும் ராமா உன்னை வணங்குகிறேன். ராமா, 


உனக்கு  ஒரு விஷயம் சொல்கிறேன். வெகுகாலம் ராக்ஷசனாக  இங்கே இருந்ததால் தெரியும்.  சற்று தொலைவில் ஒரு சிறிய ஆஸ்ரமத்தில்  ஒரு கிழவி,  சபரி என்று பெயர் வசிக்கிறாள்.  உன் மீது  அளவுகடந்த பக்தியும்  பாசமும் கொண்டவள்.  அவளுக்கு தரிசனம் தாருங்கள்.  நீங்கள் தேடும்  சீதையைப் பற்றி அவள் முக்யமான சில தகவல்களைத் தரலாம்.

ராமன் கந்தர்வனை அணைத்து ஆசி கூறி அவனை வைகுண்டம் அனுப்பி விட்டு லக்ஷ்மணனோடு சபரி ஆஸ்ரமம் நோக்கி நடந்தான்.

சபரி வேடர்கள் குலத்தைச் சேர்ந்தவள்.  மதங்க ரிஷியின்  சிஷ்யை.  
''குருநாதா  நீங்கள் மோக்ஷ  சித்தி அடையும்போது எனக்கும்  முக்தி நிலை அடைய வரம் தரவேண்டும்'' .
''இல்லை அம்மா  சபரி,  உனக்கு ஒரு முக்கியமான  காரியம் இருக்கிறது. கேள்  சொல்கிறேன்.
"இந்தக் காட்டின் வழியே ஸ்ரீராமன் வருவார்.அவருக்குக் கைங்கர்யம் செய்துவிட்டு, நீ மோட்சம் அடைவாயாக" என்றார்  மதங்க ரிஷி.
எத்தனையோ வருஷங்களாக ராமன் வரவுக்கு காத்திருக்கிறாள் சபரி. ராமன் வந்தான்..
சபரி ராம லக்ஷ்மணர்களின் வரவில் பெரு மகிழ்ச்சி கொண்டாள்.  வெளியே  ஓடிவந்து வரவேற்று உபசரித்தாள் . அவர்களை ஆசனத்தில் அமரச்செய்து ராமலக்ஷ்மணர்களின் திருவடிகளை அபிஷேகித்து பூஜை செய்து அந்த தீர்த்தத்தை தனது சிரசில் ப்ரோக்ஷணம் செய்து கொண்டாள். ராமன் வருவான் என்ற அசாத்திய நம்பிக்கையில் அன்றாடம் அவனுக்கென்று நல்ல பழங்களை சேகரித்து வைக்கும் பழக்கம் சபரிக்கு.  (கடித்துக் கொடுத்தாள்  என்று ராமாயணத்தில் கண்ணில்  பட
வில்லை) . அன்றும் அதுபோல் சேகரித்து வைத்த கனி வர்க்கங்களை ராமன்முன் வைத்தாள்.
''ராமா, எனக்கு சாயுஜ்ய பதவி தருவாய் என்ற நம்பிக்கையில் உனக்காக தவம் கிடக்கிறேன். இந்த ஆஸ்ரமத்தில் என் குருமார்கள் இருந்தனர். அவர்கள் எல்லோரும் பிரம்மலோகம் போகுமுன், சபரி, நீ தவம் செய்துகொண்டு இங்கேயே இரு. தசரத மைந்தனாக ஸ்ரீ ராமனாக, நாராயணனே வந்து உனக்கு மோக்ஷம் தருவார் என்று ஆசிர்வதித்து சென்றார்கள்.

'ராமா, என் குரு, ஆசார்யர்களுக்குக் கூட கிடைக்காத உன் தரிசன பாக்கியம் எனக்கு கிடைத்ததே. உன்னை எப்படித் துதிப்பது என்றுகூட நான் அறியாதவள். என் மீது கருணை கூர்வாய். மனம் வாக்குக்கு அப்பாற்பட்ட நீ எப்படி என் கண்முன் தோன்றினாய்?. என்ன புண்யம் செய்தேனோ நான்!. ~என்றாள்

'' அம்மா, சபரி, என்னை வணங்க, ஆண் , பெண், குலம் , கோத்ரம் எதுவுமே தேவையில்லை. மனதில் உண்மையான பக்தி போதும்.பக்தியற்ற தானம்,தருமம், யாகம்,மந்த்ரம் வேதம் ஓதல் என்னை அணுகாது. பக்தி சாதனத்துக்கு தேவையானது.

1. சத்சங்கம். ( சான்றோர் நட்பு)
2. பகவான் பெருமை விளக்கி சொல்லுதல், கேட்டல்,
3. பகவானின் கல்யாண குண ப்ரபாவங்க்ளைகூறி மகிழ்வது.
4. பகவானின் அமுத மொழிகளை, வேதம் போன்றவை, விளக்கி சொல்லி, கேட்டுப்புரிந்து கொள்வது.
5. நெஞ்சில் வஞ்சனை இன்றி பகவானுக்கு சேவை செய்வது.
6. நன்னடத்தை, நேம நியமங்களை அனுஷ்டித்தல்,
7. என்னுடைய மூல மந்திரத்தை அதன் அங்கமான மந்திரங்களோடு உபாசிப்பது.
8. எவ்வுயிரிலும் என்னையே காண்பது.
9. என்னைவிட என் பக்தர்களிடம் மதிப்பு கௌரவம்.
10. போக, இந்திரிய புலன் வசம் அடிமையாகமால் இருத்தல்.
11..என்னைப் பற்றிய தத்வ விசாரம்.
இதில் ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டாலும் பிரேமையை அடிப்படையாக கொண்ட என் பக்தனாக அவனை ஏற்பேன். அவனுக்கு இப்பிறவியிலேயே மோக்ஷம் உறுதி.
சபரி பக்தி மேலிட்டு இரு கரம் கூப்பி தலை வணங்கி பதில் சொன்னாள் :

'' ஸ்ரீ ராமா, நான் காத்திருப்பதே உன்னிடம் ஒரு முக்ய செய்தியை தெரிவிக்கத்தான்.    நீ பரமாத்மா. சகலமும் அறிந்தவன் என்றாலும், மனிதனாக உருவெடுத்ததால், அதற்குண்டான லோகாயத நியதிப்படி, உனக்கு நான் தெரிவிப்பது அவசிய மாகிறது. ராவணன் சீதையைக் கவர்ந்து சென்று இப்போது இலங்கையில் இருக்கிறான். இங்கிருந்து சென்றால் பம்பா என்ற ஒரு நதியோ ஏரியோ வரும். அதன் அருகில் ரிசியமுகம் என்ற ஒரு பெரிய மலை உண்டு. மிக பலம் வாய்ந்த ஒரு வானர வீரன் அதன உச்சியில் வசிக்கிறான். அவன் பெயர் சுக்ரீவன். எதோ ஒரு நிர்பந்தத்தால் நான்கு அமைச்சர்களோடு அங்கே வாழ்ந்து வருகிறான். அவனது சகோதரன் வாலியுடன் பிணக்கு ஏற்பட்டு தனித்து வாழ்கிறான். வாலியால் ஒரு ரிஷியின் சாப நிமித்தமாக ரிசியமுகம்   மலைக்கு அருகே கூட செல்லமுடியாது என்பதால் சுக்ரீவன் அங்கே நிம்மதியோடு உயிர் பயமின்றி தங்கியுள்ளான். நீ உடனே சென்று சுக்ரீவனிடம் நட்பு கொண்டு சீதையை மீட்பாயாக. என் கடமை முடிந்துவிட்டது. உன் முன்னே நான் அக்னியில் பிரவேசித்து என் பூலோக வாழ்வை முடித்துகொள்கிறேன். ஸ்ரீ ராமா, என்னை கரை சேர்ப்பாயாக.''
சபரி அக்னி பிரவேசம் செய்து ராமன் ஆசியுடன் மோக்ஷபதவி அடைந்தாள்.

ஐம்பதாவது உதாரணமாக   திருக்கோளூர் பெண்பிள்ளை  சபரியை நினைவு கூர்ந்து  ராமானுஜருக்கு பதில் அளிக்கிறாள்:

''சுவாமி, நான் என்ன சபரி போன்றவளா?  அவள்  நல்ல இனிய பழங்களாக தேடி சேகரித்து ராமன் வருவான், அவனுக்கு தரவேண்டும் என்று தான் சாப்பிடாமல் எடுத்து வைத்தாளே , நான் என்று என்ன எவருக்கு  உதவி இருக்கிறேன்? எப்படி இந்த புண்ய க்ஷேத்ரம் திருக்கோளூரில் வாழும்  புகழ்பெற  அருகதை உடையவள்? 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...