Friday, March 13, 2020

SRR



                        நண்பனின் நற்பணி .  J K  SIVAN

இப்போது இருப்பவர்களில்,  ---   80 வருஷங்கள் ஆனபிறகு  இப்படித்தான் சொல்ல முடிகிறது ---  என்னுடைய ஒரு பழைய நண்பன்   SRR .  சருக்கை   ராமஸ்வாமி ராஜகோபாலன். 57 வருஷங்களுக்கு முன்பு எனக்கு அடுத்த  நாற்காலியில்  ஹாலிவூட் ஆக்டர்  ஸ்டுவர்ட் க்ரேஞ்சர்  வெயிலில் வாடி கொஞ்சம் கருத்துப்போனமாதிரி உட்கார்ந்திருக்கிறானே  என்று அதிசயித்தேன். அவனது ரசிகன் நான். ஒன்றிரண்டு படங்கள் தான் பார்த்தாலும் என் மனதை கவர்ந்த நடிகன்.  அவன் எப்படி இந்தியா சிமெண்ட்ஸ் கம்பனியில் எனக்கு அடுத்த நாற்காலியில் எதிரே  தட்டச்சு இயந்திரத்துடன்.  நாங்கள் இருவரும் ஸ்டெனோகிராபர்கள். வேகமாக சொல்வதை எழுதி அதை தப்பில்லாமல் டைப் பண்ணிக்கொடுப்பவர்கள் என்று பெயர் வாங்கியவர்கள். 



திருவல்லிக்கேணியில்  ஆபிஸ் வெங்கடாச்சலமுதலி தெருவில் ஒரு  வாடகை வீட்டில் குடியிருந்தான். அவன் அம்மா என்னையும் ஒரு பிள்ளையாக பாவித்து சாயங்காலம் என் சைக்கிள் வாசலில் வந்து இறங்கியதும் சூடாக ஏதாவது சாப்பிட கொடுப்பாள். நான் இருந்தது கோடம்பாக்கத்தில்.   அவள் ஏதாவது  கொடுப்பாள், அதை விரும்பி சாப்பிடத்தான் நான் அங்கே வருகிறேன் என்று எனக்கு  மட்டுமல்ல அவளுக்கும்  யாரும் சொல்லாமலேயே தெரியும்.  

ஒன்றரை வருஷம் தான் பழகினோம். அப்புறம் நான் கப்பல் கம்பெனியில் சேர்ந்துவிட்டேன். அவனை அடிக்கடி சந்திக்கும்  வாய்ப்பு குறைந்தது.  பிறகு வெளிநாடு சென்றேன். பல நாடுகள் சென்றேன். 75வயதில் ஆன்மீக உலகில் காலடி பதித்தேன். திடீரென்று ஒரு நாள்  டெலிபோனில் 

''நீங்கள் ஜே கே  சிவனா....''
''ஆமாம் ''  நீங்கள்  யார்  பேசுவது?''
''நான்  ராஜகோபாலன்''
''ஓ  .... எனக்கு எந்த ராஜகோபாலன் என்று யோசிக்க சில நிமிஷங்கள் பிடித்தது.... எனக்கு எண்ணற்ற ராஜகோபாலன்களை தெரியும்.. '' எப்படி கேட்பது நீங்கள் யார் என்று ?''
''நீங்கள்  இந்தியா ஸ்மென்ட்ஸ்ல் 1963ல்  வேலை பார்த்தீர்களா?
''ஆமாம்.  நீங்கள் ....?
''ஸ்டெனோகிராபராக இருந்தீர்களா...?''
ஆமாம்''  நீங்கள் ?
''டேய் . உனக்கு அடுத்த சீட்  SRR   மறந்துவிட்டாயா?'' 
''அட  ராஜூவா?  எவ்வளவு யுகம் ஆகிவிட்டது உன் குரலைக் கேட்டு ?  எங்கிருந்து பேசுகிறாய்?
'' உன் குரலும் மாறவில்லை. அதே துடிப்பு. வேகம்  உன் பேச்சில்.. உன் படங்கள் பார்த்தேன்.  FACEBOOK  உன்னைப்பற்றி நிறைய  விஷயம்  வந்தது. என் மருமகள் சில போட்டோக்களை காண்பித்தாள்.  நீ அதிகம் மாறவே இல்லை. எப்படியோ உன் டெலிபோன் எண்  கண்டுபிடித்து  உன்னோடு பேசிவிட்டதில் பரம திருப்தி..''
ராஜகோபாலன் என்னைவிட  மூன்று நான்கு வயது பெரியவன்... இப்போது  85-86.  இளம் வயது ஞாபகங்கள் வந்து பழைய விஷயங்கள் தினமும் பேசினோம். 55 வருஷ இடைவெளி குறைந்து காணாமல் போய்விட்டது.

ராஜகோபாலன் அற்புதமாக எழுதுகிறான்.  எங்கிருந்தோ தேனீ போல நல்ல விஷயங்கள் தொகுத்து ஒரு  நான்கு ஐந்து புத்தகங்கள்  போடும் அளவுக்கு விஷயம் சேகரித்திருக்கிறான். முதல் புத்தகம்  அச்சாகி  சூடாக ஒரு நகல் எனக்கு நேற்று அனுப்பினான்.  ''ஆன்மீக விருந்து '' பாகம் 1 ''   இது ஒரு நன்னாளில் வெளியிடப்படும். அதில் ஒரு விஷயம்  சொல்லி நிறுத்துகிறேன்.  புத்தகத்தை பிரித்தேன். 100ம் பக்கம் .....அட எனக்கு  பிடித்த  கிருஷ்ணன் சமாச்சாரம் அல்லவோ எழுதி இருக்கிறான். அதை  அப்படியே இங்கே  அளிக்கிறேன்.

''காத்திடுவான் கமலக்கண்ணன்''  

மஹாபாரத யுத்த பூமியில்.  சூர்யாஸ்தமனத்தில்  போர் நின்று  பீஷ்மர்  களைத்து தனது கூடாரத்தில் ஓய்வெடுக்கிறார்.  எதிரே துரியோதனன் கடுஞ்சொல்லால் அவரை துளைக்கிறான்: 

''நீர் என் பக்கம் இருந்தாலும் பாண்டவர்பால் உமக்கு வாஞ்சை அதிகம். அவர்களைக் கொல்ல  மனமில்லை. எனக்கு  வெற்றிப்பரிசு  அளிக்க மனமில்லை...

''துரியோதனா  அப்படியெல்லாம் இல்லை அப்பா.  நாளைப்போரில் நிச்சயம் அர்ஜுனனைக் கொல்கிறேன் ''
பீஷ்மர் உறுதி மொழி கொடுத்தால் முடிந்த மாதிரி தான். துரியோதனன் மகிழ்ச்சியோடு திரும்பினான்.

விஷயம் பாண்டவர் கூடாரத்துக்கு எட்டியது. எல்லோரும் திகைத்தனர். திரௌபதி இப்போதே  துயரத்தில் அழுதாள்.  கண்ணன் கூடாரத்தில் நுழைந்தான். அவனுக்கு எங்கே எப்போது இருக்கவேண்டும் என்று தெரியுமே.  திரௌபதி கண்ணன் பதத்தில் விழுந்து அவள் கவலையை விளக்கினாள். ''கிருஷ்ணா, என் மாங்கல்யத்தை காக்கவேண்டும்''.

இருட்டு. நடுஇசி. பீஷ்மர் கூடாரத்தில் தீபம் சுடர் விடுகிறது.  கிருஷ்ணன் திரௌபதியை மட்டும் அழைத்துக் கொண்டு பீஷ்மர் கூடாரம் நோக்கி நடக்கிறார். சப்தம் போடக்கூடாது அவள் பாத கொலுசை கழட்டி வாங்கி தனது கையில் வைத்துக்கொண்டிருக்கிறார். 

கூடாரத்தில் நுழைந்த திரௌபதியை கண்டதும் ரௌத்ராகாரமாக கோபம். யார் இந்த பெண் என் கூடாரத்தில் இந்த நேரத்தில்... உடைவாள் மேல் கை சென்றது.

தடால் என்று அவர் பாதத்தில் விழுந்த திரௌபதியின் முகம் தெரிகிறது.. வழக்கமான முறைப்படி  காலடியில் விழுந்த பெண்ணை ''தீர்க்க சுமங்கலி பவ'' என்று ஆசீர்வதிக்கிறார்.  எழுந்து மறுமுறை  வாங்குகிறாள். பின்னால்  நிற்கும் புன்னகை மன்னன் கண்ணன் தெரிகிறான். பீஷ்மர் கணநேரத்தில் நடந்ததை புரிந்து கொள்கிறார். இது கண்ணன் லீலை.   பீஷ்மர் கொடுத்த ஆசிர்வாதத்தால்  மறுநாள் அர்ஜுனன் பிழைத்தான்.  
''  ஹரே  கிருஷ்ணா, அச்சுதா, ஹி க்ருபா நிதே, ஹரே, பாண்டவானாம் சகே  என்னை காப்பாற்று'' என்று  சபையில் துச்சாதனன் வஸ்திராபஹரணம் செய்தபோது காப்பாற்றிய கண்ணன் மாங்கல்யத்தை  காக்காமல் விடுவானா?''  - கண்ணனின் கமலபாதங்கள் பணிந்திடுவோம், எந்நாளும், எப்போதும்.''

SRR   இந்த முதல் பாகத்தில் 221ருசிகர தகவல்கள் சேகரித்து அளித்திருக்கிறார். வாங்கி படிப்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள்.  விலை ரூபாய்  210. ஒரு தகவலுக்கு ஒரு ரூபாய் கூட இல்லை போலிருக்கிறது?   அவரை அணுக :  9941911656
 ஈமெயில் srivatsa@gmail .com 

     

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...