Thursday, March 26, 2020

kaalabairavashtakam



கால பைரவாஷ்டகம்  6
ஆதி சங்கரர் 


          6.   மனமெனும் கோவிலில்  
மூர்த்தியே  வா 

ஆதி சங்கரர்  ஆதி  சங்கரர்  தான்.  யாரால்  அவர் போன்று   ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களை  அருவி போல்   பாட/ ஓட செய்ய முடியும்.   கால பைரவாஷ்டகம்  ஒரு  அற்புதமான  ஸ்லோகம்.  அதன்  சந்தங்கள்  செவிக்கினியவை.  அர்த்தங்களோ  அந்த  சிவனையே  நேரில்  கொண்டு  வந்து  நிறுத்துபவை.  சிவனைப் பார்க்காதவர்கள்  பார்க்க  ஒரு வசதி செய்து கொடுக்கிறார் ஆதி சங்கரர்:  காலில்   தங்க  செருப்பாம்.  அதில்  கண்ணைக் கவரும் ஒளி  வீசும்  மணிகள்.  காலே  அழகு.  அந்த  பாதம்   தூக்கிய  போதும்  மனம் கவர்வது.  நிறுத்திய போதும்  தனி அழகு கொண்டது. என்றும்  நிரந்தரமான  ரக்ஷை  அந்த  பாத ரக்ஷை.  பரிசுத்த   பரம சிவனே, காலனை காலால் உதைத்த  கால  சம்ஹார  மூர்த்தி.  உன்னை  திருக்கடையூரில்  கண்டு  வியக்காத  நேரமோ, பக்தர்களோ  கிடையாதே.   இடது பதம்  தூக்கி   ஆடும் நடராஜா,  உன்னடி  பணிகுவோம்  . நீ  வலது பதம் தூக்கி கால் மாறி  ஆடியது நிறைய பேருக்கு தெரியாது. மதுரையில் வெள்ளியம்பலத்தில் அற்புதமாக  ஆடுகிறாய்  பாண்டியன் வேண்டியபடி. .

சிவ  மானஸ  பூஜா  என்றால் என்ன தெரியுமா?   மனதால் சிவனை  வழிபடுவது.  அதாவது  கூடை  பூ,  சந்தனம், பழம்  இதெல்லாம்  ஒன்றுமே  வேண்டாம். மனசு  பூரா  சிவனை  நிரப்பிக்கொண்டு  அவனை நினைந்து  மனம் குளிர  மனதாலேயே  பூசிப்பது.   இதற்கு  சக்தி  அதிகம்   வெளியே  பண்ணுகிற   பூஜையை  விட.       மனது உறுதிப்படும்.  எண்ணம்   சிதறாது.   விழி  யொன்று நாட,  கை மணியொன்று அடிக்க,  வாய்  ''cell ''செல்லில் பேசிக்கொண்டிருக்க, ,  காது  கிச்சனில்  வரும்  சத்தத்தில்  இருக்க,  இது  என்ன  பூஜை?   எத்தனை  கூடை  பூ போட்டு  என்ன  பயன்?   

மரத்தடியில்  அமர்ந்து  கண்ணை மூடி,  நிறைய  ஏக்கர் ஏக்கராக  நிலம் வாங்கி  ரிஜிஸ்தர் பண்ணி,  கல் மண் எல்லாம்  வந்து இறக்கி,  ஆயிரம் ஆயிரம் கொத்தனார் சித்தாள்  வேலை செய்ய, இரவும் பகலும் வேலை  நடந்து,  சிறந்த  கற் சிற்பிகள்  விரதத்தோடு ஆகம  சாஸ்திரப்படி  சிவனையும்   அம்பாளையும் மற்ற  தெய்வங்களையும்  செதுக்க,  நல்ல  நாள்  பார்த்து,  வேத கோஷங்களோடு, யானை குதிரை பரிவாரங்களோடு,  ரிஷிகள், சிவ கணங்கள் வேதமோத, பிரதிஷ்டை பண்ணி, கும்பாபிஷேகம்  நடைபெறுகிற நேரம்,  ஆயிரமாயிரம்  பேருக்கு  அன்னதானம்.எல்லாம் நடந்து முடிந்து விட்டது.

அடேயப்பா,    யார்  இந்த  கோவில் கட்டியது?,  எங்கிருக்கிறது?   கட்டி முடிக்க எவ்வளவு  பணம்  ஆச்சு? --  இத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதில்:   ஒரு பைசா  செலவில்லை.  எல்லாம்  மனக் கோயில்.  பல்லவராஜா பிரம்மாண்டமாக  சிவாலயம் எழுப்பி அதே நாளில் அதே நேரத்த்தில் கும்பாபிஷேகம் நாள் குறித்த்திருந்தான்.  அவன் கனவில் பரமேஸ்வரன் தக்க நேரத்தில் வந்தார்:

''பல்லவா, உன் ஆலய கும்பாபிஷேகத்தை இன்னொரு நாள் வைத்துக்கொள்ளேன்''
''பரமேஸ்வரா, மிகச்சிறந்த சுப தினமாக, சுபயோக நேரத்தில் தான் சாஸ்திரங்கள் கற்றவர்கள் சொன்ன நேரத்தில் கும்பாபிஷேகம் வைத்திருக்கிறேன். ''
''இல்லை பல்லவா, ஒரே நேரத்தில் எப்படி நான் ரெண்டு இடத்திற்கு வரமுடியும். ஏற்கனவே ஒருவர் என்னை அவர் கட்டிய ஆலயத்துக்கு கூப்பிட்டு விட்டாரே. நான் அங்கே அல்லவா முதலில் போகவேண்டும்.''
''எங்கே பகவானே அந்த  புனிதமான சிவாலயம் இருக்கிறது. நான்  உன்னை தரிசிக்க  ஓடி வருகிறேனே''
''திரு நின்ற ஊரில்''
''ஹா '' என்று  படுக்கையை விட்டு எழுந்தான்  பல்லவன்.
பல்லவன் திகைத்தான். என் ராஜ்யத்தை சேர்ந்த ஊரில் எனக்கு தெரியாமல் யார் கட்டிய  சிவாலயம் அது. பகவானே அங்கே ப்ரத்யக்ஷமாக  செல்கிறார் என்றால் முதலில் நாம்  சகல மாலை மரியாதைகளுடன் அங்கே செல்லவேண்டும் என்று திருநின்றவூர் சென்றான். அன்று தான் கும்பாபிஷேகம், முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டது. எங்கே தேடியும் கோவில் தென்படவில்லை. யாருக்கும் அந்த கோவில் பற்றி, கும்பாபிஷேகம் பற்றி தெரியவில்லை.  மரத்தடியில்  கண்மூடி அமர்ந்திருக்கும் பூசலாரை காட்டுகிறார்கள். அவர் தான் அடிக்கடி தான் கோவில் காட்டுவதாக சொல்லிக்கொண்டே இருப்பார்... பாவம் சாது பைத்தியம்....என்று அவருக்கு பட்டம். 
பூசலாரை கண்டுபிடித்து மரத்தடி சென்ற ராஜா அவரை வணங்க அது  தான் குறிப்பிட்ட கும்பாபிஷேக நேரத்தில் ராஜ மரியாதைகள் சிவனுக்கு செய்யும் நேரம். மனத்தில் பூசலார் கட்டிய கோவில் பின்னர்  ராஜா கற்காளால் எழுப்பினான். திருநின்றவூர் செல்பவர்கள்  ''ஹ்ருதயாலீஸ்வரர்'' கோவில் சென்று தரிசனம் செய்யுங்கள். ஹ்ருதயத்தில் ஆலயம் கொண்ட ஈசன் என்று சிவனுக்கு பெயர்.  மனக்கோவில் சிவன்.  கற்பகிரஹம் கூரை  ஹ்ருதயம் வடிவில் இருக்கிறது.

சிவனை, காலபைரவராக  ஆதி சங்கரர் ஸ்தோத்தரிக்கும் 6வது ஸ்லோகம்.  

''रत्नपादुकाप्रभाभिरामपादयुग्मकं
नित्यमद्वितीयमिष्टदैवतं निरंजनम् ।
मृत्युदर्पनाशनं करालदंष्ट्रमोक्षणं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥६॥

ரத்ன பாதுகா பிரபாபி ராம  பாத யுக்மகம்
நித்யம்  அத்விதியம்  இஷ்ட தைவதம்  நிரஞ்சனம்
மிருத்யு தர்ப்ப நாசனம்  கராள   தம்ஷ்ட்ர மோக்ஷனம்
காசிகா புராதி நாத   கால பைரவம்  பஜே.
''காசி மாநகர்  சிறக்க அதிபதியாக  விளங்கும்  கால பைரவா   உனக்கு  நமஸ்காரங்கள். பொன்னாலான  பாதரக்ஷைகளில் மின்னும் நவரத்ன மணிகள் கண்ணை பறிக்கிறது. ஈடு இணையற்ற  காருண்ய வள்ளலே.  பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்கும் பெருமானே.  யாமிருக்க பயமேன் என்று  அஞ்சேல் என   ஆதரவளிக்கும் ஆதி தேவா.  பிறவா வரமளிக்கும் பெம்மானே.  காசிகாபுர  ஆதி நாதா   காலபைரவா , உனது திருவடிகளுக்கு  நமஸ்காரம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...