Sunday, October 14, 2018

YAMUNA

' யமுனா நீ  ரொம்ப பெரியவள்!''- 
                           
J.K. SIVAN 


''சார், சார்''
'' யாரு கோபு வாசலில் சத்தம் கேட்டு வெளிக்கதவை திறந்தான்.
கமலா டீச்சர் தனது கணவர் கங்காதரனுடன் நின்று கொண்டிருந்தாள் . தாத்தா இருக்காரா?
''ஒ ஏதோ படிச்சுண்டு இருக்கார்.
'' வரலாமா கேளேன்.'' கோபு விஷயம் சொன்னவுடன் அவர்களை வரச்சொன்னேன் .
''வாங்கோ கமலாம்மா, கங்காதரன் சார். இன்னிக்கு ஆபிஸ் லீவா?
''நமஸ்காரம் சிவன் சார். எனக்கு உங்க கிட்டே ஒரு சின்ன கதை கேட்க ஆசை. என் மனைவி உங்க கதையை ரொம்ப ஆர்வமா கேட்டு பள்ளிக்கூடத்திலும் பிள்ளைகளுக்கு சொல்வா, எனக்கும் சொல்வா. சரி நேராகவே உங்க கிட்ட கொஞ்சம் உட்காரலாமே என்று இருவரும் வந்தோம்.''

''நீங்க வரும்போது கம்ப்யூட்டர்லே என்னுடைய பழைய ஒரு குட்டி கதையை யாரோ தேடி கண்டுபிடிச்சு படிச்சு FACE BOOK லே போட்டிருந்ததை பார்த்தேன். கதை என்பதை விட மனதை தொடும் ஒரு சம்பாஷனை என்று சொல்லலாம் அதையே திரும்ப படிக்கிறேன் கேளுங்களேன்''   இதிலே என்ன வேடிக்கை என்றால் நான் எழுதிய கட்டுரைகள் சின்ன கதைகள்  எங்கெங்கோ யார் யாரிடமோ சென்று உலாவி  கடைசியில் என்னிடமே ஒருவர்  இந்த கதை நன்றாயிருக்கிறதே, நீங்கள் படித்திருக்கிறீர்களா ? என்று என்னிடமே  அனுப்புகிறார்கள். அதை படிக்கும்போது எனக்கு ஏதோ பூர்வ ஜென்ம வாசனை வருகிறது. என் எண்ணங்களின் பிரதிபலிப்பு போலிருக்கிறதே, எழுத்தும் என் சொற்களாக இருக்கிறதே என்று ஆச்சர்யப்படுவேன். ஏனென்றால்  என் கதை, கட்டுரைகள் பல இடங்கள் செல்லும்போது  ஏனோ தெரியவில்லை என் அடையாளத்தை இழந்து விடுகிறது.  ஏன் ? என் பெயர் தப்பா?  நான் எழுதியதாக அது இருக்க கூடாதா?  நான் தான் யாரிடமாவது யாரிடமிருந்தாவது காப்பி அடித்து எழுதியதா? இல்லையே?  க்ரிஷ்ணனுக்கே வெளிச்சம்.   ஒரு திருப்தி.  என் கதை, எழுத்து பிடித்ததால் தானே பல இடங்களுக்கு காலில்லாமலே, ரெக்கை இல்லாமலே என் எழுத்து பறக்கிறது.  கிருஷ்ணா  உனக்கு தேங்க்ஸ். ''  நேற்றுகூட  பிஸ்மில்லா கான் ஷெனாய் பற்றி  நான்  எழுதினது என் பெயரின்றி வாட்சாப்பில் எனக்கு யாரோ அனுப்பி இருந்தார்கள். ''


சரி கங்காதரன் ஒரு குட்டி கதை சொல்கிறேன் கேளுங்கள்

ஒரு எண்பது வயது கிழவி அவள். கோதாவரி. அவள் எப்போதும் தனியாகவே இருப்பவள். அவளுக்கு யாரும் இல்லை. மொட்டிலேயே கருகிய மலர். வாழ்க்கையின் பெரும்பகுதியை  ஒரு  தெலுங்கு நதிக்கரையிலேயே கழித்தவள். இரவோ பகலோ அவளுக்கு உற்ற சினேகிதி அந்த நதியே.

அந்த நதிக்கரையில்  வெகுகாலம் வாழ்ந்த அவள் மெதுவாக இப்போது யமுனைக்கு வந்து விட்டாள். எவ்வளவோ தூரம் நடந்தே பல நாட்களில் அடைந்துவிட்டாள் .  இரவு நெருங்கியது. மங்கிய ஒளி. ஓ வென்ற ப்ரவாஹ இரைச்சல். காற்றில் சில மரங்களின் இலை அசைவு.   எங்கோ சில நாய்கள் குறைத்துக் கொண்டிருந்தன. பலத்த சண்டை அவற்றுக்குள்.  என்ன கட்சி பூசலோ?  சற்று நேரத்துக்கு முன்பு தான் எங்கோ ஒரு கோவில் மணி டாண் டாண் என்று அடித்து  இரவு பூஜை முடிந்ததை அறிவித்தது. யாருமே இல்லை. தனியே அவள் மெதுவாக நடந்து   யாரும் இல்லாத யமுனை நதிக்கரை வந்து சேர்ந்தாள்.  கண்ணுக்கெட்டிய தூரம் இருட்டில் கருப்பாக  யமுனை  நதியைபர்த்து  ரசித்துக்கொண்டு அதோடு பேசினாள்.

''அடி என்னம்மா யமுனா, எவ்வளவு அழகாக இருக்கிறாய் நீ! . நுங்கும் நுரையும் மலர்களும் நறுமணமும் வீச ஒரு இளம் பெண்ணாகவே கங்கையை விட அழகானவளாகவே தான் எனக்கு காட்சியளிக்கிறாய் யமுனா.    எனக்கு எத்தனை நாளாக உன்னை சந்திக்க  மனதில் ஆசை தெரியுமா ?.இன்று தான் நிறைவேறியது .

பதிலாக ஒரு குரல் : “நீ பேசுவது சந்தோஷமாக இருக்கிறது. நீயும் ஒருகாலத்தில் இளம் பெண் தானே. என்னை விட அழகானவளாகவே இருந்திருப்பாய்'' என எனக்கு தோன்றுகிறது".

யார் பேசுகிறது . கிழவி அங்கும் இங்கும் பார்த்தாள்.

"கோதாவரி, நான் தான் பேசுகிறேன் உன் எதிரே இருக்கும் யமுனா".

"அட நீயா, யமுனா, என் பெயர் கூட தெரிந்திருக்கிறதே உனக்கு.    நான் சொல்கிறேன் கேள். இது தான் உண்மை. நான் எப்படி இருந்தேன் என்றே எனக்கு தெரியாது யமுனா. சிறுவயதிலேயே கல்யாணமாகி நான் வயதுக்கு வரும் முன்பே எனக்கு கணவனாக வாழ்க்கைப் பட்டவன்  கோதாவரியில்  மூழ்கி போனானே. அந்த செய்தி கூட இளம் பெண் எனக்கு ஒரு பேரிடியாக தெரியாத விளையாடும் 11 வயது எனக்கு.  அன்றிலிருந்து நான் அந்த நதிக் கரையிலேயே அவன் வருவானா என்று வெகு காலம் பார்த்து கொண்டே இருந்ததில் எனக்கு வயதானதை  அறியவில்லை.  அவன் முகம் கூட எனக்கு சரியாக தெரியாதே. பிறகு அவனை மறந்து,  என் கோதாவரி  அழகில் வாழ்ந்தவள்.  என் பெயரே கோதாவரி என்று மாற்றிக்கொண்டேன் . ஆமாம்... எத்தனையோ வருஷங்கள் ஓடி விட்டது. உன்னை பார்க்கவேண்டும் என்று தீராத ஆசை. நீ  கங்கையை விட உயர்ந்தவள் அல்லவா?''

"கோதாவரி, நீ சொல்வது வருத்தமாக இருக்கிறது.  கங்கை நதிகளிலேயே மிகப் பெரியவள். பெரிய இடத்தை சேர்ந்தவள். அவளுக்கு மதிப்பு அதிகம். எங்களுக் கெல்லாம் தலைவி. புண்ய நதி. அவளுக்கு நான் ஈடாக முடியுமா? நான் சாதாரணமானவள் தானே கோதாவரி".

"அம்மா , யமுனா நீ ரொம்ப அடக்கமானவள் எப்போதுமே என்று எனக்கு தெரியும். கங்கைக்கு தான் சிவன் தலையில் இருக்கிறோம் என்ற பெருமை, கர்வம் எல்லாம் நிறைய உண்டு.  என் மாய கிருஷ்ணன் கெட்டிக்காரனாயிற்றே. அவனுக்கு இது தெரியாதா? அதனால் தான் அவன் உன்னை வெகுவாக விரும்பி உன்னில் எவ்வளவு காலம் சிறுவயதில் விளையாடியிருக்கிறான். அவனையும் உன்னையும் பிரித்தே நினைக்க முடியாதபடி உனக்கு பெருமை தந்தானே  யமுனா ''.

கங்கைக்கு கோபமும் சீற்றமும் அடிக்கடி வரும். நீ அப்படி அல்ல. உன் பெருமையை நான் அறிவேன். என் வாழ்வு முடியும் முன்பு உன்னை ஒருநாள் கட்டாயம் அடையவேண்டும் உன்னோடு இருக்கவேண்டும் என்ற ஆசை, பேராசையாக வளர்ந்து. அது தான் என் கடைசி ஆசை. இதோ மெதுவாக நடந்தே வந்து விட்டேன்.

"கோதாவரி, நீ எனக்கு மகிழ்ச்சியூட்ட இப்படியெல்லாம் சொல்கிறாய். நான் கங்கையின் முன்பு ஒரு சிறு ஓடை. அவ்வளவே."

"யமுனாதேவி, நீயும் கங்கையும் ஒன்றே தான் அம்மா . உன் பெருமை நான் உணர்ந்தவரை சொல்கிறேன் கேள்.

''கங்கையை நூறு மடங்கு புனிதப்படுத்தினால் கிடைப்பவள் நீ. விஷ்ணு என்கிற நாராயணனின் ஆயிரம் நாமத்தை விட ராமா என்கிற பெயர் உசத்தி. அப்படிப்பட்ட ராமனின் மூன்று நாமங்களுக்கு ஈடு கிருஷ்ணன் என்கிற ஒரு நாமம். இது பாகவதத்தில் இருக்குடி யமுனா , நான் படித்திருக்கிறேன்.

''யமுனையில் நீராடினால் ஒருவன் செய்த பாபத்தின் விளைவுகள் அவனை விட்டு விலகும். அம்மா யமுனா, நீ ரொம்ப புண்யம் செய்தவள். புண்யம் தருபவள். உன்னில் ஒருமுறை ஸ்நானம் செய்தவன் குளித்து எழும்போது மனம் பூரா கிருஷ்ணனின் நினைவுகளோடு தான் கரையேறுகிறான். நான் இதை சொல்கிறேன் என்று நினைக்காதே. சைதன்யர் சொன்னதம்மா இது. ''

''உனக்கு தெரியுமா? பிருந்தாவனத்தில் வசித்து அன்றாடம் உன்னிடம் ஸ்நானத்துக்கு வருபவர்களால் இந்த உலகமே சுத்தமாகிறது. நீ மறந்துவிட்டாயா? எத்தனை ஆயிரம் முறை உன்னில் மூழ்கி விளையாடி யிருக்கிறான் அந்த பயல் கிருஷ்ணன் நண்பர்களுடனும் கோபியர்களுடனும்!! அவன் பாதத்தை எவ்வளவு ஆயிரம் தடவை நீ தொட்டு புனித மடைந்தவள். யாருக்குடி கிடைக்கும் இந்த பாக்கியம்??? உணர்ச்சி வசப்பட்டு உரக்க பேசினாள் கோதாவரி.

''கோதாவரி, உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கிறது. நீ என்னோடு இருந்துவிடு ''

''யமுனா, நீ என் மனதை கொள்ளை கொண்டுவிட்டாய். இனி என்னையும் உன்னையும் பிரிக்க முடியாது. நான் இனி இல்லை. உன்னிலே கலந்து விட்டேனே'' '

தள்ளாத வயது கிழவி கோதாவரி சந்தோஷமாக இறங்கி யமுனையில் கலந்து கிருஷ்ணனில் கரைந்தாள்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...