Wednesday, October 31, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்  J.K. SIVAN 
மகா பாரதம் 

               விந்திய மலை காத்திருக்கிறது.
                                               
எங்கேயாவது நீண்ட பயணம் நடந்து செல்லும்போது உம்மணாமூஞ்சியுடன் போனால் கால்வலியோடு தலைவலியும் உடல் வலியும் சேர்ந்து விடும். சுகமாக பேசிக்கொண்டே செல்லும்போது நேரமும், தூரமும் தெரியாது. யுதிஷ்டிரனுக்கு லோமசர் கிடைத்தது அவன் செய்த பாக்யம். வழியெல்லாம் தீர்த்த யாத்திரை நடந்து சென்றபோது நேரமோ காலமோ தெரியவில்லை. புதிது புதிதாக இடங்களை மட்டுமா  பார்த்தான். நிறைய இதுவரை அறியாத விஷயங்களும் அல்லவா லோமசர் அவிழ்த்து விட்டார். லோமசரிடம்  நிறைய  விஷயங்கள்  கை வசம் இருந்ததால்  யுதிஷ்டிரன்  அவரைத் துளைத்து எடுத்து  விட்டான் .

(அவர் சொன்ன  சில விஷயங்களை நாமும் கேட்போம்.  நன்றியப்பா,  யுதிஷ்டிரா உனக்கு.  உன்னால் தான்  இவற்றை யெல்லாம் நாங்களும் அறிய முடிகிறது)


'' மகரிஷி,  நீங்கள் சொன்னீர்களே  விந்தியமலை அரசன் தான் உயர்ந்தவன் என்ற கர்வம் கொண்டவன் என்று. அப்புறம் அவன் என்ன செய்தான்?  எதற்காக  விந்திய மலைஅரசன்,  தான்  அதிகமாக உயர்ந்து  பூமியின்  நிலையை குலைய செய்தான்.  என்ன கோபம் அவனுக்கு? 'என்று கேட்டான் யுதிஷ்டிரன்.

''சொல்கிறேன் கேள்,   யுதிஷ்டிரா.  சூரியன்  நித்யம் மேரு, மற்றும் ஹிமகிரி, கைலாசம்  எல்லாவற்றுக்கும்  மேலே  உலகை சுற்றி  வருகிறான். இதை கவனித்த  விந்திய பர்வதன்    ''சூர்யா,  நீ  என்ன எப்போதும்  மேரு, ஹிமவான்  ஆகியோரை மட்டும் பிரதட்சிணம்  வந்து கொண்டிருக்கிறாய். நான் இருப்பது உனக்கு  தெரியவில்லையா. . இனி என்னையும் சுற்றி வா'' என்றான்.

''விந்தியா,   என்ன பேசுகிறாய் நீ?  நானாக  எந்த  பர்வதத்தையும்  சுற்றி வரவில்லை.  என்னையும் உன்னையும் படைத்தவன்  எனது நித்ய  பிரதட்சிணத்திற்கு எந்த  வழி அமைத்திருக்கிறானோ அந்த வழியில் தான்   நான்  பிரயாணம்  செய்தாக வேண்டும். இதில் எனது விருப்பம் எதுவுமில்லை . புரிந்துகொள்.'' என்றான் சூரியன்.

''அப்படியா, இப்போது என்ன செய்கிறேன்  பார்''  என்று  விந்திய பர்வதம்  தனது உயரத்தை  அதிகப்படுத்திக்கொண்டது.  சூரியனும் சந்திரனும்  அதைக் கடந்து மேற்கொண்டு நகரமுடியாதபடி வழியை மறைத்து அடைத்தது. தேவர்கள்  திகைத்தார்கள்.  யோசித்தார்கள்.  சூரியனின் போக்கை  தடை செயகிறானே விந்திய பர்வதன்.  எப்படி  இதை நிவர்த்தி செய்வது?  அகஸ்தியர் நினைவுக்கு வந்தார்.   அவரது தவ வலிமை தான் எல்லோருக்குமே தெரியுமே.  அவரிடம் சென்று  விந்தியனின்  கோபச் செயலைக்  கூறி  சூரிய சந்திரர்களின் அன்றாட பிரயாணம்  தங்கு  தடை இன்றி நடக்க  வேண்டினார்கள். அகஸ்தியர்  விந்தியனிடம் சென்றார். அவரை வணங்கி  விந்தியன் உபச்சாரம் செய்தான்.

''விந்திய பர்வத ராஜனே,  எனக்கு  தெற்கே  போக வழி விடுகிறாயா. நான்  திரும்பி வரும் வரை நீ  அப்படியே உயரம் குறைந்தே   இரு.  உயர வேண்டாம்.  நான் வந்த பிறகு,   நீ  மீண்டும்  உயர்ந்து கொள். செய்வாயா'?  என்று அகஸ்தியர் கேட்க  விந்திய பர்வதம்  'சரி'  என்று தலையாட்டிவிட்டு  பாவம்  இன்று காலை  நான் இதை எழுதும் வரை அகஸ்தியர் திரும்பி வரவில்லை. விந்தியபர்வதமும்  காத்துக்கொண்டிருக்கிறது. 

 சூரியனும்  சந்திரனும்  வழக்கம்போல்   தங்கள் பாதையில் நித்ய  பிரயாணம் செய்கிறார்கள்.  தமிழில்  ஒரு பாட்டு  கேட்டிருக்கிறேன்.'' வடகோடு உயர்ந்தென்ன  தென்கோடு சாய்ந்தென்ன'' என்று  அது இதைத்  தான் குறிப்பிடுகிறது. வடவரையை மத்தாக்கி  என்ற அற்புத பாடலில் வரும் வடவரை விந்திய பர்வதம்.
மகரிஷி  அகஸ்தியர்  தெற்கே  நின்றுவிட்டதால் அவரது  எடை  விந்தியனை  மேலே  எழச் செய்ய முடியவில்லை என்பது இன்னொரு உண்மையாக இருக்கலாம்  அல்லவா? என்றான் யுதிஷ்டிரன்.

''ஆமாம்.''

''மகரிஷி கேட்க மறந்துவிட்டேனே.  தேவர்கள்  இந்திரன் தலைமையில் பிரம்மா சொன்னபடி  அகஸ்தியரை சென்று  வேண்டி, எப்படியாவது  கடலை வற்றச் செய்யவேண்டும். அப்போது தான் அதில்  ஒளிந்திருந்த ராக்ஷசர்கள் அழிவார்கள்  என்று  விண்ணப்பித்தார்கள்  இல்லையா ?''

''ஆம்  கேட்டார்களே''
''அகஸ்தியர்  என்ன சொன்னார்?''
''இந்திரா, கவலைப் படாதே,  நான் கடல் நீரை அப்படியே  உறிஞ்சிவிடுகிறேன்'' என்ற அகஸ்தியர்  கடலை நோக்கி புறப்பட்டார்.வருணனின் புத்திரன் அல்லவா.  இறைவனை மனதில் வேண்டி, இதனால்  நல்லதே ஏற்படும்,  சகல தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், யோகிகளும் துன்பமின்றி  இருப்பார்கள் என்பதால்  என்னால்  இந்த  கடலை வற்றச் செய்ய சக்தி கிடைக்கட்டும் என்று  கண்ணை மூடி  தியானித்து   ஆ வென  வாய் திறந்தார்.   எதிரே இருந்த கடல் நீர் அத்தனையும்  அவரது வாயில் புகுந்தது. வற்றிய கடலில் ஒளிந்திருந்த காலகேய  ராக்ஷசர்கள் ஓட ஒளிய  இடமின்றி  இந்த்ராதி தேவர்களிடம் சிக்கி  முழுதுமாக அழிந்தனர்.

உலகில் கடல் இன்றி  எப்படி உயிர் வாழ்வது?  நீங்கள்  தான்  மீண்டும்  கடலை நிரப்ப வேண்டும் என்று  தேவர்கள் வேண்ட ''ஜீரணமாகிவிட்டதை  மீண்டும்  கொண்டுவரவேண்டுமானால்  வாதாபியும்  வந்து விடுவான்  பரவா இல்லையா  '' என்று சிரித்தார்  அகஸ்தியர்.

எல்லோரும்  பிரம்மாவை  வேண்ட  அவர்  மீண்டும் கடல்  நிரம்ப வேண்டுமானால்,  ஆகாச கங்கை தான்  அருள் புரிய வேண்டும்.  அதற்கு பகீரதன் வருவான். காத்திருங்கள்'' என்றார் '
நாமும் காத்திருப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...