Tuesday, October 2, 2018

ORU ARPUDHA GNANI


ஒரு அற்புத ஞானி   J.K. SIVAN 

சேஷாத்திரி ஸ்வாமிகள்

                           ''வைத்யநாதன் ''

மஹா பெரியவரைப் பற்றியோ, சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றியோ, ரமணரைப் பற்றியோ நிறைய சம்பவங்களை சொல்லும்போது ஒரு சிலருக்கு  மனதில் இப்படி கூட  தோன்றலாம். எதற்கு இந்த ஆள் விடாமல் நிறைய புருடா, கட்டுக் கதையெல்லாம் அவிழ்த்து விடுகிறான் . வேறு வேலை இல்லையோ? என்று.

உண்மையில் இதுவரை சொன்ன அனுபவங்கள் அதிசயங்கள் எதுவுமே என் சொந்த சரக்கு அல்ல. கற்பனைக்குக்  கொஞ்சம் கூட இங்கே இடமில்லை. குழுமணி நாராயணஸ்வாமி சாஸ்திரிகள் ஸ்வாமிகளோடு நெருங்கி இருந்தவர். பரம சிஷ்யர்.  ஏதோ அவரால் நமக்கு இந்த அநுபவங்கள் தெரிய வருகின்றன. வெளியே வராத எத்தனையோ சங்கதிகளும் இருக்கலாம். தெரியாமலேயே மறைந்தும் போயிருக்கும், போகலாம்.

என்றோ நாம் செய்த நற்பயன் வினையாக இதுவாவது நமக்கு கிடைத்திருக்கிறது என்று தான் நான் எண்ணுகிறேன். அதை உங்களோடு பகிர்ந்து மகிழ்கிறேன். நான் செய்வதெல்லாம் அந்த அனுபவங்களைச்  சுருக்கி தேவைப்பட்ட இடத்தில் விளக்கி, எளிமையாக படிக்க உதவ முயல்கிறேன்.

நூறு இருநூறு வஷங்களுக்கு முன்பு வியாதிகளை அதிகம் இனம் கண்டு கொள்ளவில்லை. மருந்துகளும் இல்லை. இறைவன் மேல் பாரத்தை போட்டு நம்பிக்கையில் நம் முன்னோர் உயிர் வாழ்ந்திருந்தனர். மஹான்கள் சிலர் அதிசயமாக குணப்படுத்தினார்கள் . காரணம் காரியம் விளக்க வழியில்லை.

உதாரணமாக TB என்ற tuberculosis வியாதியால் அநேகர் உயிரிழந்தனர். காசநோய்க்கு மருந்து இல்லாத காலம். எலும்புருக்கி நோய் என்றும் சொல்வதுண்டு.

விஸ்வநாத முதலியார் மனைவி சாரதாம்பாள் இதனால் துடித்தாள். முதலியார் பாரி அண்ட் கம்பெனியில் வேலை செய்தார். குளிர்காலத்தில் அதிகம் படுத்தும் நோய் அது. வருஷம் நான்கு ஐந்து மாதம் நரகவேதனை. சுவாமி பக்தை சாரதாம்பாள். சேஷாத்திரி ஸ்வாமிகள் எங்கே எப்போ எதற்கு வருவார் என்று இறைவனுக்கே தெரியாதே. ஒருநாள் திடீரென்று அந்த வீட்டுக்கு வந்தார்.

''பசு மோர் குடி.'' என்று கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிட்டார்.

தயிர் மோர் எல்லாம் சேர்த்துக் கொள்ளாமலே இருந்தவள் அன்றிலிருந்து பசு மோர் சாப்பிட்டாள் . கொஞ்சம் கொஞ்சமாக வியாதி குறைந்து அவள் பூரண குணம் அந்த வருஷமே அடைந்தாள்.

+++

எச்சம்மாள் எனும் லட்சுமி அம்மாள் ஸ்வாமிகளின் தீவிர பக்தை. அடிமை. பாவம். ஒரு மாத காலம் பித்த வாத ஜுரம். படுக்கையில் போட்டு விட்டது. ஸ்வாமிகள் தினம் தினம் வரும் வீடு அது. ஏனோ அந்த ஒரு மாத காலம் அந்த வீட்டுப்பக்கம் தலையே காட்டவில்லை. எச்சம்மாள் ''சுவாமி சுவாமி''  என்று பிதற்றினாள். அவள் பெண் செல்லம்மாள் ஸ்வாமியை தேடி ஒருநாள் பூத நாராயணன் கோவில் வாசலில் பார்த்து காலில் விழுந்து

''அப்பா நீங்க  ஏன் வீட்டுக்கு வரலே. என் அம்மாவுக்கு ஜுரம் நாரா தோலா ஆயிட்டாளே . உங்களேயே நினைச்சு பிரார்த்தனை பன்னறாளே வாங்கோ'' என்றாள் .

''ஓஹோ நாளைக்கு பார்ப்போம்'' என்ற ஸ்வாமிகள் மறுநாள் காலை 6 மணிக்கே வந்து விட்டார். எச்சம்மாள் படுத்திருந்த கட்டில் ஓரத்தில் உட்கார்ந்தார். செல்லம்மாவுக்கும் விஷ ஜுரம் தொற்றிக் கொண்டது..

''எனக்கு தயிர் சாதம் குடு'' என்று கேட்டார். முடியாமல் செல்லம்மா கொண்டு வந்து கொடுத்தாள் . ஒரு கவளம் சாப்பிட்டு. ''இந்தா. எச்சம்மாவுக்கு கொடு. நீயம் சாப்பிடு இதை'' என்று அவள் வாய்க்கு அருகே நீட்டினார். செல்லம்மாள் கொஞ்சம் கொஞ்சமாக அதை எச்சம்மாவுக்கு ஊட்டினாள். தானும் சாப்பிட்டாள். அன்று சாயந்திரம் எச்சம்மா எழுந்து உட்கார்ந்தாள். செல்லம்மாள் மறுநாள் காலை வீட்டில் கொல்லையில்  பசு மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்தாள்.

++

எச்சம்மாவுக்கு ரமணன் பேரன். ஒரு தரம் அவன் கீழே விழுந்து கால் சுளுக்கிக் கொண்டு வீக்கம். நடக்க முடியவில்லை. அந்த காலத்தில் எலும்பு முறிவைக் கூட சுளுக்காக பாவித்து மந்திரித்து உருவி குணமாயிற்று. வலி அதிகமாகவே, அழுதான். குழந்தையை த்தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு நடந்தாள் எச்சம்மா. போகும் வழியில் சேஷாத்திரி ஸ்வாமிகளை எதிரே பார்த்துவிட்டாள் . ரமணனை இறக்கி விட்டு வணங்கினாள் . சுளுக்கு விஷயம் சொன்னாள் .

''ஓஹோ ஆஸ்பத்திரிக்கு போறியோ . போ போ'' என்று சிரித்தவாறு சொல்லிவிட்டு ரெண்டு கை மண்ணை வாரி எடுத்து ரமணன் உடம்பு கை கால் பூரா தானே பூசிவிட்டு, துளி மண்ணை அவன் வாயிலும் போட்டு சாப்பிடு'' என்கிறார். ரமணனைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரி போனதும், வெள்ளைக் கார டாக்டர் ரமணனை '' இறக்கி நடக்க வை'' என்கிறான். ரமணன் ஜோராக நடக்கிறான். வலி எங்கே போனது?

''கையைப் பிடித்துக் கொண்டு கிட்டே அழைத்து வா''' என்கிறான் டாக்டர். ரமணன் தலையை மாட்டேன் என்று ஆட்டிவிட்டு படு வேகமாக ஆஸ்பத்திரி வாசலை நோக்கி ஓடுகிறான்!!! காலில் தான் ஒன்றுமே ப்ராப்ளம் இல்லையே. நன்றாக ஓடுகிறான். அவனை  எதற்கு இங்கே  அழைத்து  வந்தாய்?'' என்று எச்சம்மாவை கோபிக்கிறான் வெள்ளைக்கார டாக்டர்.

++

இதே எச்சம்மாவுக்கு முன்பு ஒரு முறை பித்த ஜுரம் கண்டபோது மூன்று நாள் வாட்டியது. திடீரென்று  ஸ்வாமிகள் வந்து  ''விளாம்பழம் சக்கரை போட்டு சாப்பிடேன்''  என்றதும் அவ்வாறே செய்தவள் குணமடைந்தாள் .

என்ன காரணம் சொல்வது இதற்கெல்லாம்?? மந்திரமா, மாயமா? அதிசயமா? தெய்வ சக்தியா? நிச்சயம் பக்தி தந்த தெய்வ சக்தியே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...