Wednesday, October 17, 2018

ORU ARPUDHA GNANI



ஒரு அற்புத ஞானி J.K. SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள்

திரிகால ஞானி.
நடந்ததை எல்லோராலும் கொஞ்சம் நினைவு கூற முடியும். இப்பொழுது நடப்பதை சொல்வதற்கும் அதிக சிரமம் இல்லை. அதில் ஆச்சர்யமும் கிடையாது. அனால் நடக்கப் போவதை யாராலாவது கூறமுடிந்தால் அவர் ஒரு ஞானி. ஆம். அனாகத ஞானி. தீர்க்க த்ரிஷ்டி உடையவர். இது எல்லோருக்கும் சாத்திய மில்லை.

சேஷாத்திரி ஸ்வாமிகள் ஒரு திரிகால ஞானி. இதை அவர் காலத்தில் பலர் உணரவில்லை என்பது தான் வருத்தத்தை தருகிறது. ஏதோ ஒரு பைத்தியம் என்று உதாசீனப் படுத்தியவர்கள் அநேகர் உண்டு.

வெள்ளைக்காரன் காலத்து இந்தியாவில் ரங்கூன் செல்வதற்கு தடையில்லை. அநேகர் அங்கே பிழைப்புக்கு சென்றார்கள். வக்கீல் நரசிங்கராவின் சகோதரி அலமேலு அங்கே வாழ்ந்தாள் . பிரசவ காலத்தில் கஷ்டம் ஏற்பட்டது. பிரசவத்துக்குப் பின் மூன்று மாத காலம் உடல்நிலை பாதிக்கப் பட்டு ஜுரம் நிற்கவில்லை. எப்படியோ திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தாள். ராவின் வீட்டில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

ஒருநாள் ஸ்வாமிகள் நேராக நரசிங்க ராவ் வீட்டுக்குள் நுழைந்து விட்டார். அவர் எப்பது எங்கே செல்வார், போவார் வருவார் என்று எவருக்குமே தெரியாது. உள்ளே சென்றவர் அந்த பெண்ணின் படுக்கை அருகே வந்து உட்கார்ந்து கொண்டு அவளைக் கையால் தொட்டார். அலமேலுவுக்கு தாடியும் மீசையும், அழுக்கு உடையாக ஒருவன் தன்னை வந்து தொடுவது பயத்தை தந்தது. வீல் என்று கத்தினாள்.

நரசிங்க ராவுக்கு சேஷாத்திரி ஸ்வாமிகளை பற்றித் தெரியாது. அவரும் யாரோ ஒருவன் உள்ளே வந்துவிட்டான். சகோதரியைத் தொடுகிறான் என்று எண்ணி கன்னா பின்னா என்று கத்தி வெளியே அனுப்ப்பிவிட்டார். ஸ்வாமிகள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வெளியே சென்று விட்டார்.

எச்சம்மாள் ஸ்வாமியின் பக்தர்களில் ஒருவள். அவளுக்கு நரசிங்க ராவ் வீட்டார்கள் பழக்கம். அவள் நடந்ததை அறிந்து திடுக்கிட்டாள். ஸ்வாமிகளை மறுநாள் அன்ன சத்திரத்தில் பார்த்து வணங்கினாள் .

''சுவாமி நரசிங்க ராவ் சகோதரி ரொம்ப க்ஷீணமாக படுத்திருக்கிறாளே , பிழைப்பாளா?'' என்று கேட்டாள் .

''அப்பவே போய்ட்டாளே. எல்லோரும் சொன்னாளே '' என்று ஸ்வாமிகள் சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

மூன்று நாள் கழித்து அலமேலு இறந்துவிட்டாள் .
++

சுப்ரமணிய தம்பிரானுக்கு ஒரு சிக்கல் நீதிமன்றத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது. தானே தனது வழக்கை வாதாடினார். ஒருநாள் அவர் சேஷாத்ரி ஸ்வாமிகளை வழியில் பார்த்து வணங்கியபோது '' எதுக்கு இது உனக்கு. பேசாமல் அவனோடு ராஜியாயிடு. அப்படித்தான் சனிக்கிழமை எல்லாம் முடிஞ்சுடும்'' என்கிறார். தம்பிரானுக்கு அவ்வாறு செய்வதில் விருப்பமில்லை. கடைசிவரை வாதாடிப் பார்ப்பது என்று திட்டம். எனவே ஸ்வாமிகள் சொன்னதை லக்ஷியம் செய்யவில்லை.

அடுத்த முறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிரதிவாதியான தம்பிரானின் எதிரி தானே ராஜியாக வழக்கை முடித்துக் கொள்ள விருப்பம் தெரிவித்து வழக்கு அவ்வாறே முடிந்தது. ஸ்வாமிகளுக்கு எப்படி அந்த வழக்கு அவ்வாறு தான் முடியும் என்று தெரிந்தது?. தம்பிரான் அவரிடம் வழக்கைப் பற்றி பேசவே இல்லையே. ! வழக்கு முடிவுக்கு வந்ததும் அவர் சொன்ன ஒரு சனிக்கிழமை!

++
தாயாதி பங்காளி சண்டைகள் என்னதான் நெருக்க மான உறவாக இருந்தாலும் சொத்து விவகாரங்கள் நீதி மன்றத்தில் போய் நிற்கும். முத்துசாமி முதலியார் அப்படித்தான் அலையாய் அலைந்து கொண்டிருந்தார். அவர் தாயாதி ஒருவன் அவருக்கு எதிராக அவர்மேல் வியாஜ்யம் தொடர்ந்தான். கேஸ் இழுத்துக் கொண்டு பல வருஷங்கள் நடந்தது. ஒருநாள் முதலியார் ஸ்வாமிகளை தரிசித்தார். தனது கேஸ் பற்றி சொன்னபோது சிரித்துக்கொண்டே ''அது தான் முடிஞ்சுட்டுதே. அவன் தோத்துப் போய்ட்டானே . நீ ஜெயிச்சுட்டியே'' என்று தலையை தட்டி விட்டு சென்றார். ரெண்டு மாதம் கழித்து அந்த பலநாள் கேஸ் நீதிமன்றத்தில் முடிவாகியது. தாயாதி முதலியார் மேல் தொடுத்த வழக்கு தோற்றது. அவன் விடுவானா? மேல் கோர்ட்டில் அப்பீல் போட்டான். முதலியார் சந்தோஷமாக ''சுவாமி நீங்கள் சொன்னமாதிரி அந்த கேஸ் எனக்கு சாதகமாக தீர்ப்பு ஆனது. அவன் இப்போ மேல் கோர்ட்டில் தாவா போட்டிருக்கான்'' என்று சொன்னார்.
ஸ்வாமிகளோ துளியும் அது பற்றி காதில் வாங்கவில்லை ''போடா தள்ளுபடியானதை சொல்றே நீ'' என்கிறார். இரண்டுமாதம் கூட ஆகவில்லை. மேல் கோர்ட்டில் தாயாதி போட்ட மனு ஏற்றுக்கொள்ளப் படாமல் தள்ளுபடி ஆய்விட்டது. என்ன சொல்வது ஸ்வாமிகள் ஞானம் பற்றி !
++

சிவப்பிரகாச முதலியார் ஸ்வாமிகளின் பக்தர். அவர் பின் அடிக்கடி செல்வார்.

ஒருநாள் ஸ்வாமிகள் ''என்ன பார்க்கறே . பெரிய நெருப்புடா திகு திகுன்னு. போயிட்டுது இனி வராது உயிர்.. சொந்தமாவது பந்தமாவது '' என்று சொன்னார்.

முதலியாருக்கு ஒன்றும் புரியவில்லை. பேசாமல் பய பக்தியோடு அதை கேட்டுக் கொண்டார். அர்த்தம் புரிய நான்கு நாள் ஆகியது.

ஆமாம் ஒரு தந்தி வந்தது. ஊரில் அவர் பெண் அடுப்படியில் நெருப்பு பற்றி எரிந்து இறந்தாள் என்று தந்தி செய் தி
சொல்லியது.

கண்களில் நீர் சோர முதலியார் ஸ்வாமிகளை நோக்கி ஓடினார். ஸ்வாமிகள் எங்கே காணோமே! வழக்கம்போல் பல நாள் கண்ணில் படவில்லை! யாருக்கு எங்கே என்ன உதவி செய்து கொண்டிருக்கிறாரோ!




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...