Tuesday, October 9, 2018

NALACHARITHRAM



ஐந்தாம் வேதம்  J.K. SIVAN
நள சரித்திரம் 9


           
      யார் நீ... தெரியவில்லையே!

 நள  சரித்திரம் எவ்வளவு பெரிய ராஜாவாக இருந்தாலும்  கற்புக்கரசியாக இருந்தாலும் கர்ம வினையை தவிர்க்கமுடியாது. கோள்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாது என்று உணர்த்துகிற ஒரு அற்புத சம்பவம். தன்னம்பிக்கையை பக்தியோடு வளர்த்துக்கொண்டால் கஷ்டம் எளிதாகும்.

தமயந்தியின் தோழி எஜமானி சொல்லியபடி தேரோட்டி  வாஹுகனை சோதித்து கேள்விகள் கேட்கிறாள் . உருவத்தை தவிர நளனை அவன் குணாதிசயங்களைக் கொண்டு அறிகிறாள் தமயந்தி.
                                                                 
''குறையாத கற்பினாள் கொண்டானுக்கல்லால் இறவாத வேந்திழையாள் ''........ என்று சொல்வதாக இந்த இடத்தில் புகழேந்தி நளவெண்பாவில் அருமையான பாடுகிறார்.

அதாவது கற்பு நிறைந்த மாதர், துன்பமுற்றாலும், தம்மை காத்துக் கொள்வார்கள், கணவன் தம்மை விட்டு பிரிந்தாலும் கோபப்படமாட்டார்கள்,.... என்கிறான் நளன் .

கேசினி நடந்ததை சொல்ல, தமயந்தி, வேறோருவனாக தோன்றுபவன், வாஹுகன், தன் கணவன் நளனே என்று அறிகிறாள். உரு மாறி யிருக்கிறானே? தானே நளன் என்று சொல்லவில்லையே?. ''

மீண்டும்  கேசினியை அனுப்பி  ''அவனை கூர்ந்து கவனி, அவன் குணாதிசயங்களை வந்து உடனே சொல்.'' என்று கட்டளையிடுகிறாள். கேசினி வந்து சொல்கிறாள்:

'' தேவி, நான் அவரைக் கவனித்தேன். அவர் உயரக் குறைவான இடத்தில் குனியாமல் நடக்கிறார். அவரைக் கண்டதும் உயரம் கூடிவிடுகிறது. நுழைய முடியாத இடத்திலும் அவர் நுழைந்ததும் பெரிதாகி விடுகிறது. கைகளில் புஷ்பத்தை வைத்து மூடினாலும் வாடவில்லை, கசங்கவில்லை, மணம் கூடுகிறது. கண்ணால் பார்த்ததுமே பாத்திரங்களில் நீர் நிறைகிறது. ஒரு புல்லை எடுத்து வெய்யிலில் காட்ட உடனே தீ மூள்கிறது. சமைக்கிறார் . அவர் நெருப்பை கையிலே தொடுகிறார் அது அவரைத் தீண்டவில்லை''.... என்றெல்லாம் சொல்கிறாள். தமயந்திக்கு நன்றாகவே புரிந்துவிட்டது. இதெல்லாம் நளனுக்கு மட்டுமே சாத்தியம் .

''கேசினி நீ உடனே சென்று வாஹுகன் சமைத்த உணவில் சிறிது அவனுக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு வா''

தமயந்திக்கு நளன் எப்படிப்பட்ட சிறந்த ''நள பாகம்'' செய்பவன் என்று தெரியுமே. நிறைய  ருசி பார்த்திருக்கிறாளே. கேசினி கொண்டுவந்த உணவு அதே சுவையைத் தந்தது அவளுக்கு  வாஹு கன்  தான்  நளன்  என்பது ஊர்ஜிதமானது. எப்படி நிரூபிப்பது? அழுதாள். தனது  குழந்தைகள் இந்த்ரசேனாவையும், இந்திர சேனனையும் வாஹுகனிடம் அனுப்புகிறாள். வாஹுகனாகிய நளன் ஓடி வந்து அவ்விரு குழந்தைகளை வாரி அணைத்து கொஞ்சி மகிழ்கிறான். சுதாரித்துக்கொண்டு கேசினியிடம் சொல்கிறான்:

''அம்மா இந்த குழந்தைகள் என் குழந்தைகள் போல் இருந்ததால் மகிழ்வுற்று நெடுநேரம் அவர்களோடு விளையாடி நேரம் செலவழித்தேன். நான் வெளி தேசக்காரன். வேலையாள். பார்ப்பவர்கள் தப்பாக நினைப்பார்கள்.கோபிப்பார்கள். இந்த ராஜ குடும்பத்து குழந்தைகளை விரைவாக உள்ளே அறமனைக்குள்  அழைத்து செல்லுங்கள்'' என்றான்.

தமயந்தி முடிவுக்கு வந்துவிட்டாள். இனி தானே அவனை சோதித்து நளனா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும் என்று தந்தை தாய் அனுமதியுடேன் வாஹுகனை அரண்மனை அந்தப்புரத்திற்கு அழைத்தாள் . தமயந்தியைப் பார்த்த நளன் கண்ணீர் விட்டான். அவள் கேட்கிறாள்

''உங்களுக்கு காரிருளில் காதலியை கானகத்தில் கைவிட்டு போன அரசனை தெரியுமா? அவள் என்ன தவறு செய்தாள் ? தேவர்கள் அவளை மணக்க வந்தும் அவனையே மணந்து, அவனிடம் இரு குழந்தைகளையும் பெற்றவளை, அக்னி சாட்சியாக உன்னை கைவிடேன் என்று அவன் சத்தியம் செய்து இவ்வாறு தனியே விட்டு பிரிந்தது என்ன நியாயம்? சொல்லுங்கள் '' என்று அழுதுகொண்டே கேட்கிறாள்.

''கலி'' தான் காரணம். இதைத் தவிர வேறு  என்ன சொல்வேன். செய்தது  நானல்ல. என்னுள் புகுந்த கலி, என்னை நாட்டை இழக்கசெய்து, மக்களை வெறுக்க ச்  செய்து, கூடா நட்பு சேர்ந்து சூதாடி, தோற்று, சகலமும் இழந்து, அருமை மனைவியை கானகத்தில் கைவிட்டு, இதெல்லாம் செய்ய வைத்தான். நளன் ஒன்றும் செய்யவில்லை. அவனுள் இருந்த கலி. உன் சாபத்தால்  வெம்பி வதங்கினான்.'' வாஹுகன் கண்களில் தாரை.


நளனை தமயந்தி அடையாளம் காண்கிறாளா.  நளன் திரும்ப நாடு சென்று அரசனாகி சுபிக்ஷமாக வாழ்கிறானா  என்று அடுத்த கட்டுரையில் தெரிந்து கொண்டு நளதமயந்தி தம்பதியரை நவராத்திரியில் வணங்கி விடைபெறுவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...