Tuesday, October 9, 2018

NOSTALGIA


கதை கதையாம்....காரணமாம்...
                         J.K. SIVAN 

உலகெங்கும் எந்த மொழியானாலும் கதை கேட்டு வளராத குழந்தைகள் கிடையவே கிடையாது. அவர்களை வசப்படுத்தும் வசிய மந்திரம் கதை. கதை கேட்கும்போது குழந்தைகளின் முகங்களை பார்க்கவேண்டுமே. அப்பப்பா என்ன உற்சாகம் என்ன உணர்ச்சி மயம்.  குழதைகளை கட்டுப்படுத்துவதால் தான் அதற்கு ''கட்டுக்கதை'' என்று பெயர் வந்திருக்குமோ என்று தோன்றுகிறது?


 என் அண்ணா குழந்தைகள், என் மனைவியின் சகோதரிகள் நங்கநல்லூரிலேயே  அடுத்தடுத்த  தெருவில் இருந்ததால். அவர்கள் குழந்தைகள், தெருவில் அண்டை அசல் வீட்டு குழந்தைகள் என்னை எப்போதுமே சுற்றிக்கொண்டிருக்கும் எத்தனையோ இன்பகரமான நாட்கள் அவை.

 என்னைக் கண்டால் கதை சொல்லு என்று அவர்கள் மொய்த்துக்கொண்டுஜ்  கேட்டபோதெல்லாம் நான் தான் உலகிலேயே மிகப்பெரிய கதை சிருஷ்டி கர்த்தா என்ற எண்ணம் தோன்றியது.

''ஏதோ எங்கோ ஒரு  நிகழ்ச்சியில் கதை ஆரம்பிப்பேன் அதில் எதையெதையோ கலந்து ஒரு காக்டெயில் COCKTAIL  பண்ண அவசியம் ஏற்படும். கதை வரண்டபோது கற்பனை கை கொடுக்கும் ''தாக்கலா மோக்கலா '' இல்லாமல் (ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் சொல்வதை இப்படி ஒரு வார்த்தையால் வர்ணிப்பது எங்கள் குடும்ப வழக்கம். இந்த சொல்லின் ஆதி பூர்வோத்தரமோ, , ஜனன விபரமோ எனக்கு இன்று இதை எழுதும் வரை தெரியாது)

ஐந்தாவது படிக்கும்போது எங்கள் வகுப்பில் சரோஜினி டீச்சர் சொன்ன மிகப்பெரிய கதை எது தெரியுமா? . எங்களை எல்லாம் மௌனமாக இருந்தால் ஒரு பெரிய கதை சொல்லப் போறேன் என்பாள். நாங்கள் ஆவலுடன் கப் சிப். தொண்டையை கனைத்துக்கொண்டு எங்கள் எல்லோரையும் ஒரு முறை வெற்றிகரமாக பார்த்துவிட்டு ஆரம்பிப்பாள்
''ஒரே ஒரு ஊரிலே ஒரு நரி.'' 
.மௌனமாக  அடுத்து காத்திருப்போம்.  ''அதோடு கதை சரி'' என்று முடிப்பாள் .
நான் கேட்ட கதைகளில் எல்லாம் முக்கால்வாசி நரி தான் ஏமாறும். ஆனால் இந்த சரோஜினி டீச்சர் கதையில் நரி எங்களை ஏமாற்றியது.

ரோமாபுரி ஹோமர்  இலியாத்  கதையில் தேவைப்பட்டால் கொஞ்சம்,   பாரதத்தின் சில நிகழ்வுகள், துப்பறியும் கதைகளில் தேவன், தமிழ்வாணனின்  சங்கர்லால்,   விக்ரமாத்தித்தன் வேதாளம், ராஜ தேசிங்கு,  கொஞ்சம் ஷெர்லக் ஹோம்ஸ் , அகதா கிறிஸ்டி,  வேறு எங்கோ எப்பவோ தெரிந்துகொண்டது எல்லாவற்றையும் கற்பனையால் சாந்து பூசி என்ன தோன்றுகிறதோ அப்படியெல்லாம் ஒரு கலக்கு கலக்கி குழப்பி கதையைக் கொண்டு போவேன். இதில் மயங்கி அந்த சிறுவர் குழாம் என்னை மகுடி நாகமாக வளைய வரும்.

எங்கள் வீட்டு வாசலில் வேப்ப மரத்தடி, மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டுகள், கொல்லையில் துணி துவைக்கும் கல் அருகே என்று எங்கள் சௌகரியம் போல கதை ஸ்தாபனத்தை  அடிக்கடி இடம் மாற்றிக் கொள்வோம். சுரேஷ் வாயில் விரல் போட்டுக்கொண்டே ரசிப்பான். , அவனது நிழல் மீனா . விரல் சுவை கதைச்சுவை இரண்டிலும் திளைத்திருப்பாள். திருடன் கதையில் வரும் சந்தர்ப்பங்களில் வித்யா பக்கத்தில் யாரையாவது கெட்டியாக பிடித்துக்கொண்டு டென்ஸ் TENSE ஆக இருப்பாள். வேகமான ரயிலில் இருந்து பாலத்தில் அது வளைந்து போகும்போது கதாநாயகனை கீழே குதிக்க வைப்பேன். அவன் ஆழமான நதியில் குதித்து லாவகமாக நீந்தி கரை ஏறுவான். என் அண்ணன் மகள் கௌரிக்கு இதயத் துடிப்பு பட பட என்று மூன்று வீட்டுக்கு கேட்கும். முகம் வியர்த்து போகும். ''அய்யோ அப்பறம்.'' ரெண்டு பசியான முதலைகள் ஆற்றில் குதித்த அந்த திருடனை ஆகாரமாக ஏற்றுக்கொள்ள வந்து நீச்சல் போட்டியில் அவனிடம் தோற்று, ஏமாந்ததாக சொல்லும்போது என் அண்ணன் மகன் ரங்கு துடிப்பான். என் கதையின் வீரன் ''சீக்ரம் சீக்ரம்'' முதலைகிட்டேந்து தப்பிக்கணுமே என்ற கவலை அவன் முகத்தில் தேங்கி நிற்கும். வீரன் கரையேறி முதலைக்கு டாடா காட்டும் சம்பவத்தில் தனை மறப்பான். அப்போது ரங்குவின் முகத்தில் கோடி சூர்யப்ரகாசத்தை  எழுத எனக்கு  தெரியாது.

நான் சொன்ன கதைகளைவிட நான் ரசித்த கதைகளை இப்போது நினைவுக்கு கொண்டுவர நினைக்கிறேன் .

பன்னியூர் படாடோப சர்மா என்று வடுவூர் துரைசாமி அய்யங்கார் கதை எழுதுவார். கருங்குயில் குன்றத்துக் கொலை, என்று எல்லாம் எழுதுவார். ஒரே மேடையில் அமர்ந்து திருடனும் ஜமிந்தாரும் காப்பி குடித்தார்கள் என்று எழுதுவார். நீள நீளமாக பெயர் எல்லாம் வைப்பார் கதைக்கு. கொலை குத்து, விஷயங்களை வைத்து என் போன்றோர்களை சிறு வயதில் மடக்கிப்போட்டவர். இன்றைக்கும் வடுவூராரின் பழைய புத்தகங்கள் லைப்ரரியில் காணும்போது கை தேடும்.

ஆரணி குப்புஸ்வாமி முதலியார் கதைகள் இதைப்போலவே இருக்கும். ஆனால் அதில் வருபவர்கள் சண்டை சச்சரவுக்கு எல்லாம் துரைசாமி அய்யங்கார் ஆட்கள் போல் போக மாட்டார்கள். ரொம்ப நேரம் ஆ.கு. முதலியார் புஸ்தகம் தொடர்ந்து படிக்க பிடிக்காது. அவரை மாதிரி ராஜம் அய்யர் எழுதுவார். நிறைய பெண்கள் அழுவார்கள் அவர் கதைகளில். எனக்கு தாங்காது . மற்றுமொரு வித்யாசமான எழுத்தாளர். மாயூரம் வேத நாயகம் பிள்ளை. அவரது பிரதாப முதலியார் சரித்திரம் எதோ உண்மையிலே ஒரு சரித்திர பாட புஸ்தகம் படிப்பது போலவே இருக்கும். நிறைய ஒவ்வொரு பாராவிலும் பக்கத்திலும் கதா பாத்திரங்கள் வாயிலாக நீதிகள் சொல்வார். அதை எல்லோரும் படித்தால் அதன் படி நடந்தால் நாட்டில் போலீஸ் இலக்காவுக்கு கோவிலில் பூக் கட்டிக்கொடுக்கிற வேலை கொடுக்கலாம். கோர்ட் வேண்டாம்.

பம்மல் சம்பந்த முதலியார் புத்தகங்கள் நாடக பாணியில் இருக்கும். எனக்கு அதில் வருபவர்கள் பேசுவது ஆச்சர்யமாக இருக்கும். ஒரு சின்ன கேள்விக்கு தாம்பரம் லேருந்து பீச் வரை பதில் சொல்வார்கள். கதை விறுவிறுப்பு திருப்பங்கள் எல்லாமே சுவாரசியம் குறையாமல் இருக்கும்.

நாலணா ஒரு வாரத்திற்கு வாடகை  என்று மாம்பலம் ஸ்டேஷனில்  இறங்கி காய்கறி சேர் சங்கதிகளை மிதித்து, 
 எதிரே ஒரு மாடியில் லெண்டிங் லைப்ரரியில் புத்தகம் எடுப்பேன். அவர்கள் அதிகம் ஆங்கில புத்தகம் தான் வைத்திருப்பார்கள். எர்ல் ஸ்டேன்லி கார்டினர் பெர்ரி மேசன் கதைகள் நிறைய படித்தேன். நூறுக்கு மேல் இருக்கும். அப்பப்போ A A FAIR  என்று பேர் மாத்தி எழுதுவார். தமிழ் வாணனின் சங்கர்லால் பெர்ரி மேசனிலிருந்து விளைந்தவரோ என்று பிறகு யோசிக்க வைத்தது. லெப்டினண்ட் கர்னல் ட்ரக் TRAGG  என்று போலிஸ் அதிகாரி ஒவ்வொரு கதையிலும் 10-15வது பக்கத்திற்கு மேல் தான் தலை காட்டுவார். மேசனை நம்பமாட்டார் . யோக்யமான போலிஸ் அதிகாரி. பால் ட்ரேக் என்று துப்பறிவாளன் சமய சஞ்சீவியாக மேசனுக்கு துப்பு கொடுப்பான். டெல்லா ஸ்ட்ரீட் என்று ஒரு பெண் உதவியாளி மேசனுடன் பேசிக்கொண்டே இருப்பாள். அவள் பேச்சிலிருந்து கூட மேசனுக்கு புது யுக்தி கிடைக்கும். பாதி புஸ்தகத்துக்கு மேல் நீதிமன்ற கேள்வி பதில்கள் என்னை அசர வைத்தது. ஒவ்வொரு கதையிலும் புத்தகத்திலும் வரும் பெர்ரி மேசனின் கட்சிக்காரர் ஒத்துழையாமை இயக்க ஆசாமியாகவே இருப்பார். பொய் சொல்வார். முக்கால் வாசி பெண்கள் தான் அவர் வாடிக்கையாளர்கள். அவர்கள் சொன்னதை வைத்துக்கொண்டு சொல்லாததை கண்டுபிடிப்பார். ஹமில்டன் பர்ஜர்  HAMILTON  BURGER என்று ஒரு அராங்க வக்கீல் ஒவ்வொரு கதையிலும் தோத்துப்போவதற்கென்றே வருவார். சரியான கெடுபிடி ஆசாமி. மேசனுக்கு ஜன்ம வைரியாகவே தன்னை அவதாரம் செய்து கொண்டவர். இந்த புத்தகங்கள் இன்னும் நிறைய படித்திருந்தேனானால் நான் போலீசில் சேர்ந்திருக்கலாம். இல்லையென்றால் கோர்ட் குமாஸ்தா உத்தியோகமாவது விருப்பத்தோடு என்னவோ?.

நாலணாவுக்கு மற்றுமொரு விரும்பி படித்த வாடகை புத்தகம் ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் . பெயருக்கு வைக்கும் பேரே ஒவ்வொரு புஸ்தகத்திலும் ஆச்சர்யமாகவும் நூதனமாகவும் இருக்கும். முதல் வரியிலிருந்து முடியும் வரை மூச்சுக்கு முன்னூறு பேரை வெட்டுவதும் சுடுவதுமாக இருக்கும். இது துப்பறியும் கதை இல்லை. காசுக்கு கொலை செய்யும் கசாப்பு கடை சாமர்த்திய சாலிகள் எல்லா கதைகளிலும் எல்லா புத்தகங்களிலும் வருவார்கள். ஒட்டு மொத்தமாக அவர்கள் அனைவருமே ஒன்று இதயமே இல்லாமல் பிறந்தவர்கள் அல்லது இதயத்தை கழட்டி எங்கோ தொலைத்தவர்களாக இருப்பார்கள். என்னவோ தெரியவில்லை. இது மாதிரி புத்தகங்கள் நிறையவே சின்ன வயதில் என்னைப்போல் நிறையபேர் படிப்பார்கள். என் கண் பார்வையைக் கெடுத்தவர்களில் முக்யமானவர் ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் JAMES  HADLEY  CHASE . மட்டமான பிரிண்ட் சின்ன எழுத்தில். அகாதா கிறிஸ்டி கதைகள் பிடித்தது.எத்தனையோ இரவுகள் கதை முடியும் வரை இரவில் அரிக்கன் லைட்டில் ஷெர்லாக் ஹோம்ஸ் என்னை தூக்கத்தை இழக்க வைத்தவர். அம்மாவிடம் என்னை திட்டு வாங்க செய்தவர். என்னவோ கெடுமதி யாரை விட்டது.

இதிலிருந்து விடுபட்டு சில காலத்தில் தேவனுக்கும் கல்கிக்கும் தாவினேன். என் எண்ணங்கள் விரிந்தன. சொர்க்க பூமிக்கு கொண்டு செல்லப்பட்டேன். JHC யை கைவிட்டேன். இன்னும் தொடவில்லை. தேவனைப்பற்றியும் கல்கி பற்றியும் நிறைய 
 எழுத விஷயம் இருக்கிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...