Monday, October 15, 2018

GNANAPPANA



 சோகம் தந்த ராகம்.. J.K. SIVAN 
 ஞானப் பான - 1

மகா விஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்து பூமியில் உள்ள நம்மையும் காப்பாற்றினார். பத்தாவது அவதாரம் கல்கி அவதாரம். குதிரை மீது வாளெடுத்து வருவார் என்று அறிகிறோம். வந்தபோது நாம் இருக்க போவதில்லை. கலியுகம் முடிய நிறைய காலம் இருக்கிறது. அக்ரமம் எல்லை கடந்து போகவேண்டாமா? நம்மால் இப்போது இருப்பதையே தாங்கமுடியவில்லை. பாவம் பிற்கால வாரிசுகள்.
எப்படி சமாளிக்கப்போகிறார்களோ ?

கடைசியாக   கிருஷ்ணன் வந்தது நமக்கு தெரியும். முந்தைய துவாபர யுகத்தில். வசுதேவர் தேவகிக்கு எட்டாவது குழந்தை தான் அந்த அவதாரம். எல்லா அவதாரத்திலும்  கிருஷ்ணனே பூர்ண அவதாரம். நம்மோடு ஒருவனாக பழகி வளர்ந்து அதீத ஞானம், சக்தி, அன்பு கொண்ட ஒருவன்.
அவன் போல் இதுவரை மட்டும் அல்ல இனியும் ஒருவன் தோன்றப்போவதில்லை.

என் கிருஷ்ணார்ப்பண சங்க குழு நண்பர் ஒருவர் ஸ்ரீ எஸ். விஸ்வநாதன் மும்பைவாசி. கிருஷ்ண பக்தர். குருவாயூரப்பனை தரிசிக்க குருவாயூர் போனவர் பூந்தானம் என்ற மலையாள மஹா கவி  எழுகிய ஞானப்பான ஆங்கில மொழிபெயர்ப்பை வாங்கியவருக்கு ஒரு விசித்திர எண்ணம். ''இதை சிவனுக்கு அனுப்பி எல்லோருக்கும் சொல்ல சொன்னால்??'' 
அப்படியே என்னுடன் தொலைபேசியில் மும்பையி
லிருந்து தனது விருப்பத்தை தெரிவித்து ஒரு சின்ன புத்தகம் அனுப்பினார். அதை படித்து ஒருநாள் எழுத வேண்டாமா?

அந்த சிறிய புத்தகத்தில் ஒரு புது விஷயம். கிருஷ்ணன் துவாரகையில் நீல கல்லினால் ஆன ஒரு மஹா விஷ்ணு விகிரஹத்தை தனது அறையில் பூஜித்து வந்தாராம். அந்த விக்ரஹம் கிருஷ்ணனின் உருவம்குணம்,  தன்மைகள், சக்தி, பக்தர்களிடம் எல்லையற்ற அன்பு அனைத்தும் ஈர்த்துக்கொண்டு விட்டதாம். அதையே தான் குருவாயூரில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் நாம் உன்னி கிருஷ்ணனாக,   குருவாயூரப்பனாக வழிபடுகிறோம்.

ஞானப்பான படித்தேன்.  அது ஓரு அருமையான பக்தி பரவசம் பொங்கும் நீரூற்று. சுகந்த நறுமணம் வீசும் பன்னீர், பாரிஜாத, மல்லிகை, ஜாதி, ரோஜா புஷ்பங்கள் மென்மையோடு கலந்து வீசும்  இனிய தென்றல்  இன்று முதல் அதில் அற்புத  ஆனந்த  ஸ்னானம் நமக்கு கிடைக்கும்.  ஞானப்பானவை  வழ
ங்கினவர் குருவாயூரப்பனால் போற்றப்பட்ட ஒரு கேரள மஹான். பூந்தானம் என்ற கிருஷ்ண பக்தர். 16ம் நூற்றாண்டில் பெருந்தலமன்னா பகுதியில் அங்காடிப்புரம் என்கிற ஊரில் வாழ்ந்தவர்.இப்போது அந்த பகுதி மலப்புரம். பூந்தானம் அவர் பெயரல்ல. அது காணாமல் போய்விட்டது. பூந்தானம் அவர் குடும்ப பெயர். மலையாளத்தில் அநேகர் பெயர் வீட்டுப்பெயர், குடும்ப பெயராகவே இன்னும் இருக்கிறது.

இன்னொரு முக்கிய விஷயம்.  இந்த ஞானப்பான வை தமிழில் நிறைய பேர் அருமையாக எழுதியிருக்கலாம். எனக்கு எழுத வேண்டும் என்கிற ஆசையால் இதை ஆரம்பிக்கிறேன்.  இதில் நான் பல்மொழி  ஆன்மீக நூல்களை மொழிபெயர்த்த வல்லுநர்  உலகமறிந்த ஸ்ரீ  பி. ஆர். ராமச்சந்திரனுடன் இன்று தொலைபேசியில் அளவளாவி  அவர் எழுதிய ஞானப்பான  மொழிபெயர்ப்பையும்  அவர் உடனே அனுப்பியதால் நானும் உடனே இன்றே இதை உங்களிடம் சேர்ப்பிக்க எண்ணம் கொண்டேன். 

சோகத்தால் பக்தி விளையும் என்பதற்கு அநேகர் வாழ்க்கை ஆதாரமாக தொன்று தொட்டு இருப்பதை நாம் அறிவோம். வால்மீகியும் ராமாயணமும். பர்த்ருஹரியும் நீதி சதகமும், அருணகிரியும் திருப்புகழும். எத்தனையோ பல, பட்டினத்தாரும்  அவரது வைராக்கிய பாடல்களும்.  

அளவு கடந்த பொறுக்கமுடியாத சோகம் கொடுத்து அருகிலே இழுக்கும் யுக்தி அந்த கிருஷ்ணனுக்கு உண்டு. சோகம் வறுமையாலோ, உற்றார் பெற்றாரை இழந்தோ சொத்து சுதந்தரம் எல்லாம் பறிபோயோ கூட இருக்கலாம். அந்த நேரம் மனதுக்கு ஆறுதலாக, ஒரு தைரியம் அளிப்பதாக, எரியும் புண்ணுக்கு ஜில்லென்று வலி போக்கும் களிம்பாக கூட பக்தி பரிமளிக்கும்.

''அடே உன்னி கிருஷ்ணா, எனக்கு உன்னைமாதிரி ஒரு குட்டி வேண்டாமா? என்று ''சந்தான கோபாலம்'' மந்திரத்தை 108 முறை குருவாயூரன் எதிரே அமர்ந்து பஜித்தார்.

வெகுநாள் கழித்து அவனருளால் பிறந்த குழந்தைக்கு உன்னி கிருஷ்ணன் என்று பெயர் வைத்தார்.

மொழி தெரியாத விஷயத்தை எழுதுவது ஒரு கயிற்றின் மேல் நடப்பது போல. எந்த நேரம் சரிந்து விழுவோம் என்று தெரியாது. ஒரு நண்பர் மூலம்  ஞானப்பான'  என்பது ஒரு   மலையான நாடோடிப்பாடல்  சந்தம். நமது காவடிச் சிந்து போல் ஒரு இசை மெட்டு. அதில் எளிமையான  அன்றாட கடைத்தெரு மலையாளத்தில்  எல்லோருக்கும் எளிதில் புரியும் வகையில் இயற்றப்பட்ட வெகு உன்னத நீதி நூல் என்று எழுதியிருந்தார். அவருக்கு நன்றி சொன்னேன்.

இன்டர்நெட் சில சமயங்களில் அல்ல  பல சமயங்களில் தவறான செயதிகளை, தாங்கி வருவதற்கு இதுவும் ஒரு உதாரணம்.   ஒருவர்  ஞானப் பான வில் வருவது ஒரு மண் பாண்டத்தை குறிக்கும் என்று பானையை சுட்டிக் காட்டி இருந்ததை நான் நம்பிவிட்டேன். இன்டர்நெட்டை மஹா வாக்யமாக நம்புவோர்  ஏமாற்றத்துக்கு துணிந்து இருக்கவேண்டும்.

வடையை எண்ண சொன்னால் துளையை எண்ணவேண்டாம்.  இனி ஞானப் பானாவில் வரும் உயர்ந்த கருத்துகளை மட்டும் அறிவோம்.
பூந்தானம் தொடர்வார்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...