Tuesday, October 23, 2018

SITHTHARGAL



சித்தர்கள்                 J.K. SIVAN 
சிவவாக்கியர் 
                                                     
                 
சிந்திக்க ஒரு  சித்தர் தமிழ்  

சிவ  வாக்கியர்  ஒரு அலாதி சித்த புருஷர். அவரது தமிழும் பாக்களின் சாந்தமும் செவிக்கு மட்டுமல்ல  உச்சரிக்கும் நாவுக்கும் சுகமானவை. ஒரு ரயில் கீழே ஆறு வேகமாக ஓட அதன் மேலே பாலத்தில் செல்வது போல ஒரு சீரான சப்தம் தருபவை. அது மட்டுமா  அவரது பாக்களில் உள்ளர்த்தம் ஆழமாக  ஆணித்தரமாக  மனதில் இறங்கும் அரிய  நீதிகளை கொண்டவை. DOWN  TO  EARTH  என்போமே  அப்படி அன்றாட வாழ்க்கையில் மறக்கக்கூடாத , மறக்கமுடியாத உண்மைகளை கொண்டவை. சிலவரை தருகிறேன்.

வீடெடுத்து வேள்வி செய்து மெய்யினோடுபொய்யுமாய்
மாடு மக்கள் பெண்டீர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில்
ஓடு பெற்ற அவ்விளை பெறாது காண் இவ்வுடலமே.

தேடி அலைந்து நிலம் வாங்கி, பெரிய மனை கட்டி, நிஜமென நம்பி பொய் (அநித்திய)  வாழ்க்கை வாழும் மனிதர்களே, எது உனது வீடு? யார் உன் சுற்றம்? பல காலம் வாழ்வோம் என்று கனவு கண்டாயே, அது மாயை, கானல் நீர் என்று தெரியாமலேயே இருந்து விட்டாயே, அங்கே பார், எருமைக்கடா மேல் கையில் கயிற்றோடு இருப்பவன் கையில் ஒரு ஓலை, அதில் உன் பெயர் இருப்பதை கண்டாயா, இன்று கையில் எடுத்து விட்டான் அந்த ஓலையை அவன், அதில் உன்  அட்ரஸ் படிக்கிறான். இதோ வந்துவிடுவான்.  அப்புறம் உன் வீடு, வாசல், சொத்து, சுகம், சுற்றம் எங்கே??  உன் உடல் பிச்சைக்காரன் காய் திருவோட்டுக்கு உண்டான மதிப்பு கூட இல்லாமல் போய்விடுமே.


எங்கள்தேவர் உங்கள்தேவர் என்றிரண்டு தேவரோ
இங்குமங்கு மாய் இரண்டு தேவரே இருப்பரோ
அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரஞ் சொன்னபேர்கள் வாய்புழுத்து மாள்வரே.

என்னய்யா அங்கே சத்தம். யார் அது உன் கடவுள் என் கடவுள் என்று கத்துவது பிரித்து பேசுவது. ஆதி முதல்வன் அவன் ஒருவனே  அவனை பல பெயர்களில் வழிபடுகிறோம் என்று கூடவா தெரியாது . சிவ வாக்கியருக்கு கோபம் பொங்கிவருகிறதே. அப்படி ஒப்புக்கொள்ளாமல் பிரித்து பேசுவோர் நாக்கழுகி மாள்வார்கள் என்று சாபமிடுகிறார்.

மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நண்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே.

முன் காலத்தில் மண் சட்டி பாத்திரங்கள்  தான் உபயோகித்தார்கள்.   உடைந்தால் அதன்  சில்லுகளை  எடுத்து பொறுக்கி வைத்துக்கொள்வார்கள்.  வெண்கலப்பாலத்திரம் நசுங்கி ஓட்டையானாலும்  அது எதறகாக பயன்படும் என்று வெளியே  தூக்கி போடுவதில்லை.   பழைய  பாத்திரக்காரன்  பத்து ரூபாய்க்காகவாவது கேட்பானே. இந்த வாசனை திரவியங்கள் என்னை தைலங்கள் தேய்த்து வளர்த்த உடம்பு விழுந்துவிட்டால், உயிர் போனால்,  என்ன உபயோகம்?  ஒரு பைசா ?  சீ  இது நாற்றமெடுக்க ஆரம்பித்துவிடும் என்று அவசர அவசரமாக அதை ஒழித்து விடுகிறார்களே. இந்த எட்டு சாண்  உடம்பையா  சாஸ்வதமாக  இருக்கும் என்று நம்ப வைத்தாய். என்ன மாயமடா செயகிறாய் நீ என் ஈசனே.  வியக்கிறார் சிவவாக்கியர். நம்மையும் சிந்திக்க வைக்கிறார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...