Thursday, October 25, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்    J.K. SIVAN 
மஹா பாரதம் 

       

   ' மகரிஷி  லோமசர் வந்தார்'' 

ஒன்று நிச்சயம்.  இந்த உலகத்தில்  நாம்  செய்கிற  காரியங்களை  எல்லாம்  நாம்  தான் யோசித்து முடிவெடுத்து அதை வெற்றிகரமாகவோ, படுதோல்வியாக   ஏதோ பத்துக்கு அஞ்சாவது திருப்தியாகவோ  நடத்துகிறோம் என்று நினைக்கிறோம்.  அது மகா பெரியக தப்பு.  நமது  திட்டங்கள்,  எண்ணங்களுக்கு,  எதிர்பார்ப்புகளுக்கு மேலாக ஏதோ ஒரு சக்தி நமது காரியங்கள் எவ்வாறு நடைபெற வேண்டுமோ அவ்வாறே அதை நிகழ வைக்கிறது. 

யுதிஷ்டிரன்  தீர்த்த யாத்திரை மேற்கொள்ள தௌம்ய ரிஷியோடு பேசிக்கொண்டிருந்தான். அவன் எண்ணம்  அடடா நம் அருமை சகோதரன் அர்ஜுனன் எங்கெல்லாம் தீர்த்த யாத்ரை  சென்றானோ என்னவெல்லாம் சாதித்தானோ , நமக்காக  எங்கெல்லாம் ஆயுதங்கள் பெற முயற்சித்து வெற்றி பெற்றானோ, ஒன்றும் தெரியவில்லையே என்று எண்ணிக்கொண்டிருந்த போது தான் அவனெதிரில் வந்து நின்றார் ஒரு ரிஷி.

 ''மகரிஷி  யார் அந்த ரிஷி?''  என்று கேட்டான் ஜனமேஜயன்.

'' ஜனமேஜயா, அப்போது அங்கே யுதிஷ்டிரன் எதிரில் வந்தவர்  லோமச ரிஷி'' ' என்றார் வைசம்பாயன ரிஷி.
'' இந்த வனவாச காலத்திலும் எங்களை ரட்சிக்க வந்த மகரிஷி. நமஸ்காரங்கள்'' என்று யுதிஷ்டிரன் முதலானோர் அவரை வணங்கி உபசரித்தனர்.

'நான் க்ஷேத்ராடனம் செய்து ஒரு முறை இந்திர லோகம் சென்றேன். அங்கு தான் உன் அருமை சகோதரன் அர்ஜுனனைப் பார்த்தேன். அவன் இந்திரனுக்கு சமமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். என் ஆச்சர்யத்தை என்ன சொல்வேன். அப்போது தான் இந்திரன் என்னிடம் ''நீங்கள் யுதிஷ்டிரனை சந்திக்கவேண்டும்'' என்று சொன்னான்.  ஆகவே தான் உன்னை சந்திக்க வந்தேன்.  கேள் :

க்ஷீர சாகரத்தில் அம்ருதத்திற்குப் பிறகு கிடைத்த பிரம்மாஸ்த்ரம் சிவனை அடைந்தது. அதை மந்திரங்களோடு சிவன் அர்ஜுனனுக்கு அளித்திருக்கிறார் . பசுபதியின் அந்த அஸ்தரம் தான் 'பாசுபத அஸ்தரம்'. அர்ஜுனனின் சக்தி பலமடங்கு இப்போது அதிகரித்திருக்கிறது. இந்திரன், யமன், வருணன், குபேரன் ஆகியோரும் அவனுக்கு ஆசியோடு  பல ஆயுதங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தேவலோக நாட்ய சாஸ்திரமும் அவனுக்கு இப்போது அளிக்கப் பட்டிருக்கிறது. சங்கீத ஸாஸ்த்ரமும் இப்போது அவனுக்கு அத்துபடி. இந்திரன் சொன்னபடி, அர்ஜுனன் வெகு விரைவில் உங்களை அடைவான். இனி அவன் பீஷ்மன், துரோணர், அஸ்வத்தாமா, கர்ணன் ஆகியோரை  எளிதில் வெல்வான்.''

 ''மகரிஷி, அர்ஜுனனைப் பற்றிய விஷயம் மிகுந்த உங்கள்  மூலம் அறிந்தபோது 
 சந்தோஷத்தையும் பெருமையும் அளிக்கிறது. எல்லாம் ரிஷிகளின் ஆசி. உங்களோடு என்னால் இயன்ற தீர்த்த யாத்திரை செல்கிறேன். தௌம்யரிடம் இது பற்றி தான் பேசிக்கொண்டிருந்தேன்.

 
மூன்று இரவுகள் லோமசர் பாண்டவர்களோடு காம்யக வனத்தில் தங்கி மறுநாள் யுதிஷ்டிரன் சகோதரர்களோடும், தௌம்யர், லோமச முனிவரோடும் தீர்த்த யாத்ரை துவங்கினான்.

அவர்கள் புறப்படும் சமயம் வேதவியாசர் நாரதரோடு காம்யக வனத்துக்கு வந்து யுதிஷ்டிரனை சந்தித்தார்.

'ரிஷி ஸ்ரேஷ்டர்களே, தங்கள் வரவு நல்வரவாகுக. தங்கள் ஆசிகளோடு நாங்கள் சிறிது காலம் க்ஷேத்திராடனம் செய்ய புறப்பட்டோம். லோமச ரிஷி எங்களை வழி நடத்திச் செல்கிறார். அதுவே எங்கள் பாக்கியம்.''

''யுதிஷ்டிரா, நீங்கள் அனைவரும் மனத்தூய்மையோடு தீர்த்த யாத்ரை செல்லுங்கள். கவலை வேண்டாம்'' என்றார் நாரதர்.

"ஆம் முனிவரே, என்னால் தான்  என் சகோதரர்களுக்கும் மனைவிக்கும் மக்களுக்கும் எல்லா கஷ்டங்களும் 
நேர்ந்தது. எங்களுக்கு   தீங்கு செய்தவர்கள் சுகமாக அனுபவிக்கிறார்களே'' என்ற எண்ணம் என் மனதை வாட்டியது வாஸ்தவம்' என்றான் யுதிஷ்டிரன்.

'யுதிஷ்டிரா, பாபம் செய்தவன் சுபிக்ஷமாக இருப்பது போல் தோன்றுவது உண்மையல்ல. அவனுக்கு வட்டியும் முதலுமாக பாபவினை காத்திருக்கிரது என்று புரிந்து கொள். அழிவு நிச்சயம். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. தேவாசுர நிகழ்ச்சிகளை நான் அறிவேன்''. என்றார் நாரதர்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...