Sunday, October 21, 2018

KANNINUTSIRUTHAMBU

அமுதன் இந்த ஆழ்வார்கள்  J.K. SIVAN 
கண்ணினுட் சிறு தாம்பு - 2

             குருவின் பெருமை 

மதுர  கவி  ஆழ்வார்  என்ற பெயர்  சும்மாவா கிடைக்கும். அவரது பாசுரங்கள்  அற்புதமாக அமுதைப் பொழிகிறதே:  ''தேவு மற்றொன்றறியேன்''  என்று  தனது குரு நம்மாழவாரையே  தெய்வமாக கொண்டு சேவித்தவர், சேவை புரிந்தவரல்லவா?  இன்று  இன்னும் மூன்று பாசுரங்களை - கண்ணினுட் சிறு தாம்பாக  கண்டு ரசிப்போம். வியப்போம். 

''திரி தந்தாகிலும் தேவ பிரானுடை
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன்பெற்ற நன்மையே  (3)

''என் தெய்வமாகிய குருகூர் நம்பியை விட்டகன்று போவது முடியாத காரியம்.அந்த கார்மேனி கண்ணனைப் போல் நானும் கட்டுண்டேனே . கண்ணன் என்றால் எனக்கு என் குருநாதன் குருகூர் நம்பியே. எனக்கு நம்பியே எம்பிரான், தெய்வம் என நம்பிக்கையோடு அவருக்கே ஆளானேன் என அறிந்து, அடடா, நான் துய்க்கும் இன்பத்திற்கும் நன்மைக்கும் ஈடுண்டோ, சொல்ல வார்த்தையுண்டோ?

என்கிறார்  மதுரகவி ஆழ்வார்

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாக கருதுவர் ஆதலின்
அம்மையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே (4)

''யஜுர், ரிக், அதர்வ,  வேதங்களை நன்றாக கற்று, இந்த நான்கு வேதங்களையும் தலை கீழாய் கேட்டாலும் சொல்லும் கற்றறிந்த வேத விற்பன்னர்கள் என்னை பார்த்தாலே ஏதோ ஒரு புல்லைப் பார்ப்பது போல் பார்த்து வெறுப்பார்கள். இருக்கட்டுமே !  அவர்களுக்கு  நான் பொருட்டு அல்ல, லக்ஷியம் பண்ணக்கூடிய அளவு மதிப்பில்லை.  அதுவும் ஒருவிதத்தில் நன்மையே தான். யாருமில்லை என்பதால் என் தெய்வம் குருகூர் சடகோபனையே ''அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே'' என்று அடைக்கலம் புகுவேனே..என் அதிர்ஷ்டத்துக்கு அதுவல்லவோ ஒரு காரணம் .  எவ்வளவு  பவ்யமாக  தனது குருபக்தியை அசையாத நம்பிக்கையை மதுரகவி ஆழ்வார் வெளிப்படுத்துகிறார்.

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மட வாரையும் முன்னெலாம்
செம்பொன் மாடத் திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே (5)

''நான் எப்படி இருந்தேன் முன்பெல்லாம் என்று நினைத்துப் பார்க்கிறேன். யாரிடம் என்ன பொருள் இருந்தாலும்,  ''ஆஹா அது எனக்கும் வேண்டுமே''  என்று அலைந்தேன் அது அவசியம் என்று நம்பினேன். பெண்களைப் போல் உலகில் மற்றவர் எவரும் அல்லர் என்று நம்பி அவர்கள் பின்னால் எவ்வளவு அலைந்திருப்பேன். என் குருநாதன்  குருகூர் நம்பி அல்லவோ எனை நட்டாற்றில் விழுந்தவனைக்  கை தூக்கிக் காத்தவன்.   என் நம்பியாகிய, நம்பிக்கையாகிய,  பொன் மாடக் கோவிலில் நான் ஆனந்தமாக இருக்கிறேன் இப்போது. ஆழ்வார் தனது சுகத்தை இந்த பாசுரத்தில் அறிவிக்கிறார்.   தொடர்வார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...