Saturday, October 13, 2018

ORU ARPUDHA GNANI





ஒரு அற்புத ஞானி
சேஷாத்திரி ஸ்வாமிகள்                       
J.K. SIVAN

                                      உன் வீட்டிலேயே திருடன்...

ஞானிகளுக்கு மற்றவர் மனதை, அதில் புதைந்து கிடைக்கும் விஷயங்கள் பளிச்சென்று தெரிந்துவிடும். சேஷாத்திரி ஸ்வாமிகளின் வாழ்க்கையில் இதற்கு நிறைய நிரூபணங்கள் உண்டு. இன்று ஒரு சம்பவம் சொல்கிறேன். நமக்கு மட்டும் அல்ல, சம்பந்தப் பட்டவர்களுக்கு அதி ஆச்சர்யத்தை உண்டு பண்ணிய சமாச்சாரங்கள்.
சீலைப் பந்தல் கிராமம் டி .எஸ். ஜெகதீசய்யர் வீட்டில் ஒரு தீக்ஷிதர் தினமும் பூஜை செய்வார். அவரிடம் எல்லோருக்கும் நல்ல மதிப்பு மரியாதை விஸ்வாசம். ஆனால் ஏனோ தீக்ஷிதருக்கு பூர்வ ஜென்ம வாசனையால் கொஞ்சம் கை நீளம். ஜெகதீசய்யர் வீட்டில் திருடி விட்டார்.
ரெண்டு தடவை நூறு ரூபாய் நோட்டு ஒன்றையும், அய்யர் மனைவியின் எட்டு சவரன் அட்டிகை ஒன்றும் அபேஸ் செய்து விட்டார். அந்த ஊர் கிராம தேவதை கோவில் கொஞ்சம் தூரத்தில் ஒதுக்குப் புறத்தில் இருந்தது. அந்த விக்ரஹத்தின் பின்னால் மண்ணில் குழி தோண்டி புதைத்து விட்டார். காணாமல் போன ரூபாயை, அட்டிகையை மூன்று மாத காலம் தேடினார் அய்யர். கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் அவரை வாட்டியது. ஆனால் தினமும் தீக்ஷிதர் சாதுவாக வருவார் போவார். யாருமே அவரை சந்தேகிக்க வில்லை. சரி இனிமேல் கிடைக்கப் போவதில்லை என்று மனத்தை தேற்றிக் கொண்டு அய்யர் தம்பதிகள் தமது பெருத்த நஷ்டத்தை மறந்து விட்டனர்.
ஜெகதீசய்யர் திருவண்ணாமலை சந்நிதித் தெருவில் வசித்தவர். அடிக்கடி பக்கத்து ஊரான சீலைப் பந்தல் கிராமம் செல்வார். நடந்து அல்ல. அவரது குதிரை வண்டியில்.
ஒருநாள் அய்யரின் குதிரை வண்டி சீலைப் பந்தல் சென்று கொண்டிருக்கும்போது வழியில் சேஷாத்திரி ஸ்வாமிகள் தென்பட்டார்.
''நிறுத்து உன் குதிரை வண்டிலே ஏறிக்கப் போறேன்'' ஜெகதீசய்யருக்கு பரம சந்தோஷம்.
''சுவாமி இது தங்கள் குதிரை வண்டி '' என்கிறார் அய்யர். வண்டி நின்றது.அவர் பதிலுக்கு காத்திராமல் ஸ்வாமிகள் தாவி ஏறி குதிரை வண்டிக்குள் அமர்ந்தார். வழியில் ஸ்வாமிகளிடம் அய்யர் தனது பெரிய நஷ்டத்தை பற்றி சொல்லிக் கொண்டே வந்தார். ஸ்வாமிகள் ஒன்றுமே பேசவில்லை. ஆறு மைல் கடந்து குதிரை வண்டி சீலைப் பந்தல் கிராமத்தில் நுழைந்தது. .''
''நான் அதுக்கு தான் இங்கே வந்தேன். இப்போ உன் நகை கிடைச்சாச்சு'. உன் வீட்டிலேயே திருடனும் இருக்கான். ஊர்லே நாயும் இருக்கு. நான் போறேன்''.
திடீரென்று வண்டியை விட்டு ஸ்வாமிகள் குதித்து இறங்கி திருவண்ணாமலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அய்யர் எவ்வளவோ சொல்லியும் ஆகாரமோ பாலோ பழமோ கூட ஸ்வாமிகள் அந்த கிராமத்தில் உட்கொள்ளவில்லை.
''சுவாமி இருங்கோ, நான் வண்டியிலேயே உங்களை கொண்டுவிடறேன்'' சுவாமி காதில் வாங்கி கொள்ளாமல் ஓட்டமும் நடையுமாக திருவண்ணாமலை நோக்கி 6 மைல் தூரம் நடந்தார்.
சற்று நேரத்திற்கெல்லாம். சீலைப் பந்தல் நாட்டாமை வந்து ''அய்யரே உங்க வீட்லே பூஜெ பண்றவர் அடிக்கடி கிராம தேவதை கோவில் கிட்ட நேரம் கெட்ட நேரம் போறார். சாமிக்கு பின்னாலே ஏதோ பண்றாறுன்னு ஊருலே கசமுசா. ஏதோ சந்தேகமா இருக்குன்னு கிராமத்தில் எல்லோரும் பேசிக்கிறாங்க. உடனே கூப்பிட்டு விசாரிங்க'' என்று சொன்னார்.
அய்யர் தீக்ஷிதரைக் கூப்பிட்டார். தீக்ஷிதர் ஒன்றும் அறியாதவர் போல் நடித்தார். திரும்ப திரும்ப பலபேர் சேர்ந்து கேள்வி கேட்டு குடைந்ததில் உண்மை வெளி வந்துவிட்டது. கோபம் வந்து ஊர் கிராம தேவதையை சபித்தார்.
ஊர் ஜனங்கள் கூடி விட்டனர். சிலர் கையில் கட்டை, கத்தி போல சில ஆயுதங்களை வேறு வைத்திருந்த தால் தீக்ஷிதர் அரண்டு விட்டார். உண்மையை ஒப்புக் கொண்டார். அவரே அய்யரை அழைத்துப் போய் நகை பணம் எல்லாம் எங்கே ஒளித்து வைத்தாரோ அதை வெளியே எடுத்து கொடுத்தார். நூறு ரூபாய், சில நாணயங்கள், அட்டிகை எல்லாமே கிடைத்துவிட்டது.
அய்யருக்கு ஸ்வாமிகள் சொன்னது கவனம் வந்தது. ''உன் வீட்டிலேயே திருடனும் இருக்கான் (அவர் வீட்டில் தினமும் மரியாதையோடு வந்து பூஜை செய்யும் தீக்ஷிதர்) . ஊர்லே நாயும் (போலீஸ்) இருக்கு''
ஜெகதீசய்யர் கண்களில் ஆனந்தக் கண்ணீரா, நன்றிக் கண்ணீரா?? (இந்த ஒரு சம்பவம் தான் சேஷாத்திரி ஸ்வாமிகளை அவர் வாழ்ந்த 40 வருஷங்களில் அவரை திருவண்ணாமலையை விட்டு ஓரு சில மணி நேரம் வேறு ஒரு ஊர் செல்ல வைத்தது)

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...