Thursday, October 11, 2018

GARUDAPURANAM



கருட புராணம்       J.K. SIVAN 



         
    மரணத்துக்கு பின்னால்......

இது ஒரு சாம்பிள்  சர்வே.

ஒருவன் நமக்கு   அடிக்கடி தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தால் அவனை தூக்கமின்றி செய்ய நீங்கள் செய்யவேண்டியது இந்த கருட புராண  கட்டுரையை அவனுக்கு உடனே ஒரு தடவைக்கு ரெண்டு தடவையாக  அனுப்புவது ஒன்றே.

கருட புராணம் படிக்கக்  கூடாதாமே  என்று சிலர் என்னை கேட்டிருக்கிறார்கள்.  படிக்காத காரணம் அதில் பயங்கரமாக சொல்லப்பட்டிருக்கும் தண்டனை   விபரங்கள் தான்.  நமக்கு மரணத்தைப் பற்றி படிக்கவோ கேட்கவோ, நினைக்கவோ பிடிக்கவில்லை.  அதைவிட  நாம் செய்த பாவங்களுக்கு கூலி சமாச்சாரம்  நம் நிம்மதியை குலைத்துவிடும்.  

 நாம் எவருமே தப்புகள்  பண்ணாதவர்களா?    தெரிந்தோ தெரியாமலேயோ சில தப்புகள் தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக வருந்தியும் இருக்கலாம்.  ஆனால்  செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை என்ற ஜாபிதாவை கருட புராணம் சொல்கிறதை படிக்கும்போது தான் அடாடா இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று யோசிக்க வைக்கும்.

இப்போதைக்கு கொஞ்சம் சொல்கிறேன்.... அப்புறம் நிறைய பயமுறுத்துகிறேன்.

நமக்கு நரகம் என்றால் எப்படி இருக்கும் என்று ஒருவாறு தெரியும்.    நாம்  சென்னையில்  சில நேரங்களில் சொட்டு கூட   தண்ணீர் இல்லாமல்,  வேறு சமயத்தில் அதிக தண்ணீர் எங்கும்  எல்லாமும்  மூழ்க வைக்கும்போது,  கடும் வெயில்,  கடும் குளிர்,  ஜன நெரிசல், நடக்க இடமில்லாமல் தெருவில் வண்டிகளின் சக்கரத்தில் மாட்டிக்   கொள்ளும்போது.  வண்டி அதிக வாடகை கேட்டு, இடுப்பு வேஷ்டியை  அவிழ்த்து  விற்றுக் கொடுக்கும்படியாக  துன்புறுத்துவதை அனுபவிப்பவர்கள்.   ஆகவே  மற்ற நரகங்களை பற்றி கொஞ்சம் தைரியமாக  அறிந்து கொள்ளலாம்.   

1.  தாமிஸிர நரகம்  -  இது யாருக்காக காத்திருக்கிறது என்றால்  பிறருக்குச் சொந்தமான மற்றவர் பொருளை, உடைமையை, உடையவர்களை  விரும்புபவன்,  ராவணன் மாதிரி அபகரிபவன்,  பிறரது குழந்தையை  அபேஸ் பண்ணுகிறவன்,  பிறரது பொருளை ஏமாற்றி உடைமையாக்கிக் கொள்பவன் . நிறைய பேர் அரசாங்க அதிகாரிகள் உதவியோடு  முத்திரையோடு கூட இதை சுத்தமாக  செயகிறார்களே, அவர்களுக்கு  மேலே போனபின் என்ன வரவேற்பு தெரியுமா?

குண்டு குண்டாக நிறைய கோரைப் பற்களுடன், தலையில் கொம்புகளுடன் , பெரிய வளைந்த  மீசைகளோடு,  எமகிங்கரர்கள் ''வாங்கோ சார்  என்று   வரவேற்பார்கள்.     கை கூப்பி அல்ல.  கைகளில்  முள்ளாலான கட்டைகளாலும் கதாயுதங்களும் இருக்கும்.  அதால்  நையப் புடைப்பார்கள்.  டாக்டர் எழுதிக் கொடுப்பாரே    இதை  மூன்று வேளை  சாப்பாட்டுக்கு முன்  பின் என்று அதுபோல் வேளா வேளைக்கு இந்த  முள்  தடியாராதனை நடக்கும். எவ்வளவு காலத்துக்கு என்று கேட்கவேண்டாம். எனக்குத் தெரியாது.   

2. அநித்தாமிஸ்ர நரகம்  -  இது வேறே  டிபார்ட்மென்ட் .   எது சம்பந்தமானது என்றால்  கணவனும் மனைவியும் சேர்ந்து வாழாமல் ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல், கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் நடக்கிறது அவர்களுக்கு .

 அங்கே  ஒரே இருட்டு. பகல் என்றால் என்ன வென்றே தெரியாது.    தட்டு தடுமாறி  கீழே  விழுந்து எழுந்து, கண்கள் தெரியாத நிலையில் இருளில்  அலையவேண்டும்.   மூர்ச்சையாகி  கீழே  விழுந்து தவிக்க வைப்பார்கள்.  யாரும் தூக்கி விடப்  போவதில்லை . ஒருவர் மீது ஒருவர் மோதி  தானாகவே மிதி பட்டு,  காயப்பட்டு, ரத்தம் சொட்ட,  சமாளித்து எழுந்திருக்க வேண்டும்.   இதற்கும்  எவ்வளவு காலம் இப்படி சூரிய ஒளி இல்லாமல் என்று தெரியாது.

3.  ரௌரவ நரகம்  -  இதை  யாருக்காக  பிரத்யேகமாக  வைத்திருக்கிறான் எம தர்மராஜன் என்றால் , யார்  பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுக்கிறானோ,  பிரிக்கிறானோ, அழிக்கிறானோ,  அவர்களின் பொருள்களைப் அபகரிக்கிறானோ,  அவன் இங்கே சந்தோஷமாக  தான் செய்த காரியத்தால்  பண பலத்தால்   குளிர் சாதன அறையில்  படுத்துக்கொண்டிருந்தாலும்,  இதையெல்லாம் விட்டு ஒருநாள் மேலே  அழைத்துச் செல்லப்படும்போது  அங்கே அவனுக்கு கொடுக்கும் டிரீட்மென்ட்  என்ன தெரியுமா?

மேலே சொன்ன எமகிங்கரர்கள் அவனை  கூரான தடிமனான  சூலத்தால்   வடையை  fork ல் குத்தி சாப்பிடுவதை போல்,   அவன் உடம்பில்  குத்தித்  துன்புறுத்துவார்கள். துடிக்க துடிக்க  அவன் உடம்பு முழுதும்  துளைகளாகி விடும். அப்போதும் விடமாட்டார்களோ என்னவோ எனக்கு என்ன தெரியும். நான் இந்த குற்றம் செய்யவில்லை.

சுருக்கமாக சொன்னால்  நமது இகலோக வாழ்க்கைக்கு பிறகு ஒட்டு மொத்தமாக  நாம்  மீண்டும்  ''அங்கே''  தான்  சந்திப்போம் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...