Wednesday, October 31, 2018

ORU ARPUDHA GNANI



ஒரு  அற்புத ஞானி   J.K. SIVAN 

ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் 

        ''சீக்கிரமே  ஸ்வாஹா ஆயிடுமே!''   

நம்மிடம்  ஒரு  ஆச்சர்யமான குணம்.  பலபேரிடம் இருப்பது தான்.   நமக்கு ஏதாவது எதிராளி சொல்வது புரியவில்லை என்றால்  ''ஏதோ உளறுகிறார்,  பேத்தல்''  என்று அதற்கு  உடனேயே அந்த கணத்திலேயே  ஒரு சர்டிபிகேட் கொடுப்பது.   நம் அளவிலேயே  இப்படி ஒரு நிலை என்றால் மஹா புருஷர்கள்  ப்ரம்ம ஞானிகள் சுருக்கமாக ஏதாவது சொன்னால் புரியவா போகிறது. பலபேர்  இப்படித்தான்   சேஷாத்திரி ஸ்வாமிகள் பேசுவதை புரிந்து கொண்டார்கள்.

இன்று சேஷாத்திரி ஸ்வாமிகள் அனுபவங்களை பற்றி எழுதும்போது முதலில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் தான் சொல்ல வேண்டும் என்று எனக்கு  விதித்திருக்கிறதோ என்னவோ? அதிலேயே ஆரம்பிக்கிறேன்.

அப்பாவு செட்டியார் புதுப்பாளையைத்தைச்சேர்ந்தவர்.  அவருக்கு வெகுநாளாக ஒரு  கனவு.  எப்படியாவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரருக்கு ஒரு தேர்  செய்து சமர்ப்பிக்கவேண்டும் என்று. எப்படியோ ஒரு தேர் கட்டுவதற்கு தீர்மானித்து  கட்டி முடித்தாகிவிட்டதே.  வெள்ளோட்டம் விட்டு பார்க்கவேண்டாமா?  செட்டியார் சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர்.   ஆகவே  திருவண்ணாமலை சென்றார்.  சேஷாத்திரி  ஸ்வாமிகளை  எங்கோ தேடித் பிடித்து அவரிடம் தான் தயார் செய்துவைத்த தேர் பற்றி சொல்லவேண்டும். அவரது ஆசியைப்  பெற வேண்டும் என்று  நண்பர்களோடு சென்றவர்   ஸ்வாமிகளை  கண்டுபிடித்து வணங்கினார். 

''ஸ்வாமிகள்  ஒரு நல்ல நாள் பார்த்து என்று புதிதாக கட்டிய  தேரை வெள்ளோட்டம் விடலாம் என்று அருள் புரியவேண்டும்''  என்று  கேட்க எண்ணம்.  ஆனால் எப்படிக் கேட்பது ஸ்வாமிகளை என்று பயம்.  வார்த்தை வெளியே வரவில்லை. 

 செட்டியார்  விஷயம் சொல்லும் முன்பாகவே  ஸ்வாமிகள் அவரிடம் என்னவோ தானாகவே சொல்ல ஆரம்பித்தார்.  ''அடே ,துக்கிரி  அல்பாயுசு. சீக்கிரமே ஸ்வாஹா  ஆயுடுமே என்ன பண்ணுவே?'' லட்சுமி சாபம்டா. லட்சுமி சாபம்.''     ஸ்வாமிகள் என்ன சொல்கிறார், என்ன இது, ஏதோ சாபம் கீபம் என்கிறார். எதற்கு  ஏன்?  ஒன்றும் புரியாமல் செட்டியார் சிலை போல் நிற்க  ஸ்வாமிகள் வழக்கம்போல  அங்கிருந்து  பறந்துவிட்டார். 

செட்டியாருக்கு இடி விழுந்தால் போல் ஆகிவிட்டது.   தான்  புதுத்  தேர் கட்டினது பற்றியோ, வெள்ளோட்டம் என்று விடலாம் என்று நாள் குறித்து தரவோ இன்னும் ஒன்றுமே  சொல்ல வில்லையே.  ஏதோ  லட்சுமி சாபம் என்று என்னவோ சொல்லிவிட்டு போய்விட்டார்... என்ன செய்வது.  மேற்கொண்டு ஒரு  வேலையும் செய்ய வழியில்லையே,  ஆரம்பமே இப்படியா?  

செட்டியார் உடைந்து போனார்.   தேர் எங்கு கட்டி நின்றதோ அங்கேயே  இருக்க,  மூன்று வருஷங்களுக்கு பிறகு ஒருநாள் பலத்த மழை, இடி,   மின்னல் தாக்கியது.  வானம் பொத்தலாகி விட்டது..  அன்றிரவு  கட்டிய புது தேர் மின்னல் தாக்கி பற்றி எரிந்துவிட்டது. வெறும்  கரியும் சாம்பலும்  தான் கிடந்தது அந்த இடத்தில்.

மறுநாள் காலை எல்லோரும் வருத்தத்தோடு செட்டியாருடன் அங்கே நிற்கும்போது  சொல்லி வைத்தாற்போல் அந்த இடத்தில் ஸ்வாமிகள் வந்து விட்டார். 

அவரது பக்தர்களில் ஒருவரான  சுப்புலக்ஷ்மி அம்மாள் மற்றும்  சில பெண்களைக்  கை தட்டி அழைத்து  ''பார்  எரியறது .தேர். லட்சுமி சாபம்'' என்று சொன்னார். என்ன விவரம், என்ன லட்சுமி சாபம் என்பது இன்றுவரை எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அனால் ஸ்வாமிகள் சொன்னது போல் ''சீக்கிரமே  ஸ்வாஹா  ஆகிவிட்டதே.  அக்னியில் ஹோமத்தில் எதை போட்டாலும் ஸ்வாஹா  என்று தானே சொல்கிறோம்.  தேர் அக்னியில் சாம்பலாக போவது எப்படி தேரைப் பற்றி சொல்வதற்கு முன்னாலேயே  ஸ்வாமிகளுக்கு தெரிய வந்தது?''
இவரை அற்புத ஞானி என்று சொல்லாமல் வேறு எந்தப் பெயரில் வணங்க முடியும்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...