Tuesday, October 16, 2018

PESUM DEIVAM



பேசும் தெய்வம் J.K. SIVAN

விரல் காயமும் விபீஷண சரணாகதியும்

பஞ்சாக்ஷரம் அஹிம்சை பற்றி யாரோ எழுதியதை படித்துக்கொண்டிருந்தான். கிராமம் என்பதால் நிறைய மரம் செடி கொடிகள். எங்கும் தண்ணீர் சின்ன சின்னதாக தேங்கி இருந்தது. கொஞ்சநாளாக மேற்கத்தி மலைகள் மழையை ஆறுகளில் நிரப்பி, அந்த ஊரிலும் கொஞ்சம் மழை.

வீட்டின் திண்ணையில் சுவற்றில் சாய்ந்துகொண்டு காலை நீட்டி உட்கார்ந்தவன் இடது கையில் ஒரு பெரிய கொசு. சும்மா உட்காராமல் கூரிய ஊசியை அவன் கையில் ட்ரில் drill பண்ணி இறக்கி ரத்தம் எடுத்தது. பரிசோதனைக்கு அல்ல. பலகாரமாக சாப்பிட. சுரீர் என்ற அதன் ஊசி குத்தியதால் கொசுவின் மேல் அவன் கவனம் போகவே அஹிம்சை புத்தகத்தை இடதுகை அசையாமல் பிடித்துக்கொண்டு வலது கையால் பொடேர் என்று ஒரு பேய் அறை இடது முன்கையில் உட்கார்ந்து ரத்த ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த கொசுவின் மீது. ஸ்தலத்தில் கொசு மரணம். அவன் படித்த அஹிம்சை அங்கே உதவ வில்லை. கொசுவை விரட்டுவதை விட கொல்வதற்கு பஞ்சாக்ஷரத்தின் அஹிம்சை
தயங்கவில்லை.

ஒரு சம்பவ ஞாபகம் வருகிறது. மஹா பெரியவா நம்மைப்போல, பஞ்சாக்ஷரத்தை போல அல்ல. வித்யாசமான மஹான்.

ஒரு தட வை எங்கோ இடித்துக்கொண்டாரோ அல்லது நடக்கும்போது ஏதோ காலில் அடி பட்டதோ தெரியவில்லை.
பெரியவாளோட இடது கால் கட்டைவிரலில் ஒரு சின்னக் காயம். அது ஆறவில்லை. சற்று வீங்கி அதிலிருந்து ரத்தம் முத்து முத்தாக ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. கசிந்தது. ஒவ்வொரு சொட்டும் மாதுளம்பழ முத்து போல கருஞ்சிவப்பு கலர். வலி இருந்திருக்கும். ஆனால் மஹா பெரியவாளுக்கு காலைப் பற்றியோ, அதன் காயத்தைப் பற்றியோ, வலி பற்றியோ, அதில் ரத்தம் கசிவதோ ஸ்மரணையே இல்லை. வழக்கமாக செயல் பட்டுக்கொண்டிருந்தார். சுற்றி இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது பெரியவா கால் காயத்தை எதிரே இருந்த ஒருவர் கவனித்தார். ஒரு எறும்பு வந்தது. ரத்தத்தின் வாசனை அதன் சின்ன மூக்கில் சுகமாக வீச மெதுவாக பெரியவா கால் மீது ஏறி கட்டை விரல் நுனியில் இருந்த காயத்தின் மேல் சுகமாக அமர்ந்தது. எறும்புக்கு பரோபகார சிந்தனை. என்ன பாஷை பேசியதோ சில நிமிஷங்களில் ஒரு கூட்டமே சேர்ந்து விட்டது. தனது சொந்த பந்தங்களோடு கூட ஜமா சேர்த்துக் கொண்டு மஹா பெரியவாளுடைய பாத விரல் காயத்தில் ஊற்றெடுத்த ரத்த கசிவை ருசித்து அருந்தின.

''எதிரே இருந்தவர், இதை பார்த்தவர்க்கு நிம்மதி இல்லை. எப்படி மஹாபெரியவா ஏதோ முக்கியமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்டு " பெரியவா உங்க காலிலே எறும்புகள் விரல் மேல் உட்கார்ந்து ரத்தம் குடிக்கிறது. காலை உதறி தள்ளுங்கோ " என்று சொல்வது? மற்றவர்களும் கவனித்துவிட்டார்கள்.

ஒரு பக்தர் பெரியவாளிடம் நெருங்கியவர். அவர் துணிந்து மஹா பெரியவாளை நமஸ்காரம் பண்ணி கையால் பெரியவா காலை சுட்டிக் காட்டினார் . மெதுவாக குனிந்து "பெரியவாளோட இடது கால் கட்டை விரல் மேலே நிறைய எறும்பு மொய்க்கறதே?" என்று தயக்கத்தோடு சொன்னார்.

பெரியவாளின் பார்வை அப்போது தான் தனது கால் மேல் சென்றது. கருணை கொண்ட புன்னகை.

"உனக்கு ஞாபகம் இருக்கா? விபீஷணன் இலங்கையிலேருந்து வந்து தனுஷ்கோடி பக்கம் சமுத்ரகரையிலே ஸ்ரீ ராமனை சரணாகதி பண்ணினான்னு படிக்கறோம். ராமன் காலில் விழுந்து திருவடிகளை பிடிச்சிண்டானா? இல்லை. வாயாலே, கை கூப்பி மட்டும் சொன்னான்? காலில் விழலை , விழவேண்டும் என்று ராமன் எதிர்பார்க்கலை. ஆனாலும் அளவுகடந்த அன்போடு , இரக்கத்தோடு எதிரி முகாமிலிருந்து வந்த விபீஷணனுக்கு அடைக்கலம் குடுத்தான்.

" காலில் எறும்பு பத்தி சொன்னால் எதற்கு இந்த ராமாயண கதை?

பக்தர்களின் ஆச்சர்யத்து உடனே விளக்கம் வந்தது.

"இந்த எறும்புகளை பார்த்தீளா, என் காலையே கெட்டியா பிடிச்சிண்டிருக்கு! அதுகளுக்கு என் கால் மேலே அத்தனை நம்பிக்கை தனக்கு ஒண்ணும் ஆபத்து நேராதுன்னு சொல்றது. அதை உதாசீனப் படுத்தி எறும்புகளை உதறி தள்ளினா அப்புறம் என்ன கருணை, அன்பு ? ஞாயமா? சொல்லுங்கோ" -- சிரித்துக்கொண்டே கேட்கிறார்.

தேஹாத்ம புத்தியற்ற மாமுனிகள் பெரியவா. தேஹ ஸ்மரணை அற்றவர். என்னைப் பொருத்தவரை எத்தனையோ பாபங்களை செய்து எறும்பாக பிறந்த சில ஜன்மாக்கள் அவரது ரத்த பந்தம் ஏற்பட்டபின் மறு பிறவி எடுத்திருக்காது என்று தான் தோன்றுகிறது.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...