Thursday, May 17, 2018

SITHTHAR



சித்தர்கள்: - J.K. SIVAN பூண்டி சாமியார்.. சமீப காலத்தில் வாழ்ந்த ஒரு மஹா சித்த புருஷர் பூண்டி மஹான்,என்றும் பூண்டி ஸ்வாமிகள், பூண்டி சாமியார், என்றும் பல பக்தர்களால் வழிபடப்படுபவர். எங்கோ ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்தவர். அது தான் ஆஸ்ரமம்.00 பூண்டு மட்டும் தான் தெரியுமா,பூண்டி தெரியாதா ?சொல்கிறேன். திருவண்ணாமலை போகும் போளூர் ரோட்டில், போளூரிலிருந்து 9-10 கி.மீ தூரத்தில் இருக்கிறது பூண்டி. அவர் யார், என்ன ஊர், என்ன பேர், எப்போது பிறந்தார் ? அவருக்கே கூட தெரியாது போல் இருக்கிறது. கவலை வேண்டாம். சித்தர்கள் இப்படித்தான் இருப்பார்கள். ஏதோ பைத்தியம், சித்தம் கலங்கிய கேஸ் என்று நினைக்கும்படியாகி இருக்கும் அவர்கள் தோற்றம். ஷீர்டி சாய் பாபாவை, சேஷாத்திரி ஸ்வாமிகளையே அப்படி தானே எல்லோரும் எடை போட்டார்கள். பூண்டி மஹான் அமர்ந்த திண்ணையில் யாரோ நிறைய முருகன் படங்கள் வேல் எல்லாம் கொண்டு வைத்தார்கள். ஒரு கிண்ணத்தில் நிறைய விபூதி. யார் யாரோ வருவார்கள், ஒருவன் சிகரெட் கொளுத்தி வாயில் வைப்பான். இழுத்து புகை விடுவார். ஒருத்தன் மிட்டாயை வாயில் போடுவான். கடித்து தின்பார். ஒருவர் மோர், சோடா கொடுத்து வாயை துடைப்பார். குழந்தை எது கொடுத்தாலும் உண்ணும். வித்யாசமே தெரியாது. சுற்றிலும் பழங்கள், பூ, வெற்றிலை, மஞ்சள், துளசி, குடத்தில் நீர் பிஸ்கட் பொட்டலங்கள், மாலைகள், சிகரெட் பாக்கெட்கள் கூட. ஒரு ஆச்சர்யம்,எவ்வளவு நாள் ஆனாலும் பழங்கள் பூ கெடவில்லை. எறும்பு ஈ அண்டவில்லை. அவரது கடைசி மூன்று வருஷங்கள் தான் எவரையுமே தொட அனுமதித்தார். திண்ணையை அலம்பி சுத்தப்படுத்தினார்கள் குளிப்பாட்டி விட்டார்கள். யாரையும் எதுவும் கேட்கவில்லை. சுப்ரமணி என்று ஒரு அணுக்க தொண்டர் இந்த சேவைகளை பக்தனாக செய்தவர். வாயில் உணவை ஊட்டினால் தான் சாப்பிடுவார். ரொம்ப பேசமாட்டார். எப்போதாவது பேசுவார். சில நேரம் பேசுவது புரியாது. செய்யும் காரியங்கள் வினோதமாக இருக்கும். எப்போதுமே சித்தர்கள் இருக்கும் இடங்களில் அதிசயங்கள் நடந்து கொண்டே இருக்கும். புரிபவர்களுக்கு மட்டுமே புரியும். அவரவர் அனுபவத்தில் தான் விளங்கும். அவரை ஒரு தடவை சந்தித்தபோது பரணீதரன் மெதுவாக ''சுவாமி உங்கள் நாமம், எந்த ஊர் என்று சொல்லவேண்டும்'' என்கிறார். பூண்டி சாமியார் பதிலில் ஏதாவது புரிகிறதா என்று படியுங்கள்: '' அரிசி மில் கோவிந்தராஜ முதலியாருக்கு நான் தான் என்ன கெடுதி செஞ்சேன், அவன் தான் என்ன செஞ்சான். எல்லாம் அந்த காலம். நல்லது கேட்டது எல்லாம் இருக்கட்டுமே. ஒழுங்கு, குதிரை வண்டி, மோட்டார் வண்டி, நீதி நேர்மை, மதிப்பு மரியாதை, ... என்ன சொல்றே? ரோடு போட்டான். புர்ர்ர்ன்னு பஸ் ஓடிச்சு. பளிச்சுனு கர்ரன்ட். வெளிச்சம். கம்பம் நட்டாங்க. கோனேரிக்குப்பம், பில்லூரு , மேல்வைத்தியநாத குப்பம், .. வெள்ளிக்கிழமை சந்தை. கூட்டம் சேராதா? வாங்கறவன், விக்கிறவன், குழந்தை குட்டி குஞ்சு குடுவா ....எல்லாமே வரும் போகும். சரிதானே? அன்னமங்கலம், ஆதிமூலம், எர்ணா மங்கலம் சிவராமன்.. சுங்கம் வசூல் செய்ற டோல் கேட்... பணத்தை வாங்குவான் சீட்டு குடுப்பான். மறுநாளைக்கும் சீட்டு வாங்கணும். புரியுதா? தலையும் புரியாது, காலும் புரியாது சித்தர்கள் பேசுவது. அதற்கு எத்தனையோ உள்ளர்த்தம் உண்டு. கொஞ்சம் ஞானம் வேண்டும். சுவாமி அப்போ வெள்ளைக்காரங்க இருந்தார்களா? ஏன் மஞ்சுளா ஜப்பான் காரன் கூட தான். ''நீங்க பொறந்த ஊர்? ''அதெல்லாம் சொல்லமுடியாது போ'' சாமியாருக்கு தெரிந்தவர் தெரியாதவர், வேண்டியவர் வேண்டாதவர் என்று கிடையாது. சிலரிடம் பேசுவார். வணங்கிவிட்டு தாமே கிண்ணத்தில் விபூதி எடுத்து பூசிக்கொண்டு செல்வார்கள். சிலருக்கு தலை ஆட்டுவார். ''நல்லது போய்வா''என்று சிலரிடம். சிலர் தம் கஷ்டங்களை கொட்டுவார்கள். அமைதியாக கேட்பார். ஏதோ ஒரு பதில் சொல்வார். பழமொழி மாதிரி கூட இருக்கும். அர்த்தம் உன்னிப்பாக கவனித்து யோசித்தால் புரியலாம். ஒரு கிழவி தன்மகனின் ஊதாரித்தனத்தை முறையிட்டபோது, ''என்னம்மா பண்றது. கலிகாலம். ஒரு ரூபாயிலே 12 அணா செலவு பண்ணி நாலணா மிச்சம் பிடிக்கணும். மத்தவன் சொத்து வாணாம். ஒரு கரண்டி கூழோ கஞ்சியோ போதுமே. ''பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு '' காலுலே முள்ளு. யாரு எடுத்து விடுவா? கவனமாக இருந்த சௌகரியமா வாழலாம். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. அந்த பெண் ஏதோ குறுக்கிட.... கை நீட்டி அவளை அடக்குகிறார். பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும். சகவாசம் அப்படி என்ன பண்றது. முருங்கைக்காய் தோட்டத்திலே விளைஞ்சா வேலி போடலேன்னா காயைதிருடி வித்துடுவான்'' ஒரு வியாபாரி நண்பனோடு கூட்டு சேர்ந்து பெரிய வியாபாரம் செய்ய ஆசி கேட்கிறார். "ஒரு குடும்பத்திலே அப்பன் புள்ளை அண்ணன் தம்பியே பணம்னா சண்டை போட்டு கொல்றான்'. ஜாக்கிரதையா இரு.'' மீதியை அப்புறம் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...