Sunday, May 20, 2018

POONDI SAGE




சித்தர்கள்: 


                                                  பூண்டி சாமியார்..3

கிராமங்கள்  என்றாலே  அமைதிக்கு மறுபெயர் என்று சொல்வது வாஸ்தவம் தான்.  ஆனால் அங்கும் உள்ளூர்க்காரர்களுக்கு இடையே  உட்பூசல், அடிதடி, கலவரம் நடப்பதுண்டு. மனிதர்கள் என்றைக்கு  எல்லோரும் ஒற்றுமையாக இருந்தார்கள்?

ஒரு தடவை  பூண்டி கிராமத்தில் ஒரு சின்ன கலகம். ஊர் இரண்டாக பிரிந்தது.  எங்கோ எவனோ ஒரு பெரிய புள்ளியின்  கரும்பு தோட்டத்தில்  சாறு பிழியும்  சர்க்கரை செய்யும்   இயந்திரத்தை திருடி விட்டான்.  விஷயம்  உள்ளூர் போலீசுக்கு  போனது.  ஆயினும்  ஒன்றும் பயன் இல்லை.  நஷ்டப்பட்டவர்  பொன்னுசாமி நயினார்.  அவர் பிழைப்பு, வருமானம்  இதனால்  அடிபட்டது.  என்ன செய்வார்?  அந்த  நேரத்தில் தான்  தனது கவலையை, பூண்டி சாமியாரிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.    சாமியார் இருக்கும் இடம சென்றார்.  அவர் எதிரே கைகட்டி நின்றார்.  திருடுபோன  மெஷின் கிடைக்குமா என்று தெரியவில்லையே என்ற கவலை நெற்றியில்   கோடுகளாக எழுதி ஒட்டியிருந்தது.

''என்ன பொன்னுசாமி,  உன்  சாறு பிழையற சக்கரை  மிஷின்  ஜாக்கிரதையா தானே இருக்கு  ஏன் உனக்கு கவலை?   என்று  தானாகவே  சாமியார்  தன்னைப் பார்த்ததும்  சொன்னதும்  நயி னாருக்கு தூக்கி வாரி போட்டது.

''சாமி  என்ன சொல்றீங்க?''    --  நா  தழு தழுக்க  விழுந்து வணங்கினார்  நயினார்.

''நாஸரி தோப்புக்கு பக்கத்திலே  ஆத்தங்கரையில் நீ இன்னும்  தேடி  பார்க்கலியா? போய்ப்பார்''
நயினார்  ஆட்களோடு ஆயுதங்களோடு  அங்கே ஓடினார்.  ஆத்தங்கரை  மணலில் ஒரு  இடத்தில் ஏதோ ஒரு  ஆணி  மாதிரி  நீட்டிக்கொண்டிருந்தது.  அதை நோண்டி வெளியே எடுத்தபோது தான்  சர்க்கரை  மிஷின்  அங்கே  யாராலோ  புதைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.  திருடர்கள் சாமர்த்தியமாக அந்த இடத்தை தேர்வு செயது மிஷினை பள்ளம் தோண்டி புதைத்திருக்கிறார்கள். ஆனால்  சாமியாரின் ஞான  திருஷ்டி அதை கண்டு பிடித்து விட்டது. அன்றிலிருந்து தான்  நயினார்  பூண்டி சாமியார்  ஒரு  கடவுள் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

''ஒரு நாள் விடாமல் அவரை தரிசிப்பேன். பேசமாட்டேன். மௌனமாக  கை கட்டி நிற்பேன். என் மனதில்  அவரை வேண்டிக்கொண்டதெல்லாம் நிறைவேறும்.''  என்பார்  பொன்னுசாமி நயினார் 

''எங்க குடும்பத்திலே  ஒரு குழப்பம். எனக்கும் என் மவனுக்கும் மனஸ்தாபம்.  அவன்  எங்கூட தகராறு செஞ்சான்.   நான் பேசறதில்லை.  என்ன செய்வேன்.  சாமியார் கிட்டே போய் மனசிலே வேண்டிக்கிட்டேன். நான் சொன்னா  நம்பமாட்டீங்க.  அன்னைக்கு  ராத்திரி கனவிலே என் பிள்ளை கிட்டே சாமியார் என்ன சொன்னாருன்னு தெரியலே.  காலைலே  எழுந்து ஓடி வந்து  என் கிட்ட ''நைனா,  நான் செஞ்சது தப்பு.  சாமியார் எனக்கு புத்தி சொன்னாரு. நான் உங்க சொல் படி தான் நடப்பேன் என்று என் காலை தொட்டு கும்பிட்டான்.  எனக்கு எப்படி இருக்கும்?''

இந்த மாதிரி நிறைய  அதிசயங்கள்  அந்த கிராமத்தில் அண்டை அசல்  இடங்களில் கூட பூண்டி சாமியார் பற்றி அநேக தகவல்கள் சொல்லி இருக்கிறார்களாம். எல்லோர் மனத்திலும் சாமியார் பற்றி ஒரு உயர்ந்த பக்தி, நம்பிக்கை இருந்திருக்கிறது. எல்லோர் குடும்பத்திலும்  மரியாதைக்குரிய  மூத்தவர் சாமியார். அவர் வார்த்தை தட்ட மாட்டார்கள்

ஒரு  ராத்திரி  என்ன ஆயிற்று தெரியுமா?   யாரோ ஒருவன் தூக்கம் இல்லாமல் ஆத்தங்கரை பக்கம் நடந்திருக்கிறான்.  அங்கே சாமியார்  தலை ஒரு பக்கம், கை கால்கள்  துண்டு துண்டாக சிதறி கிடப்பதை பார்த்து அலறி அடித்துக்கொண்டு  ஊருக்குள் வந்து எல்லோரையும் எழுப்பி,  லாந்தர் விளக்கு, ஆயுதங்களுடன்  பலர்  ஆத்தங்கரை சென்று பார்த்தபோது   பூண்டி சாமியார்  மொட்டு போல  அங்கே உட்கார்ந்திருப்பதை கண்டார்கள். ஷீர்டி சாய்பாபா  இப்படி தன்னை செய் து கொள்வதை பலர் பார்த்திருக்கிறார்கள்.  விடோபா சுவாமி போளூரில் இப்படி இருந்திருக்கிறார்.  அது ஒரு வித அஷ்டாங்க  யோகம்.  சித்தர்கள் யோகிகள்  இவ்வாறு தம்மை பிரித்துக் கொள்வதுண்டு. சதாசிவ ப்ரம்மேந்த்ரரின்  ஒரு கையை ஒரு முஸ்லீம் வெட்டி அது கீழே  கிடந்தது அவருக்கு தெரியாது.  யாரோ அதை கொண்டு வந்து அவரிடம் கொடுக்க அதை ஏதோ தோளில்  துண்டை போட்டுக்கொள்வதை போல தனது  தோளில் வைத்தார் ஒட்டிக்கொண்டு கை  பழையபடி ஆகிவிட்டது. புலன்கள் அங்கங்கள்  சித்தர்கள்  சொற்படி நடக்கும். 

பூண்டி சாமியார்  யாரிடமும்  ஆகாரம் கொடு  என்று பிட்சை எடுத்ததில்லை.  தானாகவே  அவரைத்தேடி ஆகாரம் வேளாவேளை  வந்து சேரும்.  அப்படி ஒரு வேளை  ஆகாரம் இல்லை என்றால்  பசித்தபோது  அவர்  மண்ணையும்  கல்லையும்  உண்பதை பார்த்திருக்கிறார்கள்.

ஏற்கனவே  சொன்னபடி  பூண்டிக்கு அருகாமையில்  உள்ள கிராமங்களில் எங்கெல்லாம் சாமியார் நடமாட்டம் இருந்ததோ அங்கெல்லாம் அவரைத்  தெய்வமாக வழிபட்டார்கள். பூண்டிக்கு வடக்கே பராயப்பட்டு , மோட்டூர் ,நக்ஷத்ர கோயில் கிராமங்களில் எல்லாம் இன்றும் அவர் தெய்வம் தான். குழந்தையாகவும்  அவரை கொஞ்சுவார்கள். அவரை தரிசித்தாலே  கஷ்டங்கள் நிவர்த்தியாகும்.  அவர் கையால் ஒரு துளி விபூதி கிடைத்தால் போதும் அதை விட சிறந்த நோய் நிவாரணி கிடையாது என்பார்கள். அவர் விபூதி கொடுப்பது அபூர்வம்.   கேட்டாலும் அவர் கொடுக்கவில்லை என்றால் அதற்கும் ஏதாவது காரணம் இருக்கும்.  எப்படி முயற்சித்தாலும் கொடுக்கமாட்டார்.

ஊரில் பெரிய மனிதன் கொள்ளை பணக்காரன் ஒருவன்  சாமியாரிடம் விபூதி கேட்டான் நிறைய  பழங்கள், ஆடைகள், தின்பண்டங்கள்  கூடை கூடையாக கொண்டு வந்திருந்தான்.  சாமியார் அவனுக்கு கை நீட்டி  விபூதி கொடுக்கவில்லை. எவ்வளவோ கெஞ்சியும் கிண்ணத்தை காட்டி நீயே எடுத்துக்கோ என்று சொல்லி விட்டார்.  அவருக்கு பணம் பெரிதில்லை, ஏழை பணக்காரன் ஜாதி,  தெரிந்தவன்,  தெரியாதவன் என்ற   வித்யாசம் எதுவும் இல்லை. யார் தயவும் தேவை இல்லாத  தேவைகளே இல்லாத ஒரு யோகி.

அவரு   ஒரு  சாமி.  எப்போவும்  கண்ணை மூடி  ஆத்மாவில் த்யானம் பண்றவரு, எட்டு வகை சித்தி என்கிறார்களே அதெல்லாம் செய்ய தெரிஞ்சவரு.  பணத்தை தொடவே மாட்டாரு. கண்ணை பார்த்தாலே  உள்ளே  நமது மனசுலே இருக்கிறது தெரிஞ்சுக்குவாரு  என்று எல்லாம்  உள்ளூர் பக்தர்கள் நிறைய அவரைப் பற்றி பேசுவார்கள்.

இன்னும் அறிவோம். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...