Tuesday, May 29, 2018

GRASS




ஒரு புல்  பேசுகிறது -- J.K. SIVAN

எதிலும் நல்லதையே நினைப்பது,  நன்றாகவே நடந்தது என கருதுவது தான்  ஆங்கிலத்தில்  பாசிட்டிவ் திங்கிங்  என்று சொல்கிறோம் அல்லவா.  இது எல்லோருக்கும் மிக அவசியம். துயரத்தை, துன்பத்தை, ஏமாற்றத்தை தவிர்க்கும் எளிய  காசில்லாத சாதனம். இருக்கும் காலத்தை,  அதுவும்  குறுகிய  உலக வாழ்வை இன்ப மயமாக்கும்.  இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும் என்றாலும் மனிதர்களுக்கு மட்டும் ஏன் உபதேசம் செயகிறோம் தெரியுமா? . மற்ற ஜீவராசிகள் அழுவதில்லை, வெளியே சொல்லி ஏங்குவதில்லை, பொறாமைப் படுவதில்லை.  மௌனமாக இறைவன் விட்ட வழி என்று சந்தோஷமாக காலத்தை கழிக்கின்றன. எதிர்ப்பதில்லை, பேசுவதில்லை, ஏசுவதில்லை.

உதாரணமாக  ஒரு புல் என்ன நினைக்கிறது என்று யோசிப்போம். ரொம்ப அல்பமாக நாம் உதாரணம் காட்டுவது புல்லைத் தானே. அதையே எடுத்துக்காட்டாக கொள்வோம்.

''நான் பாக்ய சாலி, என்னைப்போல் எத்தனை பேர்  இங்கே, அப்பப்பா,   பச்சை பசேல் என்று. கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது என்று எங்களை தானே சொல்கிறார்கள்.  பெரிய பணக்காரர்கள் வீட்டில் எங்களை வளர்க்கிறார்கள் காசு கொடுத்து வாங்கி... இன்னும் என்ன! கிருஷ்ணா,  உனக்கு நன்றி எங்களை படைத்ததற்கு.

புல் இப்படி பெருமைப்பட்டுக்கொண்டிருக்கும்போது நறுக்கென்று ஏதோ பல் அதன் மேல் பட்டது.  ஓஹோ  ஒரு பசு வந்து அதை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறதோ. ஓஹோ  இப்படி ஒரு நிலையா என்ன செய்வது என்று நினைக்கும் முன்பே  பசு அதை அரைத்து நின்றுவிட்டது.  அது நினைவை இழந்து அடையாளம் இன்றி மாவாகி கூழாகி பசுவில் வயிற்றில் பாலாகியது. புல் மீண்டும் நினைவு பெற்று தன்னைஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டு சிரித்தது.  பச்சையாக இருந்த நான் ஒரு பாத்திரத்தில் வெள்ளை திரவமா?  பால் என்று பெயரா எனக்கு??எனக்கு முன்பை விட மரியாதை மதிப்பு கூடி இருக்கிறதே.  பரவாயில்லையே .!

அதை காய்ச்சினார்கள் சூடு பொறுத்துக் கொண்டது. வெள்ளையாக கெட்டியாக ஏதோ திரவம் அதோடு கலந்து அமைதியாக சிறிது நேரம் கழிந்தது.  புல் பாலாகி இப்போது அதன் பெயர்  தயிர்.  என்னை சுடவைக்கவில்லை இப்போது. சந்தோஷம் தான். எனக்கு ஏன் ஒரு மணம் இப்போது. உறைந்து போயிருக்கிறேன்.   மத்தினால்  தயிரை கடைந்தார்கள். அந்த ஆட்டம் அதற்கு பிடித்தது.  சிறிது திரவமாக  மோராக மாறியது, கெட்டியாக வாசனை மிக்க வெண்ணையாக பாதி மாறியது .  எனக்கு ரெண்டு உருவமா இப்போது? .  என்னை விரும்புகிறார்கள் அதிகம் இப்போது என்று பெருமைப் பட்டது.  எந்த மனிதன் நான் புல்லாக இருந்தபோது இகழ்ந்தானோ அவன் என்னை மோராக குடித்து  புகழ்கிறான். வெண்ணையாக பார்த்து மதிக்கிறான்.  ஓஹோ இன்னும் என்ன வேடிக்கை நடக்கிறது இங்கே எனக்கு  என பார்க்கிறேன்.

இனி என்னை நெருப்பில் வாட்டமாட்டார்கள் என்று நான் சொல்லி வாய் மூடவில்லை, ஒரு பாத்திரத்தில் நான் சூடாக கரைகிறேன். இனி நான் வெண்ணை இல்லை. என் பெயர் இனி வாசமுள்ள  நெய் .  என் மதிப்பும் உயர்ந்து விட்டது.

எங்கோ எடுத்துச் சொல்கிறார்கள்.  பல மலைப்பாதைகள் நான் அய்யப்பன் சந்நிதியில் இப்போது.   மிக்க பக்தியோடு என்னை  தலையில் அல்லவா சுமந்து போகிறார்கள்.  காட்டுப்பாதை முடிந்து அய்யப்பனுக்கு இப்போது அபிஷேகமாகி விட்டேன். ஐயனை சேர்ந்து விட்டேன். நான் இதை விட என்ன பாக்யம் செயது இருக்க முடியும். இனி நான் புல் அல்ல.  ஐயப்ப பிரசாதம். துளி துளி எல்லோரும் பக்தியோடு வாங்கி விழுங்குகிறார்கள்.

மனிதர்களே !  நீங்கள்  வாடுவது வீண். புரிந்து கொள்ளுங்கள்.  வாழ்க்கை என்பது ஒரு இன்பமான புனிதமான அனுபவம்.  சுகம் துக்கம் எல்லாம் கலந்தது. அப்படித்தான் இருக்கவேண்டும். வெயிலின் அருமை நிழலில்.  வளமையின் அருமை  வறட்சியில்.
.
எல்லாமே இறைவனை சேரும் வரையில் சகஜம்.  துன்பமே  இறைவனின் அருள் தான்.  குந்தியை கேளுங்கள் கதை கதையாக சொல்வாள்.  ஸ்புடம் போட்டால் தான் தங்கத்துக்கு  ஜொலிப்பு.  என்ன சொல்கிறாய் கிருஷ்ணா  உன்னை, உன் லீலையை பற்றி சரியாகத்தான் சொன்னேன்  என்றது புல்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...