Friday, May 25, 2018

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்   J.K. SIVAN
                                                 
                                           
                       

 35     வசிஷ்டர் கதை

அர்ஜுனன் பயம் அறியாதவன்.  தன்னை  கங்கைக் கரையைக் கடக்க முடியாதபடி தடுத்த  கந்தர்வனை  எளிதில் வென்று அவன் மூலம் வசிஷ்டரைப் பற்றி  அறிவதை  வைசம்பாயனர் ஜனமேஜயனுக்கு  எடுத்துரைப்பதை   நாமும்  காதை நீட்டிக்கொண்டு கேட்போமா?


''ஜனமேஜயா,  வசிஷ்டர்  ரிஷிகளில்  முதன்மையானவர். பிராமணர், பிரம்மரிஷி என்று போற்றப்பட்டவர்.  

''முனி சிரேஷ்டரே,  வசிஷ்டருக்கும் விஸ்வாமித்ரருக்கும்  எப்படி  எதனால்  ஒரு  எதிர்ப்பு நேர்ந்தது என்பதை நீங்கள் எனக்கு சொல்லவேண்டும். ?''

''சொல்கிறேன் கேள் ஜனமேஜயா.   கன்யாகுப்ஜத்தில்  கெளசிகன் என்பவன் ராஜா. அவனுடைய மகன் விஸ்வாமித்திரன். வேட்டையாடுவதில் விருப்பமான இளவரசன்.

 விஸ்வாமித்திரன்  ஒருநாள்  ஒரு காட்டில்  களைத்துப் போனவன்  தாகத்திற்கு  தண்ணீர் தேடி அலைந்தான்.  அந்த காட்டில் வசிஷ்டர் ஆஸ்ரமம் இருந்தது.  அங்கே சென்றதும்  வசிஷ்டர்  விஸ்வமித்ரனை வரவேற்று,  உபசரித்து, நீர்,கனிவகைகள்  நிறைய அளிக்கிறார்.   

 வசிஷ்டரிடம் ஒரு தெய்வீகமான  அதிசயப்  பசு. அது யார்  எதைக் கேட்டாலும் தரும். நந்தினி என்று அதற்குப் பெயர்.

விஸ்வாமித்திரன், அவனுடைய  சேனை அனைத்திற்கும் பசி  தீர்க்க,  வசிஷ்டர்  '''நந்தினி அம்மா,  நீ  இவர்கள்  அனைவருக்கும் அவர்களுக்கு விருப்பமான  உணவு, பானம்  அளிப்பாயாக''  என்று  சொன்ன மறு கணமே  ஏராளமாக  உணவு இனிய  பான வகைகள்  தயாராயின.  அனைவரும் வயிறார  உண்டு  பசி தீர்ந்தனர்.

விஸ்வாமித்திரன் திகைத்துப் போனான்.'' இப்படி ஒரு பசுவா?''   நந்தினியின் மேல் அவன் ஆசை விழுந்து விட்டது.

''பிராமண  ரிஷியே ,  நீர்  இந்த காட்டில்  தனியாக  உள்ளீர்.  உம்மிடம் உள்ள  இந்த பசு  எனக்கு வேண்டுமே.  நான் இப்போதே  10000 தங்க கட்டிகள் தருகிறேன், என் ராஜ்யத்தையே வேண்டுமானாலும் தருகிறேன் எனக்கு இந்த நந்தினியை நீங்கள் தரவேண்டும் '' என்று கேட்டான் விஸ்வாமித்திரன்.

''விஸ்வாமித்ரா,  இந்தப்  பசு, தேவர்களுக்கு, பித்ருகளுக்கு, அதிதிகளுக்கு உபசாரம் செய்ய, மற்றும் எனது ஹோம யாகங்களுக்கு உதவ மட்டுமே என்னிடம் இருக்கிறது. இதை மற்றவர்களுக்கு    எந்த காரணத்துக்காகவும் தர இயலாது.''

''வசிஷ்டரே,  நான் விஸ்வாமித்திரன்.  இந்த காட்டையும் அதில் உள்ள உங்களையும்  சொந்தமாக  கொண்ட  அரசன். சர்வ  சக்தி வாய்ந்தவன்.  நான் விரும்பியது எதுவும் நிறைவேறும். நந்தினியை தரவில்லையானால், நானே  எடுத்துக் கொள்வேன், எதுவும் என்னை தடை செய்ய முடியாது.  புரிந்துகொண்டு நீங்களாகவே நந்தினியை எனக்கு அளிப்பது உசிதம்''

''கௌசிகா, நான்  என்ன சொல்வது.   நீ  சக்தி வாய்ந்த அரசன் என்கிறாய். இந்த காட்டு அதில் உள்ள எல்லாமே உனக்கு சொந்தம் என்கிறாய்.  நான்  சொன்னதைக் கேளாமல் பிடிவாதமாக நீ நந்தினியைக் கைப்பற்றுவேன் என்கிறாயே, சரி, உன் விருப்பப்படியே  நீ  நந்தினியை  எடுத்துச் செல்''

''வீரர்களே  இந்தப் பசுவையும்  அதன் கன்றையும்  பிடித்து  எடுத்துக்கொண்டு வாருங்கள்  நாம்  செல்லலாம்.''

தன்னை நெருங்கி சேனையைச் சேர்ந்தவர்கள்  வருவதை நந்தினி பார்த்தது.  நந்தினிக்கு வசிஷ்டரை விட்டு அகல விருப்பமில்லை. அவரை நோக்கி அலறியது.

''என்னை வலுக்கட்டாயமாக இழுக்கிறார்களே,பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே''

 ''அம்மா  நந்தினி, உன் எண்ணம் தெரிகிறது. அரசன் க்ஷத்ரிய பலத்தை காட்டுகிறான். நான்  பிரம்மத்தையும் அன்பையும் உபாசிக்கிறவன். நான் உன்னைப் போகச் சொல்லவில்லையே. நீ  என்னுடனே இரு.  நீ  விரும்பினால் விஸ்வாமித்ரனிடம் செல்''

நந்தினி காதை உயர்த்தியது. கண்கள் சிவந்தது. அருகே தனது கன்றை நெருங்கியவர்களைபார்த்து  உடல் சிலிர்த்தது. வால் முறுக்கேறியது. உஷ்ணமாக கோப மூச்சு வெளியேறியது. கண் இமைக்கும் நேரத்தில்  விஸ்வாமித்திரன் சேனையை எதிர்த்தது. வால் நுனியிலிருந்து தஹிக்கும் நெருப்பு துண்டங்கள் பெருகி வெடித்தன. விஸ்வாமித்திரன் சேனை சிதறி அழிந்தது.  நந்தினியின்  உடல் ரோமங்களிலிருந்து  கந்தர்வர்கள்,வானவர்கள், தேவர்கள், பலர் ஆயுதங்களோடு தோன்றினார்கள். விச்வாமித்ரனையும் அவன் சேனையையும்  தாக்கினார்கள்.  உயிர் தப்பி விஸ்வாமித்திரன் வீரர்கள் ஓடினார்கள். நந்தினி ஒருவரையும் கொல்லவில்லை. அவர்களை 27 மைல் தூரம் விரட்டியது.

விஸ்வாமித்திரன் தெளிந்தான். தனது க்ஷத்ரிய பலம்,   வசிஷ்டரின் தவம், பிரம்ம சக்திக்கு முன் ஒன்றுமே இல்லை. இனி நானும் தவ வலிமை பெறுவேன்''  என தீர்மானித்தான். ராஜ்ஜியம் துறந்தான். கடும் தவம் புரிந்தான். இந்தரனுக்கு சமானமானான்.

கந்தர்வன்  மேலும்  அர்ஜுனனுக்கு ஒரு கதை சொன்னான்.   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...