Tuesday, May 22, 2018

POONDI SWAMIJI




சித்தர்கள்: J.K. SIVAN

பூண்டி சாமியார். 4

பூண்டி சாமியார் கட்டுரைகள் நிறைய பேர் கவனத்தை கவர்கிறது என்பதில் எனக்கு சந்தோஷம். நான் எழுதியதற்காக இல்லை. ஒரு மஹானை இதுவரையில் தெரிந்திராதவர்கள் இப்போது அறிந்து கொள்கிறார்களே என்று. சிலர் அவர் இன்னும் இருக்கிறாரா?, என்ன வயசு, எங்கே பார்க்கலாம் என்றும், பூண்டி எங்கே இருக்கிறது, எப்படி போவது என்றும் நிறைய நண்பர்கள் என்னை வழி கேட்கிறார்கள். நல்லது. பூண்டி சாமியார் பல வருஷங்களுக்கு முன்பு இருந்தவர். இப்போது இல்லை, பூண்டி சாமியார் இருந்த ஊர் கலசப்பாக்கம். அது போளூர் தாலுக்கா, திருவண்ணாமலை ஜில்லா,திருவண்ணா
மலையில் இருந்து 30 கி.மீ தூரத்தில் செய்யாறு பக்கத்தில் இருக்கிறது. அங்கே அவரது அதிஷ்டானம் இருக்கிறது.

பூண்டி சாமியார் இருந்த காலத்தில், ஒரு தடவை வடக்கே, பத்திரிநாத், ஹிமாச்சலத்திலிருந்து ஒரு இளம் சாமியார் வந்து அவரை வழிபட்டார். நன்றாக ஆங்கிலம் அறிந்த அவர் முகத்தில் ஜெப தப அனுஷ்டான தேஜஸ் ஜொலித்தது. கார்த்திகை தீப தரிசனம் காண வந்தவர். திருவண்ணாமலை மேலே ஏறி தீப தர்சனம் கண்டவர். மலைமேல் வடக்கே இருந்து ஒரு பளிச் என்று ஒரு வெளிச்சம் தெரிந்ததைப் பார்த்து வியந்தார். அது என்ன என்று அறிவதற்கு நடந்தார், அது அவரை பூண்டியில் கொண்டு விட்டது. அந்த வெளிச்சம் தான் பூண்டி சாமியார் என்று அறிந்து மகிழ்ந்த அவர் அங்கே சில நாள் தங்கினார்.

"அதற்கப்புறம் மூன்று நாலு தடவை வந்துவிட்டேன். நான் எங்கே சென்றாலும் பூண்டி சாமியார் என்னை இங்கே ஈர்த்து விடுகிறார். அவரைப்போல் இன்னொரு மஹானை நான் இன்னும் பார்க்கவில்லை. நானும் எங்கெல்லாமோ சுற்றி அலைந்தவன். பல யோகிகளை சந்தித்தவன். தவ சக்தியின் மஹிமை நிறைந்த ஒரு அமானுஷ்ய ஆன்மீக சக்தி அவரிடமிருந்து என்னை ஆக்கிரமித்ததை உணர்ந்தேன்'' என்றார் அந்த இளம் சாது.

சாமியார் யோகத்தில் இருப்பது பார்ப்போருக்கு வேடிக்கையாக இருக்கும். கண் மூடி இருக்கும். புருவம் உயர்ந்து இறங்கி புழு போல் நெளியும். பற்களை இறுக கடித்துக்கொண்டு இருப்பார். தலை அங்கும் இங்குமாக ஆடும். முகம் அஷ்ட கோணலாக இப்படி இருப்பது எதனால் என்று யாருக்கும் தெரியாது. புரியாது. எதையெல்லாம் கஷ்டப்பட்டு அடக்குகிறாரோ? அப்போது யாருடனும் பேசமாட்டார். சில சமயங்களில் இந்த யோகம் நீண்ட நேரமாக தொடர்ந்திருக்கும். எப்போது இது முடிந்து பழைய நிலைக்கு வருவார்? எதிரே கூரை கொட்டகையில் எல்லோரும் காத்திருப்பார்கள். நாலைந்து மணி நேரம் கழிந்தும் கூட சில வேளைகளில் கண் விழித்து பார்ப்பார்.

ஒருமுறை வெளியூரிலிருந்து வந்து சாமியாரை தரிசிக்க காத்திருந்தவர்களிடம் அங்கே வழக்கமாக சேவை செய்யும் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் ''நீங்கள் ரொம்ப நேரமாக காத்திருக்கிறீர்களா? சாமியாரிடம் மனம் விட்டு ஏதாவது கேட்க வந்திருக்கலாம். ஆனால் அவர் இப்போதைக்கு கண்திறந்து பேசுவார் என்று தோன்றவில்லை. ரெண்டுநாளாக இப்படியே தான் யோகத்தில் இருக்கிறார். கண் திறந்து யாரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. அநேகர் காத்திருந்து திரும்பி போய் விட்டார்
கள். காத்திருக்க முடிந்தால் நீங்கள் காத்திருக்கலாம்'' என்று சொன்னார்.

இப்படி காத்திருந்த பரணீதரன் ஒரு முறை சாமியார் யோக சமாதியிலிருந்து திரும்புவதற்கு முன்பே சாமியார் அமர்ந்திருந்த திண்ணைக்கு சென்றார். மெதுவாக அவர் அருகே சென்று வணங்கி விட்டு அவர் காதில் விழும்படியாக ஒரு வாசகம் கூறினார்.

''சுவாமி, நேற்று எனக்கு ஒரு கனவிலே காஞ்சி சங்கராசாரியார் தோன்றி பூண்டி சாமியாரை பற்றி நிறைய எழுது என்று உத்தரவிட்டார். அதனால் தான் இங்கே உடனே ஓடி வந்தேன்''

'காஞ்சி சங்கராச்சார்யர் '' என்ற வார்த்தை மந்திரம் போல் சாமியார் காதுக்குள் நுழைந்து அவர் உடனே கண் விழித்து பரணீதரனை உற்றுப்பார்த்தார்.

''சுவாமி ஏற்கனவே உங்களை பற்றி நிறைய விவரங்கள் சேகரித்து எழுதி விட்டேன். நீங்களும் ஏதாவது சொல்வீர்களானால் அது என் பாக்யம்.''

''எழுதப்போறியா , எழுதேன் , நிறைய எழுதேன்''. குழந்தை போல் ஒரு உற்சாகம் அவர் முகத்தில் தோன்றியது.

பரணீதரன் தொடர்ந்து பேசினார்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...