Friday, May 11, 2018

NADATHOOR AMMAL

ஒரு சிம்ஹாசனாதிபதி கதை ​- J.K. SIVAN

ஸ்ரீ நடாதூர் அம்மாள்

சிவன் சார், நீங்கள் வைஷ்ணவ மகான்களை, ஆச்சார்யர்களைபற்றியும் எழுதுங்களேன் என்று ஒரு வாசக நண்பர், மிக வயதான ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கேட்டுக்கொண்டார்.

யாரைப் பற்றி எழுதவேண்டும் என்றபோது அவர் என்னிடம் அறிவித்த ஒரு அருமையான பெயர் ''நடாதூர் அம்மாள்''. எனவே இந்த கட்டுரை.

ஸ்ரீ நடாதூர் அம்மாள் என்று சொல்லும்போது யாரோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவ பெண் திலகத்தைப் பற்றியது என்று நீங்கள் நினைத்தீர்களானால் நீங்களும் என்னைப் போலவே தான் முழு விவரமும் அறியவில்லை என்று ஆகும். உண்மையில் அவர் ஒரு வைஷ்ணவ ஆசார்யன். அவர் ஏன் அம்மாள் என்று அழைக்கப்பட்டார், எதற்கு இன்றும் போற்றப் படுகிறார் என்பதை இந்த கட்டுரை மூலம் நீங்களும் அறியலாம். நான் அறிந்ததை உங்களோடு பகிர்வது எனது பாக்கியம் என்பேன்.

ஸ்ரீ ராமானுஜரின் பிரதம சிஷ்யர், கூரத்தாழ்வானுக்கு ஒரு பிள்ளை. மஹா தயா தேசன் என்றும் மகா கருணீகர் என்றும் பெயர் கொண்டவர். அவர் ஸ்ரீ ராமானுஜரின் இளைய சகோதரி​ கமலாம்பாவை மணந்தார். இந்த மகா தயா தேசன் தான் நடாதூர் அக்ரஹாரத்தை ஸ்தாபித்தவர். ​சம்ஸ்க்ருதத்தில் நடம் என்றால் தாமரை மலர். தாமரை என்றாலே எந்த ஸ்ரீ வைஷ்ணவரும் பெருமாளின் திருவடியைத் தானே நினைக்கிறார் .​ அதுவே நினைவாக மனதில் நிரம்பி வேறு எதையும் நாடாத அவர்கள் ஊரும் நாடாதார் ஊர் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் காலம் எல்லாவற்றையும் மாற்றுவது போல் நாடாதார் நாடாதூர் ஆகியதாக ஒரு வழக்கு.​

​மகா தயா ​​ தேசனின் மகன் வரத விஷ்ணு​ என்கிற சுதர்சனர்​ தான் நடாதூர் ஆழ்வான். ஸ்ரீ ராமானுஜருக்கு ஸ்ரீ பாஷ்யம் எழுதுவதற்கு உதவியாக இருந்தவர். ​கூரத்தாழ்வானைப் போலவே நடாதூர் ஆழ்வானும் தனது ஆசார்யன் ஸ்ரீ ராமானுஜரின் அணுக்க தொண்டர். ராமானுஜரின் மதிப்பை பெற்று அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்ரீ பாஷ்யம் வியாக்யானம் எழுதும்படியாக பணிக்கப்பட்டவர். ஸ்ரீ ராமானுஜரால் சொல்லப்பட்ட பிரம்மசூத்திர சித்தாந்தங்களை ஓலைச்சுவடிகளில் எழுதியவர்​. ஸ்ரீ பகவத் ராமானுஜர் நடாதூர் ஆழ்வானை ''ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனாதிபதி '' என்று கௌரவித்தார் என்றால் அவர் எவ்வளவு விஷயஞானம் உள்ளவர் என்பது புரியும்.
நடாதூர் ஆழ்வானின் மகன் தேவராஜாசாரியார் என்கிற தேவ சூரி​. ​ ஸ்ரீ பாஷ்யம் பிரசங்கத்தில் புகழ் பெற்று கதக கேசரி என்ற பட்டம் பெற்றவர். அவர் மனைவி பெயர் லக்ஷ்மி அம்மாள். வெகுகாலம் இவர்களுக்கு புத்ர ப்ராப்தி இல்லை. தாயார் பெருமாளிடம் சொல்லி அவருக்கு புத்ரப் ப்ராப்தி உண்டானது என்பார்கள்.

அப்படி பிறந்த குழந்தைக்கு தங்கள் கோத்ரம் பெயருடன் காஞ்சி பெருமாளின் பெயரையும் சேர்த்து ஸ்ரீவத்ச வரதன், வரத குரு, என்று நாமகரணம் செய்தனர். இவரே பிற்காலத்தில் நடாதூர் அம்மாள். ​ஒரு தாயைப்போல ​அவர் வரதராஜனை போஷித்து வழிபட்டவர். ''யானைக்​ ​கூட்டத்திலே அவர் ஒரு சிம்மமாக திகழ்ந்தவர்'' என்று ஸ்ரீ பாஷ்யம் உரைக்கிறது. காஞ்சி வரதராஜ பெருமாளை பேரருளாள பெருமாளே என மனம் நிறைந்து வேண்டி, நின் திருவடிகளே சரணம் என்று தன்னை அவனுக்கு அர்ப்பணித்துக்கொண்டவர்​.

நடாதூர் அம்மாள் சுவாமி 1165​ ​கி.பி. யில் பிறந்தவர் என்று சொல்வதுண்டு. இதற்கு இணையான தமிழ் வருஷம் பார்திவ ஆண்டு. தந்தையைப் போலவே மகன் கல்வி கேள்வியில் தேர்ச்சி பெற்றார். பாட்டன் ஸ்ரீ நடாதூர் ஆழ்வானிடமே ஸ்ரீ பாஷ்யம் கற்க ஏற்பாடாயிற்று. ​ வரத குருவுக்கு வரதராஜனின் மேல் தான் அலாதி பக்தியும், பாசமும் உண்டே.

ஒரு நல்ல நாள் பார்த்து நடாதூர் ஆழ்வான் பேரன் வரத குருவுக்கு ''அகில புவன'' என்று உபதேசம் ஆரம்பித்தார்.

''அப்பா, தாத்தா , ஏன் எம்பெருமானார் ''அகில'' என்று ஆரம்பித்தார். ''சகல'' ''நிகில'' என்பவையும் அதே அர்த்தம் தானே கொடுக்கிறது?''

​''மகனே, உடையவருக்கு தெரியாததா? ''அ'' தானே முதல் உயிர் எழுத்து. ஸ்ரீ நாராயண தேவராஜன் எல்லா உயிர்களையும் காப்பவன் மேலும் அவன் ​முழு முதற் கடவுள் என்பதால் உடையவர் உயிர் எழுத்தில் முதலாவதை ப்ரயோகம் செய்திருக்கலாம்.''

மகனின் அறிவுப் பசி அப்பாவுக்கு தெரிந்து விட்டது. தாத்தா நடாதூர் ஆழ்வானுக்கோ விருத்தாப்யம் நெருங்கிவிட்டது. எனவே மகனை திருவெள்ளறை எங்களாழ்வானிடம் கல்வி பெற அனுப்பினார்.

ஒருநாள் இரவு, பெருமாளை சந்தோஷமாக ஆத்மார்த்தமாக ஸ்லோகம் சொல்லி வழிபட்டுக் கொண்டிருக்கும்போது ஆலய பட்டாச்சார்யர் சுடச்சுட பால் கொண்டுவந்து பெருமாளுக்கு நைவேத்யம் செய்ததைப் பார்த்துவிட்டு திகைத்துபோனார் அம்மாள்.

''இவ்வளவு சூடான பாலை பருகினால் என் வரதனின் மருதுவான இளம் நாக்கையும் அதரத்தையும் அது புண்ணாக்கி விடுமே '' என்று அஞ்சி ''நிறுத்து'' என்று பட்டாசார்யாரை கடிந்தார்.

பிறகு சூடான அந்த பாலை விசிறி ஆற்றி உஷ்ணம் சற்று குறைந்தபிறகு திரு ஆராதனை செய்தார். பெருமாளுக்கு வரதனின் வாத்சல்யம் மிக்க மகிழ்ச்சி அளித்ததால் அவரை தாயாக கருதி ''என் அம்மா'' என்று அழைத்தார். அன்று முதல் வரதகுரு நடாதூர் என்ற ஊர் பெயருடன் ''அம்மாள்'' என்ற பெருமாள் அளித்த சொல்லோடு நடாதூர் அம்மாள் என்றே பெயர் பெற்றார். இன்றும் அப்பெயரில் விளங்குகிறார். ​​​ஒரு தாயைப்போல ​அவர் காஞ்சி வரதராஜனை போஷித்து வழிபட்டவர்.

நடாதூர் அம்மாள் காஞ்சி வரதராஜ பெருமாளை பேரருளாள பெருமாளே என மனம் நிறைந்து வேண்டி, நின் திருவடிகளே சரணம் என்று தன்னை அவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...