Wednesday, May 23, 2018

NOSTALGIA



ஒரு கனாக்காலம் - J.K. SIVAN

இப்போது கோடம்பாக்கம், வடபழனி ஆற்காட் ரோடு சென்றால் ரொம்ப பயமாக இருக்கிறது. விர்ரென்று தலை தெறிக்க ஓடும் வேகமான வாகனங்கள், தெருவை அடைத்துக்கொண்டு பலரக ஊர்திகள், சாலையின் இரு மருங்கிலும் மேகத்தை தொடும் உயர்ந்த நெரிசல் கட்டிடங்கள். வண்ண வண்ணமாக எத்தனையோ விளம்பர பலகைகள், தெரு ஓரத்தில் நடக்க முடியாத இடைஞ்சல்கள், ஜனக்கூட்டம். நடக்க ஆளே இல்லை. எல்லோரும் பறக்கிறார்கள்.

நான் வளர்ந்த கோடம்பாக்கமா இது? அப்போது கோடம்பாக்கத்தில் அப்போது ரோடு கிடையாது. எங்கும் மண் வீதிகள். வீடுகள் குடிசைகள் எல்லாமே பழுப்பு நிறத்தால் வர்ணம் பூசப்பட்டது போல் புழுதி படர்ந்திருக்கும். எங்குமே மரங்கள், செடிகள், புதர்கள். அதிகம் வீடுகள் கிடையாது. ஆகாயத்தின் கீழே ஒதுக்குபுறமாக செடி, மரங்களின் மறைவில் தான் எல்லோருக்கும் ஓபன் கழிவறை இருந்த காலம். பன்றிகள் நாய்கள் எங்கும் ஓடும் குடும்பசகிதமாக. கழுதைகள் கண்ணில் படும். இப்போது நமது குழந்திகள் கழுதையை பார்க்க வண்டலூர் மிருக காட்சி சாலை போனால் அங்கே இருக்குமோ என்னவோ?

ஆற்காடு ரோடு தான் நீண்ட பெரிய சாலை. சலங்கை கழுத்தில் கட்டிய குதிரைகள் வண்டி தான் போக்குவரத்து.சாதனம். சலங்கை ஒலி தான் வண்டி வருகிறது என்று தெரிவிக்கும் ஹார்ன். ரொம்ப வசதி படைத்தவர்கள் என்று எண்ணப்பட்டவர்கள் சைக்கிளில் செல்வார்கள். எங்கள் வீட்டில் யாரிடமும் சைக்கிள் கிடையாது.

மாட்டு வண்டிகள் அதிகம். இப்போதிருக்கும் ராம் தியேட்டர் அருகே இருந்து சைதாப்பேட்டை பரங்கிமலை போக ஒரு பாதை. அருகே வேங்கீஸ்வரன் கோவில் தனியாக நிற்கும். அதில் தான் பரங்கி மலையிலிருந்து ராணுவ வீரர்கள் சேர்ந்து கூட்டமாக நடை பழகுவார்கள். இப்போதைய அந்த புழுதி தெரு 100FEET ரோடு ஆகிவிட்டது. நேராக பரங்கிமலை மிலிட்டரி பகுதி வரை போகும். வழியில் கூவம் ஆறு குறுக்கிடும். அவர்கள் நடப்பது எங்களுக்கு அதிசயமும் ஆச்சர்யமும் தரும். காலையில் ''கவாத்து'' (MILITARY EXERCISE) என்று சொல்வார்கள். ரெண்டாம் உலக மஹா யுத்த காலம். வெள்ளைக்கார சிப்பாய்கள் சதா யுத்தத்துக்கு தயாராக இருந்த நேரம்.

நாங்கள் குடியிருந்த சமரபுரி முதலியார் வீட்டு வாசல் சிமெண்ட் சுண்ணாம்பு சாய்வு திண்ணையில் ஏறி அமர்ந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்ப்போம். எங்கள் வீட்டை ஒட்டி தெரு. வீட்டுக்கும் தெருவுக்கும் கை எட்டிய தூரத்தில் ஒரு இரும்பு கம்பம். அதில் ஒரு கூண்டு விளக்கு. சாயந்திரம் ஒருவன் சைக்கிளில் வருவான். அதில் எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றுவான். சில சமயம் ஒரு சிறு ஏணியை தோளில் சுமந்து வருவான். சாயந்திரம் ஒவ்வொரு விளக்காக எண்ணை திரி எல்லாம் சரி செயது விட்டு கண்ணாடி கூண்டு கதவை காற்று வராமல் மூடிவிட்டு செல்வான் ஒருவன்.

'' என்னடா பண்றே இங்கே ?'' என்று அவன் கேட்பது எனக்கு பெரிய பெருமையாக நினைத்தேன். பதில் பேசாமல் உள்ளே ஓடிவிடுவேன். ஐந்து வயதில் வேறு என்ன செயதிருப்பேன்?

எதிரே வேங்கீஸ்வரன் ஆலய வாகன மண்டபம். மேலே ஷீட் போட்டு ஜன்னல் இல்லாத ஒரு கிடங்கு போல் இருக்கும். கதவை திறந்து வைக்கும் ஆள் வரும்போது அவனோடு ஓடிப்போய் உள்ளே பார்த்திருக்கிறேன். பெரிய ரிஷபம் பெரிய விழிகளோடு நாக்கை மூக்குக்குள் நுழைத்துக்கொண்டு மேல் பல்கலைக் காட்டிக் கொண்டு நிற்கும். கொழுத்த ரிஷபம். வெள்ளை கலர்.
சின்ன சின்னதாக ரெண்டு மூன்று பல்லக்குகள், மூஷிக வாஹனம், மயில் வாகனம் எல்லாம் இருக்கும். காற்று இல்லததால் வாகனங்கள் மீது பாசிய வர்ண நெடி மூக்கை துளைத்து மூச்சை அடைக்கும்.

ஒருமுறை பெயிண்டர் ஒருவர் சற்று அசந்து போயிருக்கும்போது , அல்லது பீடி குடிக்க வெளியே சென்றிருந்தாரோ? நானே ப்ரஷில் பெயிண்ட் தோய்த்து ரிஷப வயிற்றில் வேறு கலர் அடித்து விட்டேன். திரும்பி வந்து அவர் சத்தம் போட்டார். அப்போது ஓடியவன் இப்போது வரை அவரை பார்க்கவில்லை.

இப்போது நினைனைத்தால் சிரிப்பு வருகிறது. கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து அடுத்த ஸ்டேஷன் சேட்டு பட்டு தான். நுங்கம்பாக்கம் கிடையகாது. லயலா காலேஜ் சுவர் தாண்டி குதித்து அந்த பக்கம் நுங்கம்பாக்கம் பள்ளிக்கூடம் செல்லவேண்டும். வழியில் தண்டவாளத்தில் காதை வைத்து ரயில் சத்தம் வருகிறதா என்று நாங்கள் பார்த்திருக்கிறோம். கண்ணுக்கெட்டிய வரை ரயில் வராத போது தான்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...